புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

பரபரப்பான போட்டியில் நியூசிலாந்து வெற்றி: இலங்கையின் முயற்சி வீண்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மெத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.இதன்படி இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்களாக குசல் பெரேராவும், டிpல்ஷனும் களம் புகுந்தனர்
. மில்ஸ் வீசிய முதல் பந்திலேயே குசல் பெரேரா ஆட்டம் இழந்தார். அவர் கொடுத்த பிடியெடுப்பை இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற நியூசிலாந்து அணித் தலைவர் பிரன்டன் மெக்கல்லம் இடது பக்கமாக அந்தரத்தில் தாவி பிடியெடுத்தது, காண்போரை புல்லரிக்க வைத்தது.சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 139 ஓட்டங்கள் இலக்கை நியூசிலாந்து திக்குமுக்காடி வென்றது.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் திருவிழாவில், கார்டிப்பில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை–நியூசிலாந்து அணிகள் மோதின. இலங்கை அணியில் குலசேகரவுக்கு பதிலாக ஹேரங்க சேர்க்கப்பட்டார். அதே சமயம் நியூசிலாந்து அணியில் டேனியல் விட்டோரி, நெதன் மெக்கல்லம் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்தனர். காயத்தால் நீண்ட காலம் ஒதுங்கி இருந்த விட்டோரி, 2011ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு பிறகு விளையாடும் முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி இதுவாகும்.
ஆடுகளத்தில் பந்து ஓரளவு பவுன்சும் ஆனது. அதை நியூசிலாந்து பவுலர்கள் சூப்பராக பயன்படுத்தி, இலங்கை துடுப்பாட்ட வீரர்களை கலங்கடித்தனர். பந்து வீச்சுடன், நியூசிலாந்தின் ஆக்ரோஷமான களத்தடுப்பும் பிரமாதமாக அமைந்தது.
முன்னாள் அணித் தலைவர் சங்கக்காரவை தவிர மற்றவர்கள், வருவதும் போவதுமாக இருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் போட்டியில் காலடி எடுத்து வைத்த மூத்த சுழற்பந்து வீச்சாளர் விட்டோரி, மஹேல ஜயவர்த்தனவை (4 ஓட்டங்கள்) எல்.பி.டபிள்யூ. ஆக்கினார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் விட்டோரி, இதற்கு முன்பு தனது இறுதி விக்கெட்டாக ஜயவர்த்தனவைத் தான் (உலக கிண்ணத்தில்) எல்.பி.டபிள்யூ. முறையில் சாய்த்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சங்கக்கார ஒரு பக்கம் போராடினாலும், அவருக்கு பக்க பலமாக யாரும் துணை நிற்கவில்லை. கடைசியில் அவரும் 68 ஓட்டங்களுடன் (87 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முடிவில் இலங்கை அணி 37.5 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு அடங்கி போனது. களம் இறங்கிய 11 பேரில் 8 பேர் இரட்டை இலக்கை தொடவில்லை. நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனஹான் 4 விக்கெட்டுகளும், மில்ஸ், நெதன் மெக்கல்லம் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து சிறிய இலக்கை நோக்கி நியூசிலாந்து விளையாடியது. நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களும் இந்த அளவுக்கு திணறுவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இலங்கை பந்து வீச்சாளர்கள் சரியாக விக்கெட்டை நோக்கி தாக்குதல் நடத்தி, நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் அவர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய சகோதரர்கள் பிரன்டன் மெக்கல்லம் (18 ஓட்டங்கள்), நெதன் மெக்கல்லம் (32 ஓட்டங்கள்) இருவரையும் மலிங்க ஆட்டமிழக்க செய்ததும், நிலைமை மேலும் சிக்கலானது. இதனால் வெற்றி யாருக்கு என்பது மதில் மீது பூனையானது. 9–வது விக்கெட்டாக மில்ஸ் ஆட்டமிழந்த போது நியூசிலாந்தின் வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
அதிர்ஷ்டவசமாக டிம் சவுதியும் (13 ஓட்டங்கள்), மெக்லெனஹானும் (1 ஓட்டங்கள்) அந்த அணியை ஒரு வழியாக கரைசேர்த்தனர். நியூசிலாந்து அணி 36.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. ‘யோர்க்கர் மன்னன்’ இலங்கையின் மலிங்க 10 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னும் ஒரு ஓவர் அவருக்கு இருந்திருந்தால், நியூசிலாந்து மண்ணை கூட கவ்வியிருக்கும்.
ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை வீழ்த்துவது 4 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2009ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தில் இலங்கையை வென்றிருந்தது. சகலத்துறை வீரராக ஜொலித்த நியூசிலாந்து வீரர் நாதன் மெக்கல்லம் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும் 30 முதல் 40 ஓட்டங்கள் எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு மாறியிருக்கும் என்றும், ஆடுகளத்தை தவறாக கணித்து விட்டதாகவும் இலங்கை கேப்டன் மேத்யூஸ் தெரிவித்தார்.

ad

ad