புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2013




           "நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட்டால்!' -சி.பி.எம். தலைவர் ஒருவரை பற்றி இப்படித்தான் கொதித்துப் போயிருக்கிறார்கள் கேரள தமிழர்கள்.


இடுக்கி மாவட்டத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்துகளில் ஒன்று வண்டிப்பெரியாறு. புகழ் வாய்ந்த சுற்றுலாத்தலமான குமுளி நகரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த பஞ்சாயத்தின் தலைவராக சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த விஜயானந்த் இருக்கிறார். சமீபத்தில், தமிழர்களைப் பற்றி இவர் கூறியுள்ள கருத்தும், வண்டிப்பெரியாறிலுள்ள தமிழ்ப் பெண்களிடம் இவர் எடுக்க முயற்சித்த சர்வேயும் ஒட்டுமொத்த தமிழர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. இதைக் கண்டித்தும் சி.பி.எம். தலைவரை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தை 30-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது கேரள தமிழர்கள் கூட்டமைப்பு. இவர்களுக்கு ஆதரவாக 22 அமைப்புகள் இணைந்த முல்லைப்பெரியாறு போராட்ட குழுவும், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் குதிக்கவிருப்பதால் இடுக்கி மாவட்டம் முழுவதும் பதட்டம் அதிகரித்துள்ளது.

கூட்டமைப்பின் அமைப்பாளரும் எழுத் தாளருமான அன்வர் பாலசிங்கத்திடம் இது குறித்துப் பேசியபோது, ""தமிழர்கள் அடர்த்தியாக உள்ள கேரளப் பகுதிகளிலிருந்து அவர்களை தமிழகத்திற்கு விரட்டுகிற அஜெண்டாவை இங்குள்ள சி.பி.எம். கட்சியினர் ஒரு கொள்கையாகவே வைத் துள்ளனர். தேவிகுளம், மூணாறு பகுதிகளைத் தொடர்ந்து வண்டிப்பெரியாறிலும் இந்த விவகாரம் கிளம்பியிருக்கிறது. வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தில் சுமார் 65 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் 80 சதவீதம் பேர் தமிழர்கள்தான். இவர்களில் பெரும் பாலானோர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்கள். இடுக்கி மாவட்டத்தின் முக்கிய நகரமான வண்டிப்பெரியாறில் அடர்த்தியாக உள்ள தமிழர் களை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக வண்டிப் பெரியாறின் பஞ்சாயத்து தலைவர் சி.பி.எம். கட்சியை சேர்ந்த விஜயானந்த் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். அதாவது, வண்டிபெரியாறு பஞ் சாயத்தின் 2012-2013 வருடாந்திர திட்டம் என்கிற பேரில், "சமூகத் தீமைகளுக்கு எதிரான விழிப்புணர்வும் பயிற்சியும்' என்கிற தலைப்பில் தமிழ் பெண்களிடம் மட்டும் ஒரு சர்வேயை எடுக்க முயற்சித் துள்ளார். மலையாளப் பெண்களிடம் அந்த சர்வே எடுக்கவில்லை.



இந்த சர்வேயில் 30 கேள்விகள் கேட்கப் பட்டிருக்கின்றன. அதில் வில்லங்கமான பல கேள்வி களை கேட்டிருக்கிறார் விஜயானந்த். குறிப்பாக, "உங்களோடு உங்கள் கணவர் எப்போதெல்லாம் உடல் உறவு வைத்துக்கொள்கிறார்? உங்கள் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்து கிறாரா? கணவர் இல்லாமல் மற்றவர்களிடம் உடலுறவு வைத்துள்ளீர்களா? உங்கள் கணவர் உங்களிடம் கெட்ட வார்த்தைகள் பேசுகிறாரா? செக்ஸ் சினிமா பார்க்கிறாரா? அந்த சினிமாவை பார்க்க உங்களை வற்புறுத்துகிறாரா? அடிக்கிறாரா? தலைமுடியை பிடித்து இழுக்கிறாரா? பொது இடங்களில் உற்றுப் பார்த்தல், செக்ஸ் ரீதியிலான சீண்டல், செக்ஸ் கலந்த பேச்சுகள், உடல் உறுப்புகளை தொடுதல், உறுப்புகளை வெளியே காட்டுதல் போன்ற அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? வண்டிப்பெரியாறு டவுனில் எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்? உங்களை கொலை செய்ய உங்கள் கணவர் முயற்சித்துள்ளாரா?' என்று இப்படி அருவருக்கத்தகுந்த பல கேள்விகள் சர்வே விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விகளை படித்து அதிர்ச்சி யடைந்தோம். எவ்வளவு மோசமான சர்வே இது? இதன் பின்னணியை ஆராய்ந்த போதுதான் விஜயானந்தின் திடுக்கிடும் திட்டம் புரிந்தது. அண்மை யில், "ஃபயர்' என்கிற பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், "எய்ட்ஸ் நோயின் கேந்திரமாக தமிழ்நாடு இருக்கிறது. தமிழர்கள் எல்லாம் எய்ட்ஸ் நோயாளி கள். வண்டிப்பெரியாறிலிருந்து தமிழகத்தின் திருப்பூருக்கு சென்றுவரும் தமிழ் பெண்கள் எயிட்ஸை வாங்கி வந்து இங்கு பரப்புகிறார்கள். இங்கிருந்து தமிழகத்திற்கு படிப்பதற்காக சென்று வருகிற பிள்ளைகளும் எய்ட்ஸ் நோயை பரப்புகின்றனர்' என்று பயங்கரமான குற்றச் சாட்டை கூறியிருக்கிறார். 

தமிழர்களையும், தமிழச்சிகளையும் எய்ட்ஸ் நோயாளிகள் என்று சொல்வதன் மூலம்தான் அவர்களை இங்கிருந்து விரட்ட முடியும் என திட்டமிட்டே பொய்யான -இந்த பயங்கரமான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார் அவர். அதற்காகவே இந்த சர்வே. விஜயானந்தின் இந்த குற்றச்சாட்டும் சர்வேயில் அவர் கேட்டிருந்த கேள்விகளும் தமிழ்ப்பெண்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாளி கள் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் சி.பி.எம். கட்சியிலுள்ள அனைவரும் வக்ர புத்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர் களுக்கு காட்ஃபாதராக இருக்கிறார் விஜயானந்த். தமிழர்களுக்கு எதிரான இவரின் ஆபாசமான, ஆபத்தான இத்தகைய போக்குகளைக் கண்டித்தும் பஞ்சாயத்து தலைவர் பதவியி லிருந்து நீக்க வலியுறுத்தியும்தான் குமுளியி லிருந்து முற்றுகை போராட்டத்தை துவக்க விருக்கிறோம்''’ என்று சுட்டிக்காட்டுகிறார் பாலசிங்கம்.


ஆபாசமான இந்த கேள்விகளை எதிர் கொண்ட வண்டிப்பெரியாறிலுள்ள பூவாயி, மருதாம்பாள், ராமாத்தாள், மாரியம்மாள் (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோரிடம் நாம் பேசியபோது, ""பஞ்சாயத்து தலைவர் ஒரு சர்வே எடுக்கச்சொல்லியிருக்காரு. அதனால உங்கக்கிட்டே வந்திருக்கோம்னு சொல்லி காலேஜ் படிக்கிற பெண்கள் வந்து கேள்வி கேட்டாங்க. முதல்ல அவங்க கொண்டு வந்த ஒரு பேப்பரை பார்த்து "உங்க பேரு என்ன? ஊரு என்ன?, வயசு, எத்தனை புள்ளைங்க, புருஷன் இருக்கிறாரா? செத்துப் போயிட்டாரா?' என்றெல்லாம் கேட்டுட்டு பிறகு அசிங்கம் அசிங்கமா கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. அத கேட்டு ஒடம்பெல்லாம் கூசிடுச்சி. கண்டபடிக்கு அந்த பொண்ணுங்களை திட்டி, அவங்க கொண்டு வந்த பேப்பரையெல்லாம் கிழிச்சிப் போட்டோம். நாங்க போட்ட சத்தத்துல ஓடிப் போயிடுச்சிங்க அந்த பொண்ணுங்க. ஒரு ரெண்டுநாள் கழிச்சி சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பொம்பளைங்க வந்தபோதும் இது மாதிரிதான் அடிச்சி வெரட்டிட்டோம். தமிழ் பொண்ணுங்களை கேவலப்படுத்துவதையே வாடிக்கையா வெச்சிருக்கிறாரு பஞ்சாயத்து தலைவரு. சர்வேயில் கேட்ட கேள்விக்கு நாங்க பதில் சொல்லாததுனால, ராத்திரி நேரத்துல கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க எங்க வீட்டுக்குவந்து மிரட்டிட்டு போறாங்க''’’என்றார்கள் ஒருவித பய உணர்வுகளுடன். "விஜயானந்துக்கு எதிராக தமிழர்கள் யார் செயல்பட்டாலும் அவர்கள் குறிவைக்கப்படுவதால் தங்களது புகைப்படம் வரக்கூடாது' என்றும் கேட்டுக்கொண்டனர். 

""சி.பி.எம்.முக்கு எதிராக  யார் செயல்பட்டாலும் அவர்களை காலி செய்துவிடுவோம். எங்களுக்கு எதிராக செயல்பட்ட 6 பேரை இதுவரை கொலை செய்திருக்கிறோம்'' என்று கடந்த வருடம்  இடுக்கியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாவட்ட சி.பி.எம். முன்னாள் செயலாளரான எம்.எம்.மணியின் சிஷ்யர்தான் இந்த விஜயானந்த் என்பது குறிப்பிடத்தக்கது'' என்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்களே.

வண்டிப்பெரியாறு பஞ்சாயத்தில் பணிபுரியும் தமிழர்கள் சிலரிடம் பேசியபோது, ""இந்த சர்வேயில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளைத் தமிழ் பெண்களிடம் கேட்டால் காறித் துப்புவாங்க, அதனால எங்களால் முடியாதுன்னு விஜயானந்திடம் சுயஉதவிக் குழுவினர் சொன்னார்கள். ஆனா, அவர்களை மிரட்டியும் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 100 ரூபா தர்றேன்னும் சொல்லியும் அந்த வேலையில் ஈடுபடுத்தினாரு. ஆனாலும் அது முடியவில்லை. இப்போ அந்த சுயஉதவிக் குழுவினரை வைத்தே சர்வே எடுத்தது மாதிரி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார். தமிழர்களுக்கும் தமிழ் பெண் களுக்கும் எயிட்ஸ் நோய் இருப்பதாக சொல்வதற்கு இந்த சர்வேயை பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் தமிழர்களை அரசாங்கமே வெளியேற்றும் என்பது அவரின் கணக்கு''’என்றும் விவரிக்கின்றனர்.

விஜயானந்தின் மோசமான நடவடிக்கையை எதிர்த்து கேரள தமிழர்களும் அவர்களுக்கு ஆதரவாக தமிழக அமைப்புகளும் திரளுவதை கண்ட இடுக்கி மாவட்ட உளவுத்துறை அதிகாரி சுப்ரமணியன்,

விஜயானந்தின் நடவடிக்கையால் மலையாளிகளும் தமிழர்களும் மோதிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. விஜயானந்தின் செயல்களை கட்டுப் படுத்தாவிட்டால் குமுளி-வண்டிப் பெரியாறில் சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி யுள்ளார். இதை யடுத்து கேரள உள்துறையின் அட்வைஸ்படி, "விஜயானந்த் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார். போராட்டமெல்லாம் வேண்டாம்' என  போராட்டக் குழுவினரிடம் வற்புறுத்தி வருகிறார் சுப்ரமணியன்.

இந்த விவகாரம் குறித்து விஜயானந்தை தொடர்புகொண்டு பேசியபோது, ""இது எங்க மாநில பிரச்சினை. இதை யாரு தமிழ் பத்திரிகைகளுக்குச் சொன்னது? உங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது'' என்று தொடர்பை துண்டித்துக்கொண்டார். 

இவர் பதில் சொல்லும் நாள் விரைவில் வராமலா போகும்?

ad

ad