புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2013

புலிகளை முன்னிறுத்தி பொதுமக்களின் சொத்துக்களை அபகரிப்பதை அரசாங்கமும் இராணுவமும் உடனடியாக நிறுத்த வேண்டும்: த.தே.கூட்டமைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுடைய முன்னிறுத்தி பொதுமக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யும் நடவடிக்கையினை அரசாங்கமும், இராணுவத்தினரும் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 அநாகரீகமான முறையில், சட்டத்திற்கு முரணாக மனிதாபிமானமில்லாமல் மக்களுடைய சொத்துக்களை கபளீகரம் செய்யவதற்கு இராணுவத்திற்கு உரிமை கிடையாது. புலிகள் பயன்படுத்திய சொத்துக்கள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானவை அவை மீளவும் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலங்கள், சொத்துக்கள் அனைத்தும் அடையாளப்படுத்தப்பட்டு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தின் பின்னர் இராணுவம் ஆக்கிரமித்திருந்த நிலம் மற்றும் சொத்துக்களை தம்மிடம் மீளவும் வழங்க வேண்டும் என மக்கள் கேட்டிருந்த நிலையில், இராணுவம் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில் அவற்றை புலிகள் பயன்படுத்தினர் என அடையாளப்படுத்தி, சட்டரீதியாக கையகப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இதுவாகும். இதற்க இராணுவம் கூறும் நியாயம் என்னவென்றால், புலிகளை நாங்கள் போரில் தோற்கடித்து விட்டோம். அந்தப் போரில் நாங்கள் இரத்தம் சிந்தியிருக்கின்றோம்.
எனவே புலிகளுடைய சொத்துக்கள் அனைத்துமே இராணுவத்திற்குச் சொந்தமானது என்பதே. இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகமோசமான ஒரு நியாயமாகும்.
இவ்வாறு இராணுவம் கபளீகரம் செய்திருக்கும் வீட்டிற்குச் சொந்தமான ஒரு பொதுமகன் “புலிகளிடமிருந்து எங்களை மீட்டுவிட்டதாகச் சொன்னீர்கள். எனவே எங்களுடைய சொத்துக்களை எங்களிடமே தந்துவிடுங்கள்” என கேட்டிருக்கின்றார்.
அதற்கு இராணுவம் சொன்ன பதில், புலிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது என்னுடைய வீட்டை தா என ஏன் நீ கேட்வில்லை? நாங்கள் இரத்தம் சிந்தி புலிகளை அழித்தோம். புலிகளுடைய சொத்துக்கள் எங்களுக்கே உரித்தானவை என்பதே. இது எவ்வவையில் நியாயமாக இருக்க முடியும்? இவ்வாறு கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் கிராமமே கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி நகரில் தமிழ் மக்களுடைய நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் ஒன்றின் கட்டிடத்தில் தற்போது படைமுகாம் இயங்குகின்றது. எனவே இது மிகவும் மிலேச்சத்தனமான நடவடிக்கை என்பதில் சந்தேகமிருக்க முடியாது.
இந்த நடவடிக்கையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. புலிகள் பயன்படுத்திய சொத்துக்கள் அனைத்தும் மக்களுடைய சொத்துக்கள், அவை மீளவும் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். இதற்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.
ஏற்கனவே தமிழர்களுடைய பெருமளவு நிலம் சுவீகரிப்புச் செய்யப்பட்டும், குடியேற்றங்களை ஏற்படுத்தியும் பலாத்காரமாக பிடுங்கப்பட்டிருக்கும் நிலையில் இவ்வாறான திட்டமிட்ட கபளீகர நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த அரசும், அதன் இராணுவமும் சொத்துக்களை கபளீகரம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டவை போன்றே நடந்து கொள்கின்றன என்றார்.

ad

ad