புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உதவி

கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரம் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

1956ம் ஆண்டு தென்பகுதியிலிருந்து சிங்கள வன்முறைகளால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் கிராமத்தில் குடியேறி அக்கிராமத்தில் உழைத்து முன்னேறிய மக்கள் 2009 இல் இலங்கையரசு மேற்கொண்ட யுத்தத்தில் தங்கள் உடைமைகள் முழுவதையும் இழந்து மீள்குடியேறி வாழ்கின்றனர்.
இந் நிலையில் இப்பகுதி மாணவர்களின் கல்வி, விளையாட்டு மேம்பாட்டுக்காக சுவிஸ் லுசன் துர்க்கை அம்மன் ஆலயத்தினர் கற்றல் உபகரணங்களை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக வழங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் தமது கருத்துரையினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர், தமிழர்களுக்குப் பொன் முட்டை இடப் போவதாக, அவர்கள் எல்லாம் கிடைத்து வாழப் போகிறார்கள் என்ற கனவை உருவாக்கி அவர்களை எதுவும் அற்றவர்களாக்க முனையும் வடமாகாண சபைத் தேர்தல் ஜனநாயக விழுமியங்களைப் பின்பற்றி நேர்மையாக நடக்கப் போவதில்லை.
இப்பொழுதே அரச பணியாளர்களிலிருந்து இராணுவத்தினர் வரை தமிழர்களின் வாக்கைச் சிதைக்கும் கைங்ககரியத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்களிக்கத் தகுதியுடையோரின் விபரங்கள் சீருடை தரித்தோராலும் சிவிலில் நிற்கும் சீருடையினராலும் சேகரிக்கப்படுகிறது.
அரச நியமனங்கள் என்ற பெயரில் இறைமையுள்ள இனம் சிதைக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பேச முடியாத அளவுக்கு உலக வல்லரசு, பிராந்திய வல்லரசுகள் கூட இலங்கையுடன் சேர்ந்து தமிழரை நட்டாற்றில் விடும் செயலில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் நேர்மையாக ஜனநாயகப்படி நடக்காது. உலகக் கண்காணிப்பும் கவனமும் எப்படி அமையும் எனக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். இந் நிகழ்வு கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் செ.புஸ்பராசா தலைமையில் தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டச் செயலாளர் சு.பசுபதிப்பிள்ளை , தர்மபுரம் மூத்தோர் சங்கத் தலைவர், செயலாளர், பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad