புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,


இளவரசன் இறுதிச் சடங்குக்கு திவ்யா வருவாரா?

தர்மபுரி இளவரசன் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இளவரசனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ காட்சிகள் இளவரசனின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இளவரசனின் பிணத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து தர்மபுரியில் பதட்டம் நிலவுகிறது.


சென்னையில் தங்கி இருந்த இளவரசனின் காதல் மனைவி திவ்யா தர்மபுரிக்கு திரும்பி உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8–ந் தேதி இளவரசனை திருமணம் செய்ய வீட்டை விட்டு சென்ற திவ்யா 8 மாதங்களுக்குப் பிறகு தர்மபுரி செல்லங் கொட்டாய் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அவருடன் அவரது தாயார் தேன்மொழி, தம்பி மணி ஆகியோரும் வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7–ந் தேதி திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்ட போதுகூட இறுதிச் சடங்குக்கு திவ்யா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 தற்போது தர்மபுரி வந்து உள்ள திவ்யாவுக்கு நேற்று மனநல மருத்துவத்துறை நிபுணர்கள் கவுன்சிலிங் அளித்தனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மனநலத்துறைத் தலைவர் டாக்டர் ரவிசங்கர், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மனநலத் துறைத் தலைவர் டாக்டர் ராஜேசுவரி ஆகியோர் திவ்யாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் அளித்தனர்.
அப்போது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க், கோட்டாட்சியர் மேனகா ஆகியோர் உடன் இருந்தனர். கவுன்சிலிங்கிற்கு முன்பு திவ்யாவையும், அவரது தாயார் தேன்மொழியையும் பார்க்க பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. 
கவுன்சிலிங் முடிந்ததும் அவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்களை பார்க்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இளவரசன் மரணம் குறித்து திவ்யாவிடம் கேட்டபோது ‘தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கும் அளவுக்கு மனநிலை இல்லை‘என்றார்.
திவ்யா வீட்டுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திவ்யா போலீஸ் பாதுகாப்புடன் இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருவதாக தகவல் பரவியது. இதனால் பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள். டி.வி காமிராமேன்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். ஆனால் இன்று காலை  வரை திவ்யா வரவில்லை. இந்த நிலையில் இளவரசன் இறுதிச்சடங்குக்கு திவ்யா வரவேண்டும் என்று இளவரசனின் தந்தை இளங்கோ கூறினார். 
இது குறித்து அவர், ‘’திவ்யா விருப்பப்பட்டால் எங்களுடன் வரலாம். அவரை மகளாக ஏற்றுக் கொள்கிறோம். இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இளவரசனின் இறுதிச் சடங்கில் திவ்யா கலந்து கொள்ள வேண்டும். இறுதிச் சடங்கு காரியங்களை அவர் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் எனது மகன் ஆத்மா சாந்தி அடையும்’’என்று கூறினார்.
இளவரசனின் தந்தை அழைப்பை ஏற்று திவ்யா இறுதிச்சடங்கில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.

ad

ad