புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2013

,

தருமபுரி, மரக்காணம் வன்முறைகள் - நாகராஜன், இளவரசன் உயிர்ப் பலிகள் :
 திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தருமபுரி இளவரசன் சாவு, தமிழகத்திற்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.  தந்தை பெரியார் பிறந்த மண்ணில், சாதியம் இன்னும் தலைவிரித்தாடுகிறது என்பதற்குச் சாட்சியமாய் இளவரசனின் சாவு அமைந்துள்ளது.  சாதியவாத சக்திகள் தம்முடைய குறுகிய அரசியல் நலன்களுக்காக திவ்யா - இளவரசன் வாழ்வை சின்னாபின்னமாகச் சிதைத்துவிட்டனர்.


இளவரசனை மட்டுமின்றி திவ்யாவின் தந்தை நாகராஜையும் சாதிவெறி காவுகொண்டுவிட்டது. திவ்யா, தலித் இளைஞனை விரும்பி தனது வாழ்க்கைத் துணைவராகத் தேர்ந்தெடுத்த ஒரே காரணத்திற்காக இன்று அவரது தந்தையையும் இழந்து, கணவனையும் இழந்து ஓர் அகதியாக்கப்பட்ட நிலையில் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


இளவரசன் இரயிலில் அடிபட்டு இறந்திருக்கிறான் என்று உடற்கூறாய்வு மருத்துவ அறிக்கை கூறுகிறது.  இளவரசன் தானாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டானா? அல்லது ரயிலின் மீது தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டானா? என்கிற ஐயத்தை எழுப்பியிருக்கிறது.


இளவரசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என்று அவனுடைய பெற்றோர் உறுதியாகக் கூறுகின்றனர்.  அத்துடன், ரயில்வே இருப்புப் பாதையில் உடல் கிடந்ததாகவோ அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகவோ ரயில் ஓட்டுநர்கள் யாரும் இரயில் நிலைய அதிகாரி களிடமோ காவல் துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் பதிவு செய்யவில்லை என்று ஊடகங்கள் மிக அழுத்தமாகத் தெரிவிக்கின்றன.
 இந்நிலையில், இளவரசனின் சாவில் மர்மம் இருப்பதாகவே நம்ப வேண்டியிருக்கிறது.   மேலும், உடற்கூறாய்வு செய்ய வேண்டிய நேர வரையறைக்கு முன்பே அதிகாலை 6 மணிக்கே உடற்கூறாய்வு சோதனையில் காவல்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக ஈடுபட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
இத்தகைய ஐயங்களால் இளவரசனின் சாவு தற்கொலையா? கொலையா? என்பதை உறுதிப்படுத்த வேண் டிய பொறுப்பு அரசின் கடமையாக உள்ளது.


மேலும், இளவரசன் சாவு, நாகராஜன் சாவு, தருமபுரி வன்முறை, மரக்காணம் வன்முறை ஆகியவற்றின் பின்னணிகளை ஆராய வேண்டியதும், அதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டியதும் அரசின் கூடுதல் பொறுப்பாக உள்ளது. 
தருமபுரி மாவட்டக் குற்றவியல் நீதிபதியின் முன்பும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் முன்பும் தானாக விரும்பி இளவரசனோடு சேர்ந்து வாழ்க்கை நடத்துகிறேன் என்று திவ்யா கூறியுள்ளார். ஆனால், 6-6-2013 அன்று என் தாய்க்கும், என் தம்பிக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், என் தந்தைக்கு நேர்ந்தது, என் தாய்க்கும் நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணி, தற்போது என் தாயாரோடு போக விரும்புகிறேன் என்று நீதிபதியின் முன்னால் கூறினார்.  இதிலிருந்து சாதியவாதிகளால் தன்னுடைய குடும்பத்திற்கு ஆபத்து இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே உணர முடிகிறது.


அதே போல சூலை 1ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னால் எனது அம்மாவின் ஒப்புதலோடு இளவரசனோடு வாழ விரும்புகிறேன் என்று திவ்யா கூறியது நீதிமன்ற ஆவணங்களிலேயே பதிவாகியிருக்கிறது.  ஆனால், சூலை 3ஆம் தேதி அதற்கு நேர் எதிராக என்னால் இளவரசனோடு வாழ முடியாது என்று மறுத்துச் சொன்னதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?  இதிலிருந்து திவ்யாவின் குடும்பம் சாதிவெறிக் கும்பலின் பிடியில் சிக்கித் தவிக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.
எனவே, திவ்யா குடும்பத்தை அந்தச் சதிக் கும்பலிடமிருந்து மீட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.  அத்துடன் இளவரசன் குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்வதோடு, தருமபுரி, மரக்காணம் வன்முறைகள், நாகராஜன், இளவரசன் உயிர்ப் பலிகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருந்த பின்னணிகளை முழுவதுமாக வெளிச்சத்துக்குக் கொண்டுவர தமிழக அரசு நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டும்;  இளவரசன் சாவிலுள்ள மர்மத்தை அவிழ்ப்பதற்கு தனி குற்றப் புலனாய்வு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 10-7-2013 அன்று சென்னையில், எனது தலைமையிலும் (தொல். திருமாவளவன்), சூலை 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பிற மாவட்டத் தலைநகரங்களிலும் அமைதி வழியில், அறவழியில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே வேளையில், சாதிஒழிப்புக் களத்தில் பலியான இளவரசனுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆங்காங்கே அமைதிப் பேரணிகளை நடத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளைக் கேட்டுக் கொள்கிறேன்.


மேலும், தற்போது தருமபுரியில் விதிக்கப்பட்டிருக்கிற 144 தடையாணையை உடனடியாக விலக்கிக் கொண்டு இளவரசனின் இறுதிவணக்க நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
சாதிவெறிக்கு எதிரான இளவரசனின் வாழ்க்கைப் போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழகத்தில் இத்தகைய கொடூரங்கள் தொடராமல்  தடுக்கும் வகையிலும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் இளவரசனின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’என்று தெரிவித் துள்ளார்.

ad

ad