புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2013



வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்! கவிஞர் வைரமுத்து இரங்கல்!
கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 
நிரப்ப முடியாத வெற்றிடம்
தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.
வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க
முடியும். எம்.ஜி.ஆர். - சிவாஜி தொடங்கி நடித்துக்கொண்டிருக்கும் நான்காம் தலைமுறை வரைக்கும் பாட்டெழுதிய பெருமை அவருக்கு உண்டு.

வரிகளால் வலிமை
கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு வரிகளால் வலிமை சேர்த்தார். 
எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்கு பெரும்பங்கு உண்டு. திராவிட இயக்க அரசியலை சாகித்தியத்தில் கொண்டு வந்த சாமர்த்தியம் வாலிக்கு வசப்பட்டிருந்தது. “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று எம்.ஜி.ஆருக்கு எழுதியவர், கலைஞரின் மைந்தர் மு.க.முத்துவுக்கு “மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ, நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ” என்று எழுதினார்.
தனக்கு இரங்கல் பாடல்
மூன்று என்ற தொடங்கும் பல்லவியை இரண்டு பேருக்கும் பயன்படுத்தி இரு சாராரின் மனம் கவர்ந்த திறமை வாலிக்கு மட்டுமே வரும் உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசாதவர்; தான் உண்டு தன் தமிழ் உண்டு என்று வாழ்ந்தவர். 
வாழ்வின் நிறைவுக்காலத்தில் நோய்களை சந்தித்தாலும் நொந்து கொள்ளாதவர். “தாய்கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய்கொண்டு போகும் காலம் அம்மா” என்று எழுதிய வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார். 
தமிழ் மரணம்
அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவர் தமிழ் மரணம் தொடமுடியாத உயரத்தில் இருக்கிறது. அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக்கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்து கொண்டு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.  

ad

ad