புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013


என்.எல்.சி. 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல்: தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
முதல் அமைச்சர் ஜெயலலிதா 15.07.2013 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதும், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
ஆகியவற்றில் மேலோங்கி இருப்பதும், தொடர்ந்து லாபத்தில் இயங்கிக் கொண்டிருப்பதும், இந்திய அரசின் 'நவரத்னா' நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவதுமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 57 ஆண்டுகளாக எரிசக்தி துறையில் பல்வேறு அளப்பரிய சாதனைகளை புரிந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முடிவு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கான நிலம் தமிழக மக்களால் வழங்கப்பட்டது. அங்கு பணியாற்றுபவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்தான்.
இந்த நிறுவனம் தமிழர்களின் உழைப்பால்தான் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகின்றது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனம் 1,460 கோடி ரூபாய் அளவிற்கு நிகர லாபம் ஈட்டியிருக்கிறது. தமிழர்களின் உணர்வுகளோடு இந்த நிறுவனம் ஒன்றிணைந்துள்ளதால்தான் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமென்ற மத்திய அரசின் கருத்துருவை நான் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளேன். 2003-ஆம் ஆண்டு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தபோது, அதனை எதிர்த்து 22.4.2003 அன்று நான் அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதனையடுத்து, இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
2006-ம் ஆண்டு மத்திய அரசு மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயன்றபோது, அதன் தொழிலாளர்கள் என்னை வந்து நேரில் சந்தித்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நான் ஆதரவு தெரிவித்ததோடு, மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்தச் சூழ்நிலையில், நிறுவனத்தை ஏற்படுத்தியவர்கள் அல்லாமல் பொதுமக்களிடம் போதிய அளவு பங்கு இருந்தால் தான் பங்குச் சந்தையில் நீர்மை, அதாவது டiளூரனைவைல இருக்கும் என்பதன் அடிப்படையிலும்; பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பொது முதலீட்டாளர்கள் பங்குகளுக்குரிய நியாயமான விலையை பெற இயலும் என்பதன் அடிப்படையிலும்; பங்குகளின் விலையில் செயற்கை மாற்றத்தை எவராலும் உருவாக்க இயலாது என்பதன் அடிப்படையிலும்; பங்குகளின் விலையில் ஏற்படும் மிகுந்த ஏற்ற இறக்கத்தினை தணிக்கும் வகையிலும்; தனியார் நிறுவனங்களின் 25 விழுக்காடு பங்குகளும், பொதுத்துறை நிறுவனங்களின் 10 விழுக்காடு பங்குகளும் பொது முதலீட்டாளர்கள் வசம் இருக்க வேண்டும் என  1957-ம் ஆண்டைய பங்குகள் பரிவர்த்தனைகள் (முறைப்படுத்துதல்) விதிகளில் 2010-ம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
பங்குச் சந்தையில் செயற்கை விலை மாற்றத்தை தனியார் நிறுவனங்கள்தான் மேற்கொள்ள இயலும். பொதுத்துறை நிறுவனங்கள் இதுபோன்ற விலை மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. எனவே, பொதுத் துறை நிறுவனங்களும் தனது பங்குகளை 90 விழுக்காடாக குறைத்துக் கொண்டு, பொது முதலீட்டாளர்கள் வசம்  10 விழுக்காடு பங்குகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியத்தின்  கொள்கை தவறானது ஆகும். இருப்பினும், இந்த விதியை மேற்கோள் காட்டி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த உடனேயே, இதனை எதிர்த்து 23.5.2013 அன்று நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளிலிருந்து ஒரு சிறிய பகுதியை விற்பனை செய்தாலும் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும் என்றும், இதன் காரணமாக மின் தடை ஏற்பட்டு தமிழகத்தின் நலன் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டு, தற்போது வெளிச்சந்தையில் உள்ள 6.44 விழுக்காடு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை திரும்பப் பெற்று, இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதை நிறுத்த வேண்டும் அல்லது 1957-ஆம் ஆண்டைய பங்குகள் பரிவர்த்தனைகள் (முறைப்படுத்துதல்) விதிகளில் இருந்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதற்குப் பதில் அளித்து 8.6.2013 அன்று பிரதமர் எனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், விதிகளை பின்பற்றாத தனியார் நிறுவனங்களுக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் அபராதம் விதிப்பதாகவும், இந்த நிலைமைக்கு பொதுத் துறை நிறுவனங்கள் ஆளாகக் கூடாது என்றும், இந்த நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் அந்த நிறுவனம் தனியார் நிறுவனமாக மாறிவிடாது என்றும், பொதுத் துறை நிறுவனம் என்ற சிறப்பை இழந்துவிடாது என்றும், இது குறித்து தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற என்.எல்.சி. நிர்வாகம் தொழிற்சங்கங்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதலீட்டை அதிகப்படுத்த அரசாங்கம் முயற்சி எடுத்து வருகின்ற இந்தத் தருணத்தில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனத்தை பங்குச் சந்தை பட்டியலிலிருந்து விலக்கிக் கொண்டால், அது பங்குச் சந்தைக்கு எதிர்மறையான சமிக்ஞைகளை அளிக்கும் என்றும் தெரிவித்து, இந்த நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை விற்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு மத்திய அரசின் இந்த முடிவிற்கு 21.6.2013 அன்று ஒப்புதல் அளித்தது. இதனை அறிந்தவுடன் 22.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு மீண்டும் ஒரு கடிதத்தினை நான் எழுதினேன். அந்தக் கடிதத்தில், அனைத்து தொழிற்சங்கங்களும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து போராட்டங்கள் மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கின்றன என்று தெரிவித்து, இந்த முடிவினை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தேன்.
இருப்பினும், மத்திய அரசிடமிருந்து எவ்வித சாதகமான முடிவும் வரவில்லை. இந்தப் பிரச்சனைக்கு சாத்தியமாகக் கூடிய ஒரு தீர்வினை காண வேண்டும் என்ற அடிப்படையிலும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கும், ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கைக்கும் மதிப்பளிக்காமல் நிதிச் சந்தையின் கருத்தோட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்ததன் காரணத்தாலும், என்.எல்.சி. நிறுவனத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையையும் பொருட்படுத்தாது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தகுதி பெற்ற வாங்கும் நிறுவனங்கள் என்றும், அவைகள் வாங்கும் பங்குகள் ‘பொது முதலீடு’ என்ற வகைப்பாட்டிற்கு உட்பட்டது என்றும் தெரிவித்து, எனவே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யாமல், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்க வேண்டும் என்றும் எனது கடிதத்தில் கோரியிருந்தேன்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி 7.7.2013 அன்றும் பாரதப் பிரதமருக்கு ஒரு கடிதத்தை நான் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிப்பது குறித்த கருத்துருவை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்த வழிமுறைகளை வகுக்க இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திற்கு உத்தரவிடுமாறும் பாரதப் பிரதமரை நான் கேட்டுக் கொண்டேன். எனது தொடர் வற்புறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்து, இது குறித்து விவாதிக்க தமிழக அரசின் அதிகாரிகளை புது டெல்லிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர், தொழில் துறையின் இணைச் செயலாளர் ஆகியோர் 10.7.2013 அன்று புது டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்து உரையாடினர். இந்தக் கூட்டத்தில், பங்குகளை வாங்கும் தகுதியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து என நிர்ணயம் செய்யவும்; விற்கப்படும் பங்குகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு 25 விழுக்காடு பங்குகள்; தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு 45 விழுக்காடு பங்குகள்; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம்மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு தலா பத்து விழுக்காடு பங்குகள் என்ற அடிப்படையில் ஒதுக்கவும்; பங்குகளின் விலை நிர்ணயத்தைப் பொறுத்தவரையில், தகுதியுள்ள நிறுவனங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறைப்படி, பங்கு சந்தையின் இரண்டு வார அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலையின் சராசரியை அடிப்படையாக வைத்து விலையினை நிர்ணயம் செய்யவும், 6.44 விழுக்காடு பங்குகள் ஏற்கெனவே பொது முதலீட்டில் உள்ளதால், 5 விழுக்காடு என்பதற்குப் பதிலாக 3.56 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்த வழிமுறைகள் குறித்து இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் முன்பு விவாதிக்கும் பொருட்டு, 15.7.2013 அன்று மும்பையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழக அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர், தொழில் துறையின் இணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், அதனால் பொது வைத்திருப்பாக வகைப்படுத்தப்படும் முதலீடு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான 10 விழுக்காட்டினை நிறைவு செய்யும் என்பதால் மத்திய அரசும், செபி நிறுவனமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில்கள் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை சுமார் 500 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாகவும், எனது தனிப்பட்ட முயற்சிக்கும், தொழிலாளர்களின் போராட்டத்திற்கும், ஒற்றுமைக்கும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.
இதனை ஏற்று, அனைத்து என்.எல்.சி. தொழிலாளர்களும் தங்களது வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ad

ad