புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2013

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி! பிரதான சாட்சி இறந்த நிலையில் திடீர் திருப்பம்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் கொலை முயற்சி வழக்கில் மூன்றாம் எதிரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
2006ம் அண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி கொள்ளுப்பிட்டியில் வாகனப் பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் என்பவருக்குவழக்குத் தொடுனர் அறியாத மற்றவர்களுடன் உடந்தையாக இருந்து மரணத்தை விளைவிப்பதற்கு சதித்திட்டம் தீட்டி வெடிகுண்டு தாக்குதல் நடாத்தியதனால், உயர் ஸ்தானிகரின் பாதுகாவலர்களான நான்கு லான்ஸ் கோப்ரல்களையும் வாகன சாரதி சிசிர ஜயந்த உட்பட 7 நபர்களிற்கு மரணத்தை விளைவித்ததுடன்,
8 நடை பயணிகளுக்கு கடும் காயத்தை விளைவித்ததுடன் 12 லட்சம் ருபாவிற்கு மேற்பட்ட ஆதனங்களுக்கு சேதம் விளைவித்ததாக யோகராஜா நிரோஜன், சுப்பிரமணியம் சுபேந்திரராஜா, கனகரெத்தினம் ஆதித்தயன் ஆகிய மூவருக்கும் எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் மூன்றாம் பிரிவுகளின் கீழ் 25 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அரச தரப்புச் சாட்சிகளாக சம்பவத்தை நேரில் கண்ட மேலும் விசாரணை அதிகாரிகள் சட்டமருத்துவ அதிகாரிகள் என 28 சாட்சிகளின் பெயர் குறிப்பிடப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்றைய மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கரமசிங்க முன்னிலையில் மேலதிக விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்வேளையில் சட்டமருத்துவ அதிகாரியின் சாட்சியத்தை அரச சட்டத்தரணி தமித்னி டி சில்வா நெறிப்படுத்துகையில் சாட்சி நீதிமன்றில் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டதாவது,
லான்ஸ் கோப்ரல்களான சமிந்த குமார, பிரேம் ஜயந்த, இந்திக அருணசிசிர ஜயந்தன ஆகியோரது மரண பரிசோதனைகளை தான் மேற்கொண்டதாகவும் குண்டுத் தாக்கதலில் மரணமடைந்தவர்களில் உடலின் பல பாகங்களிலும் 12 காயங்களிலிருந்து 57 காயங்கள் வரை காணப்பட்டதாகவும் சமிந்த குமார, பிரேம் ஜயந்த ஆகிய இருவரது உடலில் பல காயங்கள் காணப்பட்டதுடன் அவர்களது மூளையும் சிதறடிக்கப்பட்டிருந்தது.
குண்டுத் தாக்குதலில் காயம் அடைந்தவர்களை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தால் கோப்ரல் இந்திக அருணசிசிர ஜயந்தனவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும் எனவும் இந்த மரணங்கள் குண்டுத் தாக்குதலினால் ஏற்பட்ட மரணங்களாகும் எனச் சாட்சியமளித்தார்.
உயர் ஸ்தானிகராகிய பசீர் அலிமொகமட்டின் பாதுகாப்பு பிரதானியான மேஜர் கோதாகொட தனது சாட்சியத்தில்,
உயர் ஸ்தானிகருக்கு தாங்கள் தேவையான பாதுகாப்பு வழங்கியதாகவும் உயர் ஸ்தானிகர் அவசரமாக வெளிச் செல்லும் நேரங்களில் தங்களுக்கு உயர் ஸ்தானிகரது காரியாலயத்திலிருந்து அறிவித்தல் எந்நேரமும் கொடுக்கப் படுவதில்லையெனவும் அதனால் சம்பவம் நடைபெற்ற தினம் மேலதிக பாதுகாப்ப வழங்கப்படவில்லையெனவும் உயர் ஸ்தானிகரது பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த மரணமடைந்த நான்கு லான்ஸ்.கோப்பிரல்களே பாதுகாப்பு வழங்கினர் என சாட்சியம் அளித்தார்.
அரச தரப்பு சட்டத்தரணி சாட்சியத்தை நெறிப்படுத்திய பின்னர் எதிரிகள் சார்பாக குறுக்கு விசாரணை உண்டா என நீதிமன்றம் எதிரிகள் தரப்பு சட்டத்தரணிகளை வினவிய பொழுது முதலாம் இரண்டாம் எதிரிகளின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது யாதெனில் நடைபெற்ற சம்பவத்தையும் மரண பரிசோதனை அறிக்கைகளயும் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப் போவதில்லையெனவும்,
இந்த வழக்கில் அரசதரப்பு சாட்சியங்களாக 28 சாட்சிகளின் பெயர்கள் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் பெயர் குறிப்பிடப்படடுள்ளபோதிலும்,
இந்த வழக்கின் முதலாவது எதிரியாக குற்றச்சாட்டுப் பத்திரத்தில் பெயர் குறிப்பிடப் பட்டிருக்கும் யோகராசா நிரோஜனுக்கு எதிராக அரச சார்பாக சாட்சியமளிக்கவிருந்த ஒரே சாட்சி அரச தரப்பின் முதலாவது சாட்சியான முத்தையாபிள்ளை விக்கினேஸ்வரன், கடந்த தவணை அரச சட்டத்தரணியின் வேண்டுகோளையடுத்து. இந்த சாட்சியை இன்றைய தினம் நீதிமன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றில் பிரசன்னமாகும்படி நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் பொலிசாரின் அறிவுறுத்தலின்படி சாட்சியான முத்தையாபிள்ளை விக்கினேஸ்வரன் காலமாகி விட்டதாக அரச சட்டத்தரணி இன்று நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் இரண்டாம் மூன்றாம் எதிரிகளால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் அரச சான்றாக இணைக்கப்பட்டுள்ள போதிலும் முதலாம் எதிரியினால் வழங்கப்பட்டதாக குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் எவையும் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் அரச சான்றாக இணைக்கப்படவில்லை.
எனவே முதலாம் எதிரியான யோகராசா நிரோஜனுக்கு எதிராக இந்த வழக்கை கொண்டு நடாத்த சாட்சியங்களோ அல்லது குற்ற ஒப்புதல் வாக்கமூலமோ அல்லது வேறு சான்றுகளோ இல்லாத நிலையில் முதலாம் எதிரியை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என முதலாம் எதிரி சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நீதிமன்றத்தினை வேண்டிக் கொண்டார்.
மூன்றாம் எதிரியான கனகரெத்தினம் ஆதித்தன் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி மொகமட் அஜமுல்லா தனது கட்சிகாரரான ஆதித்தன் ஜனாதிபதியில் ஆலோசகரான கனகரெத்தினத்தின் புதல்வர் எனவும் ஆகையினால் அதனைக் கருத்தில் கொண்டு ஆதித்தனுக்கு பிணை வழங்கும் படி பிணை மனுவை முன் வைத்தார்.
முதலாம், மூன்றாம் எதிரிகளின் சட்டத்தரணிகளின் வேண்டுகோள்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்கரமசிங்க ஜனாதிபதியன் ஆலோசகர் இந்த வழக்கின் எதிரியல்லவெனவும் பிணை வழங்க முன்வைக்கப்பட்ட விடயம் நீதிமன்றினால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொன்றல்ல எனக் குறிப்பிட்டு குறிப்பிட்டு பிணை மனுவை நிராகரித்தார்.
முதலாம் எதிரியின் சட்டத்தரணயின் வேண்டுகோளிற்கு சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அரச சட்டத்தரணி அடுத்த தவணையன்று நீதிமன்றிற்கு அறிவிக்கும்படி உத்தரவிட்டு செப்டம்பர் 30ம் திகதிக்கு மேலதிக விசாரணையை நீதவான் ஒத்திவைத்தார்.

ad

ad