புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2013




          நாடும் நாடாளுமன்றமும் வியந்து போற்றிய அண்ணா, குடியரசுத்தலைவர் ஆன ஆர்.வெங்கட்ராமன் என இருவரும் எம்.பி.யாக இருந்த வரலாறு கொண்டது, தென்சென்னை தொகுதி. ஆற்றல்வாய்ந்த நாடாளுமன்றவாதியான இரா. செழியனையும் ஆலடி
அருணாவையும் நடிகை வைஜயந்திமாலா தோற்கடித்ததும், இந்தத் தொகுதியில்தான். 1957-ல் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, 62-ல் நாஞ்சில் மனோகரன், 67-ல் அண்ணா, முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றதால் பதவிவிலகவும், 67 இடைத்தேர்தலில் முரசொலி மாறன், 71-ல் மீண்டும் மாறன், 77, 80-ல் ஆர்.வெங்கட்ராமன், 84, 89-ல் வைஜயந்திமாலா, 91-ல் ஆர்.சிறீதரன், 96, 98, 99, 2004 என தொடர்ந்து 4 முறை டி.ஆர்.பாலு ஆகியோர், இந்தத் தொகுதியில் இருந்து மக்களவைக்குச் சென்றவர்கள். இப்போதைய எம்.பி. அ.தி.மு.க.வின் சிட்லபாக்கம் ராஜேந்திரன் என அழைக்கப்படும் சி. ராஜேந்திரன். 

2009வரை, தாம்பரம், ஆலந்தூர், சைதாப் பேட்டை, தியாகராயர் நகர், மயிலாப்பூர், திரு வல்லிக்கேணி என பரந்துவிரிந்த தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், தியாகராயர் நகர், சைதாப்பேட்டை, விருகம்பாக் கம் என தொகுதியின் அமைப்பு மாறினாலும், பரப்பு பெரிய அளவுக்கு சுருங்கிவிடவில்லை.  

விருகம்பாக்கம் தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளும் அ.தி.மு.க. வசம்தான். எம்.பி.யும் அ.தி.மு.க. மாநகராட்சியும் அ.தி.மு.க. வசம்தான். தடங்கல்கள் ஏதுமின்றி மக்களுக்கு பணிசெய்ய வாய்ப்பு இருக்கும் அருமையான சூழலில், மக் கள் பிரதிநிதிகள் எப்படி வேலை செய்து இருக்கிறார்கள் என்பதை அறிய, மிகவும் ஆவலாகக் களம் இறங்கியது, நக்கீரன் சர்வே குழு. 



களத்தில் இறங்கி வேலை செய்பவர் என்ற பெயர் சி.ராஜேந்திரனுக்கு இருந்தாலும், வெற்றியடைந்த பின் அதற்கான அடையாளமே இல்லை என்கிறார்கள். தாம்பரம் தொகுதிக்கு உள்பட்ட சிட்லபாக்கத்தில் குடியிருக்கும் இவர், தொகுதிப் பக்கம் அதிகமாக வருவதில்லை. காரணம், அ.தி.மு.க.வில் காஞ்சி மத்திய மாவட்டச்செயலாளராக இருக்கும் இவர், கட்சிப் பணிகள் தொடர்பாக, மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு சட்ட மன்றத் தொகுதிகளுக்குப் போய் வருகிறார். அதனாலோ என்னவோ தென்சென்னையில் இவரைப் பார்ப்பது, தொகுதி வாசிகளுக்கு அரிதாக இருக்கிறது. 

தாம்பரம் எம்.எல்.ஏ.வான டி.கே.எம். சின்னையாவுக்கு, அ.தி.மு.க. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செய லாளர், அமைச்சர் பதவி கிடைத்த  வுடன் அவருக்கும் ராஜேந்திரனுக்கும் ஈகோ பிரச்சினை தலைதூக்கியது. இதனால், தென்சென்னை மக்களவைத் தொகுதியில் சோழிங்க நல்லூர் சட்டமன்றத் தொகுதி இருந் தாலும், அ.தி.மு.க.வின் காஞ்சி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்டது என்னும் நிலையில், அமைச்சர் சின்னையா கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் ராஜேந் திரனைப் பார்க்கமுடிவதில்லை. 


சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.கந்தன். தொகுதியில் எங்கு திரும்பினாலும், இவர் பெயர்தான். ஆரம்பம் முதல் முடியும்வரை, ஐ.டி. கம்பெனிகள் பரவியிருக்கும் தொகுதி இது. ரியல் எஸ்டேட், பெரிய பெரிய கம்பெனி களின் மூலம் தனி வருமானம் கிடைக்கும் சென்னையின் முக்கிய தொகுதி இது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 10ஆயிரம் இலவச பட்டாக்களில், இவர் தொகுதியில் மட்டும் 5,500 பட்டாக்களை வாங்கிக் கொடுத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்கிறார். ஆனால், தன் ஆதரவாளர்களுக்கு மட்டும்தான் அந்த பட்டாக்களை வாங்கித் தந்தார் என்கிறார்கள், ர.ர.களே! 

உயரமான கட்டிடங்களாக இருக்கும் பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலைகளில், நிலம், மனை விற்பனையில் இவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்துவிட முடியாது என்று ஏகமனதாக சான்றி தழ் கொடுக்கிறார்கள், தொகுதிவாசிகள். கல்லுகுட்டை, பனையூர், உத்தண்டி, சோழிங்கநல்லூர் பகுதிகளில், கந்தன் மீது கடுமையாக அதிருப்தி தெரிவிக்கின்றனர். 


நான்கு முறை தென்சென்னை எம்.பி.யாக இருந்த டி.ஆர்.பாலு செய்த பணிகளைப் பற்றிய விளம்பரப் பலகைகள் அதிகம் தென்படுகின்றன. அப்போது, கோவிலம்பாக்கத்தில் பாலுவின் தொகுதி நிதியில் ஒரு சமுதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. அதில், பாலுவின் பெயரை மறைக்கும் அளவுக்கு, ராஜேந்திரனின் தொகுதி நிதியில் டைனிங் ஹால் ஒன்றைக் கட்டி, பெரிதாக அறிவிப்பு செய்திருப்பது, பார்ப்பவர்களின் கவனத்தை கட்டாயம் ஈர்க்கும். 

தாம்பரத்துக்கு வடக்கில் மயிலாப்பூர் வரை உள்ளவர்கள், ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்குதான் வரவேண்டும். புறநகர்ப் பகுதிகளாக இருந்து இப்போது வளர்ச்சி அடைந்துள்ள வேளச்சேரி, மடிப் பாக்கம், சோழிங்கநல்லூர்வரையிலான பகுதி மக்களுக்கு, மாவட்ட தலைமை மருத்துவ மனை அளவுக்கு சிகிச்சை வசதி செய்துதர வேண்டும் என்றும், மடிப்பாக்கத்தில் பேருந்து நிலையம் அருகில் இருந்த பெரிய குளத்தையே காணவில்லை எனும் அளவுக்கு ஆக்கிரமித்து விட்டார்கள். அந்தக் குளத்தைக் கண்டுபிடித்து, செம்மைப்படுத்தினால், ஆழத்துக்குப் போன நிலத்தடி நீர் மீண்டும் கிடைக்கும் என்றும் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள், அந்த ஏரியாவில். 


வேளச்சேரி எம்.எல்.ஏ.  அசோக்கைப் பற்றிக் கேட்டாலே, பதில் சொல்வதற்கு பலரும் அஞ்சுகிறார்கள். இவரின் பெயரைச் சொல்லி உலாவும் ‘மனிதர்கள்தான், காரணம். இவர்களால், பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியினரே தாக்கப்படுவதாக, நிறைய புகார்கள். இவர்கள் தொடர்பான புகார் என்றால், வேளச்சேரி போலீஸ்நிலையத்தில் எடுப்பதில்லை என்றும் சிலர் கூறியது, அதிர்ச்சி அளிக்கிறது.  

நிலம், மனை தொழில்காரர்களையும் இந்த கும்பல், சர்வாதிகாரம் செய்கிறதாம். அசோக் பெயரைச் சொல்லி அடாவடி செய்யும் கும்பல், பல பார்களை வைத்துள்ளது. அண்மையில், ஒரு பாரில் அப்பாவி வட இந்தியர் ஒருவரை சர்வ சாதாரணமாக கொன்றுபோட்டதும், இந்த கும்பல்தான் என்கிறார்கள், தொகுதியில்! 


சரவணன், மூர்த்தி என்ற பெயர்களை நினைவூட்டும் இரண்டு கவுன்சிலர்களின் கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசத்தின் பின்னணியில், எம்.எல்.ஏ. அசோக் பெயர்தான் பலமாக அடிபடு கிறது. இதனால், ரவுடிகளின் அட்டகாசத்தை எதிர்க்க யாரும் முன்வருவதில்லை. பின்னணி இப்படி இருப்பதால், வேளச்சேரி தொகுதியில் ரவுடிகளின் ராஜ்ஜியத்தைக் கட்டுப்படுத்த முடிய வில்லை என்கிறார்கள், காக்கிகள் வட்டாரத்தில். 

வாரத்துக்கு ஒரு முறையாவது மக்களைச் சந்திக்குமாறு, ஜெயலலிதா ஒரு முறை கூறி யிருந்தார். அப்படி ஒரு விசயம் நடந்ததா என்கிற அளவுக்குதான், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. ராஜ லட்சுமி செயல்படுகிறார்(!). வழக்கறிஞரான இவரை தொகுதியில் காணவில்லை என்று போஸ்டர் அடிக்காத குறைதான்! பல மாதங்களுக்கு முன்பு இவரை போயஸ் தோட்டத்துக்கு அழைத்த ஜெ. டோஸ் விட்டார். அதற்கு முன்புவரை, தொகுதியில் எங்கு செங்கல் தென்பட்டாலும், அங்கு ஆஜர் ஆகிவிடுவார். அதைத் தவிர, தினமும் போயஸ் தோட்டத்திலும் தலைமைச்செயலகத்திலும் ஜெ. வரும்போதும் போகும்போதும் அவரைப் பார்த்து கும்பிடு போட்டு வந்தார். ஜெ.வால் பொறுத்துக் கொள்ள முடியாமல், தோட்டத்துக்கு அழைத்து டோஸ் விட்டார் என்பது இன்றைக்கும் மறக்கப்படாத கதை. 


அந்த சம்பவத்துக்குப் பிறகு, தொகுதிக்குள் அதிகம் வராமல், அமைதி காத்துவருகிறார். இன்னொரு காரணமும் சொல்கிறார்கள், கட்சிக்காரர்கள். மைத்ரேயனின் ஆதர வாளரான மயிலை பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன்தான், தொகுதி முழுவதிலும் கண்ட்ரோல். கட்சி நிகழ்ச்சிகளில் மைத்ரேயன் பெயரைப் பெரிதாகப் போட்டு, எம்.எல்.ஏ. பெயருக்கு முன்பு தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்கிறாராம். அதுபோன்ற நிகழ்ச்சிகளில் ராஜலட்சுமி கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிடுகிறார். 

குறிப்பிட்ட பிரிவினர் கூறும் புகார்கள் தொடர்பாக மட்டும், தீர்த்து வைக்கிறார் என்கிற குற்றச்சாட்டையும் பல இடங்களில் கேட்கமுடிந்தது. சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் ராஜலட்சுமியின் பி.ஏ. எனக் கூறி, பலரும் மக்களுக்கு இடையூறு செய்கிறார்களாம். மயிலை தொகுதி முழுக்க ஒரே புகார்க் காண்டம்! 

சென்னையின் முக்கிய வியாபார மையமான தியாக ராயர் நகர் தொகுதியின் எம்.எல்.ஏ. கலைராஜன். இவருக்கும் இதே தொகுதியில் குடியிருக்கும் மேயருக்கும் ஆகாது. இரு வரும் அரசு நிகழ்ச்சிகளில்கூட ஒன்றாகக் காணப்படுவது அரிது. பகுதியில் நிறைந்திருக்கும் வணிகநிறுவனங்களில் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்லி வசூல் ஜரூராக நடக்கிறது. கட்டப்பஞ்சாயத்துக்கும் குறைவு இல்லை. இந்த சங்கதிகளை மேயர் கண்டுகொள்வதே இல்லை. சிக்குப்படாமல் மாநகராட்சி மூலம் மேயர் செய்யும் நடவடிக்கைகளால், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.வுக்கும் நல்ல பெயர். இந்தப் பகுதியில், எங்கு கட்டி டம் கட்டினாலும், அங்கு எம்.எல்.ஏ. வின் ஆட்கள் வந்துவிடுகிறார்கள் என்று ஒருமித்த குரலில் சொல்கிறார் கள். குடிநீர், கழிவுநீரகற்றல் பிரச்சினை கள் பற்றி புகார் செய்தால், கவுன்சில ரிடம் ஒரு வார்த்தை சொல்லுங்க என அதிகாரிகளே சொல்கிறார்களாம், தி.நகர் வட்டாரத்தில். தி.நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு தினமும் கலைராஜன் வருகிறார் என ஒருபக்கமும், ’ஆமா மாம், மக்கள் பணிகளை கவனிக்க மட் டும்தான் அவரு வாராரு’என்று பொடி வைத்தும் பேசுகிறார்கள், கட்சிக்காரர் கள். பத்தாயிரக்கணக்கான குடிசைகளுக்கு இலவச மனைப்பட்டா, தி.நகர் பேருந்துநிலையத்தைப் புதுப்பிப்பது, வணிகர் களுக்கு பல அடுக்கு பார்க் கிங் வசதி, நடைபாதைக் கடை வணிகர்களுக்கு தனி கடை அமைத்துத் தருவது போன்றவை, வாக்குறுதி களாக மட்டுமே இருக்கின் றன என்று கலைராஜனின் செயல்பாட்டுக்கு சர்டிஃபி கேட் தருகிறார்கள். 


சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. செந்தமிழனுக் கும் மேயருக்கும் ஏழாம் பொருத்தம். இதனால், எம்.பி., எம்.எல்.ஏ., கவுன் சிலர்கள் ஒத்துழைப்பாக இருந்து பணிகளைச் செய்வதில்லை என ஆளும் கட்சியினரே புலம்புகிறார் கள். ஜாஃபர்கான்பேட்டை போன்ற சில இடங்களில் மட்டும் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளைப் பார்க்க முடிகிறது. அமைச்சராக இருந்தபோது தொகுதியில் வலம்வந்தவர், அதன் பிறகு சுருதியைக் குறைத்துக் கொண்டார். குறிப்பிட்ட சில கவுன்சிலர்கள் அழைக் கும் இடங்களுக்கு மட்டும் வந்துபோகிறார் என்கிறார் கள். பார்க்க சாதுவாக இருக்கும் செந்தமிழனின் பெயரைச் சொல்லி, கட் டப்பஞ்சாயத்து நடப்ப தாகச் சொல்லி, ஆச்சர்ய மூட்டுகிறார்கள். 

விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி யைப் பற்றிக் கேட்டாலே, அருவியாய்க் கொட்டு கிறார்கள், அதிருப்தியை. பொதுப்பணி செய்வதற் காக நாங்கள் தேர்ந்தெடுத் தால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்குப் பின்னால் போவதுதான், பார்த்தசாரதி செய்யும் பொதுவான பணியாக இருக்கிறது’ என்கிறார்கள், தொகுதியில் எந்த பாகுபாடும் இல்லாமல்.’’ 

கோயம்பேடு மார்க்கெட் அமைந்திருப்பது, இந்தத் தொகுதியில் தான் தினமும் 50ஆயிரம் பேராவது வந்துபோகும் இடம் இது. அவசரத்துக்கு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனை இல்லை. எப்போதுமே சாலைகள் இங்கு மோசமாகத்தான் இருக் கிறது. குப்பைகளை சரியாக அகற்றுவது இல்லை. தொகுதியின் பல பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவதை எப்போதும் பார்க்கமுடியும். கழிவுநீரை அகற்ற உடனடியாக துணை பம்பிங் நிலையம் அமைக்கவேண்டும். கலைஞர் கருணாநிதி நகர், நெசப்பாக்கம் பகுதிகளில், கழிவு நீர் அகற்றும் பணி யைச் செய்யும் தனியார் நிறுவனம், அதைச் சுத்திகரிக் காமல், அடையாற் றில் விடுகின்றது. 

இதனால், தொற்றுநோய் பரவுகிறது. உள் புறச்சாலைகள் படு மோசமாக இருப்ப தால், விபத்துகள் தினசரி நிகழ்வுகள் ஆகிவிட்டன. எம்.ஜி. ஆர். நகர், சூளைப் பள்ளம் ஆகிய இடங்களில் குடிநீர் வரியைக் கட்டாவிட்டால், நட வடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், குழாய்மூலம் இங்கு தண்ணீர் வருவதே இல்லை. பணம் கொடுத்து லாரி தண்ணீர்தான் வாங்க வேண்டியிருக்கிறது. அன்னை சத்யா நகர், சாலிகிராமம், தசரதபுரம், காந்தி நகர், விஜயராகவபுரம், சேமாத்தம்மன் செக்டார், மஜீத் நகர் ஆகிய பகுதிகளில் குடிமனைப் பட்டா தருவதாக வாக்குறுதி மட்டும் தரப்பட் டது’’என பிரச்னைகளைப் பட்டியலிடும் வாக்காளர்கள், எம்.எல்.ஏ.வைத் தொடர்புகொண்டால், தலைவரோட இருக்கேன் என்றுதான் பெரும்பாலும் பதில் சொல்கிறார். 

தே.மு.தி.க.வின் தலைமைநிலையச் செயலாளர் என்பதால், கட்சி அலுவலகத்திலும் விஜயகாந்த்தின் பயணங்களிலுமே பார்த்தசாரதி ஆஜராவதாக தொகுதி மக்கள் கொதிக்கிறார்கள். எம்.எல்.ஏ.வே வராவிட்டால், அரசுப் பணிகள் ஒழுங்காக நடக்குமா? என்று நம்மிடம் கேட்கிறார்கள், விருகை தொகுதிவாசிகள். 

தென்சென்னை மக்களவைத் தொகுதி நிலவரம் இப்படி இருக்க, எம்.பி. ராஜேந்திரன் என்ன செய்தார் எனக் கேட்க, அவரைத்  தொடர்பு கொண்டோம். இரண்டு முறை பி.ஏ. பேசினார். மூன்றாவது முறைதான், எம்.பி. பேசி னார். ""சார்... பொதுவாக வரும் தேர்தல் பற்றி தலைமைக் கழகத்தில் இருந்து மட்டும்தான் பேட்டியெல்லாம் கிடைக்கும். எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 70% வேலைகளை செய்து முடித்துவிட்டேன். மேலும், நிதி வந்தது, மீதமுள்ள வேலைகளும் முடித்துவிடுவேன். மத்திய அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி என்பதால் சிறப்பு நிதியோ, திட்டமோ எதுவும் எங்களுக்கு இல்லை. மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாம வேலை செஞ்சிட்டுதான் வரேன்'' என்று பேசிக்கொண்டே இருக்கும்போது, சட்டென இணைப் பைத் துண்டித்தார்  சிட்லபாக்கம் ராஜேந்திரன்.

ad

ad