புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

உதயன் பத்திரிகைக்கு எதிரான டக்ளஸின் வழக்கை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்ட யாழ். நீதிமன்றம்
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ரூபாய் 500 மில்லியன் நட்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஒருதலைப்பட்ச விசாரணைக்கு உத்தரவிட்டு யாழ் மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா
அவர்கள் இன்று தீர்ப்பு வழங்கினார்.
உதயன் பத்திரிகையில் தன்னை அவமானப்படுத்தும் வகையில் செய்தி பிரசுரித்தமையால் தனக்கு பெரும் அவமானமும், மனச்சஞ்சலமும் ஏற்பட்டதாகத் தெரிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த நிறுவனத்திடம் ரூபாய் 500 மில்லியன் நட்டஈடாக பெற்றுத்தருமாறு கோரும் வழக்கொன்றை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்குத் தொடர்பான நீதிமன்ற அழைப்பாணைக் கட்டளை எதிராளிக் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் ஏற்கனவே அறிக்கையிடப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு கடந்த ஜூன் 28 ஆம்; திகதி நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது அன்றையதினம் குடியியல் நடவடிக்கை சட்டக்கோவையின் பிரமாணங்களுக்கு அமைவாக எதிராளிக் கம்பனியானது நீதிமன்றத்தில் சட்டபூர்வமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத காரணத்தினைச் சுட்டிக்காட்டி அவ்வழக்கை வழக்காளி சார்பாக ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி யு. அப்துல் நஜீம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கைக்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக அன்றையதினம் உதயன் பத்திரிகைக்கு எதிரான மேலும் இரு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு வந்திருந்த சட்டத்தரணி கணேசராஜா அவர்கள் மாவட்ட நீதிபதி முன்னிலையில் வாதப்பிரதிவாதம் மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பான தனது தீர்ப்பை ஜூலை 09ம் திகதி தெரிவிப்பதாக அறிவித்து அன்றையதினம் மாவட்ட நீதிபதி அவர்கள் அவ்வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இவ்வழக்கில் தனது தீர்ப்பை இன்று வழங்கிய மாவட்ட நீதிபதி அவர்கள் வழக்காளி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிரேஸ்ட சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இவ்வழக்கை அமைச்சர் சார்பாக ஒருதலைப்பட்ச விசாரணைக்கு நியமித்து தீர்ப்பு வழங்கியதுடன், ஒருதலைப்பட்ச விசாரணையை எதிர்வரும் செப்ரெம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி யு. அப்துல் நஜீம் சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லொஸ் அவர்களின் அனுசரணையுடன் ஆஜராகவுள்ளார்.
இதனிடையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த பத்திரிகைக்கு எதிராக பல வழக்குகளை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad