புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2013



          காவியக் கவிஞன் வாலியின் திடீர் மரணம், இலக்கிய உலகிற்கும் திரை இசை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் வலியையும் தந்திருக்கிறது. அதேசமயம், தமிழறி ஞர்கள்,
தமிழ்க் கவிஞர்கள், வாலியின் உறவினர்கள், அவரது நண்பர்கள், அவரின் சமகால போட்டி யாளர்கள், அவரது ரசிகர்கள் என பல தரப்பினரும் மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். அது, பல தருணங்களில் கோபமாகவும் வெடித்துக் கிளம்புகிறது. காரணம்... வாலிக்கு எந்த மரியாதையையும் ஜெயலலிதா அரசு செய்யாததுதான். இந்தக் கோபம், கொட்டும் மழையில் கவிஞர் வைரமுத்து நடந்தே வர வாலியின் இறுதி ஊர்வலம் தொடங்கியதிலிருந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது.

இதுகுறித்து கவிஞர்கள் பலரிடமும் பேசினோம். அவர்களின் கனத்த மனத்தை நம்மிடம் இறக்கி வைத்தனர். எம்.ஜி.ஆரால் வளர்க் கப்பட்டவர் கவியரசு நா.காமராசன். அவரை நாம் சந்தித்தபோது, ""எம்.ஜி.ஆருக்காக கருத்தாழமிக்க கொள்கை பாடல்களை அதிகம் எழுதியவர் வாலிதான். மக்களின் தலைவனாக எம்.ஜி.ஆர். உருவாவ தற்கு வாலியின் வரிகளே அதிகம் உதவின. கவிஞர்கள், இந்த நாட் டின் கொடைகள் என கருத்தியல் கொண்டவர் எம்.ஜி.ஆர். அதனால் தான் கண்ணதாசன் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை கிடைத்தது. அதை செய்தவர் எம்.ஜி.ஆர். அரசவைக் கவிஞராக கண்ணதாசன் இல்லாமல் இருந்திருந்தாலும் அரசு மரியாதையை எம்.ஜி.ஆர். செய்திருப்பார். கவிஞர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த பற்றுதல் அப் படி. அதே போல, தி.மு.க. ஆட்சியின்போது மறைந்த உவமை கவிஞர் சுரதாவுக்கு அரசு மரியாதை செலுத்தியது. அவ ரது நினைவு நாளில் அவரின் சிலையை நிறுவி அமைச்சர்கள் மரியாதை செலுத்தும் நிகழ்வாகவும் நடத்தியது தி.மு.க. அரசு.

அந்த வகையில், அதே அரசு மரியாதை வாலிக்கு கிடைத்திருக்க வேண்டும். கிடைக் காதது எனக்கு மன வலியைத் தருகிறது. இத்தனைக்கும் வாலியின் பாடல்களை ஜெயலலிதா வாயசைத்துப் பாடியவர்தான். வாலிக்கு மரியாதை செய்து இந்த அரசு பெருமைத் தேடிக் கொண்டிருக்க வேண்டும். மரியாதை செய்யாதது இந்த அரசுக்குச் சிறுமை. மரியாதை செய்யாததற்கு ஜெயலலிதாவிடம் காரணங்கள் இருக்கலாம். அது, என்னவென்று எனக்குத் தெரிய வில்லை'' என்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமானிடம் நாம் பேசியபோது, ""மூன்று முதலமைச்சர்களுக்குப் பாடல் எழுதியவர் வாலி. இரண்டு முதலமைச்சர்களால் மரியாதைக்குரியவராக மதிக்கப்பட்டவர். பாடலாசிரியர்களில் மூத்தவர் வாலி. "அம்மா என்றால் அன்பு' என்று இன்றைய முதல்வருக்கு சொல்லிக் கொடுத்தவர். ஆனால், கற்க வேண்டியவர் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. வேறு எந்த அரசாக இருந்தாலும் வாலிக்கு அரசு மரியாதைக் கிடைத்திருக்கும். ஆனால், இது மரியாதை தெரியாத அரசாக இருக்கிறது'' என்றார் அழுத்தமாக.

அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத் தலைவரும் முன்னாள் அரசவைக் கவிஞரு மான புலவர் புலமைப்பித்தனிடம் பேசிய போது, ""ஒருவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதற்காக அவ ரின் மரியாதை குறைந்து விடப் போவதில் லை. அதேசமயம், அரசு மரியாதை கொடுக் கப்பட்டால் அவரின் மரியாதை உயர்ந்து விடும் என்றும் அர்த்தமில்லை'' என்கிறார்.

அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச் சாளரும் முன்னாள் அரசவைக் கவிஞரு மான முத்துலிங்கம், ""82 வயது கடந்தும் திரைப்படப் பாடல் எழுதியவர் என்றால் வாலி ஒருவர் தான். கண்ணதாசனை விட வும் இந்த சமுதாயத்தால் அதிகம் கொண் டாடப்பட வேண்டியவர் வாலி!'' என்றார்.

கவிஞர் காசிமுத்து மாணிக்கம், ""ஒவ் வொரு அரசியல் கட்சிக்கும் கொள்கைப் பாடல்கள் உண்டு. அந்த பாடல்கள் திரை இசைப் பாடல்களாக இருக்காது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு மட்டும்தான் திரை இசைப் பாடல்களே கட்சியின் கொள்கைப் பாடல் களாகவும் இருந்தது; இருக்கிறது. எம்.ஜி.ஆர். பாடிய கொள்கைப் பாடல்களில் அதிகம் எழுதியவர் வாலி. இன்றைக்கும், தேர்தல் காலங்களில் எம்.ஜி.ஆரின் கொள் கைப் பாடல்களே கட்சியின் கொள்கைப் பாடல்களாக ஒலிபரப்பாவதை கேட்க முடியும். அப்படி, எம்.ஜி.ஆருக்காகவும் அ.தி.மு.க.வுக்காகவும் கொள்கைப் பாடல் களைத் தந்த வாலியை, வேறு எந்த கட்சித் தலைமையையும்விட, அ.தி.மு.க. தலைமை தான் தூக்கிச் சுமந்திருக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதாவால் வர முடியாத நிலை இருந்திருக்குமானால் மூத்த அமைச் சர்கள் சிலரை அனுப்பி வைத்தாவது அரசு மரியாதை செய்திருக்க வேண்டும். வாலியோடு நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில் எனக்கு இந்த ஆதங்கம் உண்டு.

தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் நெருக்கமானவர் வாலி என்பதால் அரசு மரியாதையை கொடுக்காமல் ஜெயலலிதா விட்டிருக்கலாம். ஆனால், வாலிக்கு அர சியல் தெரியாது. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். கலைஞரை புகழ்ந்து எழுதிய அவரது பேனாதான் மூப்பனா ரையும் விஜயகாந்த்தையும் புகழ்ந்து எழுதியது. 2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே, "ரங்கநாயகி' என்ற தலைப்பில் ஈழப் பிரச்சினையை மையப் படுத்தி... "பொறுத்தது போதும் எனப் பொங்கி எழுந்தாள்; அவள் தாள்தான் இன்று அனைத்துத் தமிழரும் தொழுந் தாள். சான்றோர் சபையைக் கூட்டி போர்க்குற்றம் என கூறினாள்; பொருளா தாரத் தடை கோரினாள். வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள் வாழ்த்துகிறார்கள் இன்று எங்க நாயகிதான் அந்த ரங்கநாயகி என்று' என ஜெ.வை புகழ்ந்து எழுதினார் வாலி. அதனால் அவருக்கு அரசியல் தெரியாது. வாலிக்கு மரியாதை செலுத்தாதன் மூலம் பெருத்த அவமானத்தை தேடிக் கொண்டிருக்கிறது ஜெ. அரசு'' என்கிறார் மிகவும் அழுத்தமாக.

வாலிக்கு அரசு மரியாதை கொடுக்கப்படாதது குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்புகளில் விசாரித்தபோது, ""கலைஞ ருக்கு நெருக்கமானவர் என்பதை தவிர வேறில்லை. கலைஞ ருக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில்... "கொடநாடு, அது கொடாநாடு' என்றார் வாலி. மற்றொரு கவிதையில், "நீ நாடாளுகின்றாய் நான்காம் தடவை. உன்னை இனி வெல்லு மோ புடவை'. இன்னொரு கவிதையில், "ஆண்டு 2007-ல் எமனிடமிருந்து என்னை மீட்டாய். அதற்கு முன் 2006-ல் ஓர் உமனிடம் இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்!' -இப்படி எழுதியவர் வாலி என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

எம்.ஜி.ஆரை கண்ணதாசன் விமர்சனம் செய்திருக்கிறார். கலைஞரை சுரதா விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதாவோ?

-இரா.இளையசெல்வன்

ad

ad