புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2013


இலங்கை அகதிகள் முகாம்களின்
நிலைமை மாறுமா?
 

உலகத்தில் சிறிய அழகான தீவுகளில் இலங்கையும் ஒன்று. தொழில் வளம், தேயிலை ஏற்றுமதி, கடல் போக்குவரத்து, அழகான திரிகோண மலை, இயற்கை துறைமுகம், உலகமே போற்றும் யாழ்ப்பாணம் நூலகம். மலைகள் போன்ற இயற்கை, செயற்கை செழித்த இலங்கை தீவுகள்.


இன்று சில பகுதிகள் சுடுகாடுகள் போல் காட்சி அளிக்கிறது. அதிலும் இன்று மறுசீரமைப்பு என்ற பெயரில் ஈழத்தமிழர்களை அகதிகளாக வேறு நாட்டிற்கு அனுப்பிவிட்டு அனைத்தையும் சிங்களவர்கள், முஸ்லீம், புத்த சிற்பிகள் இவர்களுக்கு அதிகபடியான வீடுகளை கட்டித்தர இந்தியா பண உதவியும், பன்னாட்டு அமைப்புகளின் நிதி உதவியும் பெரும்பங்கு வகிக்கின்றது. 
ஈழத்தமிழர்களை பொறுத்த வரை எங்கேயும் நிலையான ஒரு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். 1990ல் நடந்த உள்நாட்டு போரினால் இலங்கையிலுள்ள தமிழர்கள் இடம் பெயர்ந்து திக்குத் தெரியாமல் சென்றனர். 95 சதவீத மக்கள் தமிழகத்தை தேடி வந்தனர். 

தமிழகத்திலுள்ள கடலோர பகுதிகளான ஜெகதாப்பட்டிணம் முதல் இராமேஸ்வரம் வரை எங்கு படகு கரை ஒதுங்குகிறதோ அங்குள்ள காவல் நிலையங்களில் விசாரித்து தமிழகத்தில் 150க்கு மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 
20 முதல் 23 வருடங்கள் அகதிகளாக வாழ்ந்து விட்டோமே இனிமேல் என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருந்த அகதிகளுக்கு ஆஸ்திரேலியா ஒரு அறிக்கை வெளியிட்டது.  இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களுக்கு உடனே குடியுரிமை கொடுக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டதன் காரணமாக ஆசைப்பட்டு இலங்கை அகதிகள் மட்டுமில்லாமல் வங்கதேச அகதிகளும் போட்டி போட்டு கொண்டு சென்றார்கள். 
8ல் ஒரு பங்கு ஈழத் தமிழ் மக்கள் எங்குதான் காணாமல் போனார்கள் என்று இதுவரைக்கும் தெரியவில்லை. அழகிய தீவுக்குள் பிறந்து கடலிலே உயிர் இழக்கின்றனர் என்பதை பார்க்கும் போது பெரும் சோதனையாக உள்ளது. 
2004ம் ஆண்டில் டிசம்பர் 26ம் தேதி இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எனும் ஆழி பேரலையின் தாக்குதலில் 20,000 ஈழத்தமிழர்கள் உயிர் இழந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமின்றி 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரினால் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு மேலும் இலங்கையில் போய் தமிழர்கள் குடியேறினாலும் பயந்த வாழ்க்கை தான் வாழ்வார்கள். உலகத்திலேயே தமிழர்கள் 62க்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழர்களுக்கு என்று சொந்தமான நாடு ஏதும் உண்டா?  தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் தமிழர்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  எந்த நாட்டிலும் தமிழ் வளர்ச்சிக்காக பேசுபவர்கள் தமிழ் இனத்திற்காக பேசுவது இல்லை.  இனியாவது இலங்கை அகதிகள் இன்னல்கள் தீருமா? 
இதுபற்றி புதுக்கோட்டை தோப்புக்கொல்லை முகாமை சேர்ந்த சமூக ஆர்வலர்  பி. சோமன் கூறியது.
நான் இலங்கையில் இருந்து வரும் போது 8 வயது சிறுவன் எங்கள் சொந்த ஊர் திரிகோணமலை பகுதியில் உள்ள கன்னியா என்ற இடம்.  இந்த பகுதியில் இராவணன் கோபம் கொண்டு வாளால் குத்திய இடத்தில் தோன்றிய ஏழு இயற்கை கிணறுகள் உள்ளன. அதாவது சுடு தண்ணீர், குளிர் தண்ணீர் போன்ற 7 வகையான கிணறுகள் உள்ளன. எவ்வளவுதான் மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் அள்ள அள்ள ஒரே அளவு தண்ணீர் இருக்கும்.  
அதையெல்லாம் விட்டுவிட்டு இங்கு வந்து எந்த முன்னேற்றம் இல்லாமல் தவிக்கின்றோம். இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம், வங்கியில் கணக்கு திறப்பு, நிலம் வாங்குதல் போன்ற எந்த உரிமையும் இல்லாமல் வாழ்வில் போராட்டங்களை அனுப்பிவித்து கொண்டு இருக்கிறோம். இந்த இன்னல் மட்டுமல்ல மாதம் தோறும் வழங்கும் குடும்ப உதவித்தொகையின் போது வருவாய்த் துறை அலுவர்கள் மூலம் ஒரு குடும்பத்தில் 7 நபர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் அனைத்து நபர்களும் அந்த சமயத்தில் வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். சில நபர்கள் வேலையின்மை காரணமாக வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  1 முதல் 5 வரை தேதிகளில் வழங்க வேண்டிய மாதாந்திர குடும்ப உதவிதொகையை கால தாமதமாக வழங்குகின்றனர்.  அதிலும் திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் அதிகமாக வழங்குகின்றனர்.  வெளியூர் சென்று இருப்பவர்கள் வேலை தொடங்கும் முதல் நாளில் வேலைக்கு வரவில்லை என்றால் முதலாளி திட்டுகிறார். கடைசி நாளில் ஊதியம் பெறவேண்டும் என்பதால் தான் அங்கு தங்குகின்றனர். 
இதைபுரிந்து கொள்ளாத வருவாய்த்துறையினர் அந்த நபர் வந்தால் தான் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.  சில குடும்பங்களில் உடல்நிலை சரியில்லாத முதியோர்கள், கல்லூரி படிப்பின் காரணமாகவும் பெரிய குடும்பம் காரணமாகவும் கொடுக்கப்பட்ட பத்துக்கு பத்து அளவு வீடு பற்றாக்குறை காரணமாக சில குடும்பங்கள் வெளியில் வாடகைக்கு வீடு எடுத்து 5 கி.மீ க்குள் தங்குகின்றனர்.  இவர்களும் பெரிய துன்பத்திற்கு ஆளாகின்றனர்.  முகாம் உள்ளேயே தங்க வேண்டும் என்று அடிக்கடி வருவாய்த்துறை வற்புறுத்தல் காரணமாகவும் அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு எங்காவது பிரதமர், ஜனாதிபதி வந்தாலும் உடனே தணிக்கை என்ற பெயரில் ஒன்று முதல் மூன்று நாட்கள் வெளியே போக முடியாத நிலைமையில் உள்ளோம்.  எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள முக்கிய கட்சிகள் வலியுறுத்துகின்றனர்.  ஆனால் அதற்கு தேலையான நடவடிக்கையை யாரும் கவனத்தில் எடுக்கவில்லை என்று கூறினார். 
-செம்பருத்தி

ad

ad