புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2013

tnainfo-navaneetham-pillai-

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அவரும் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொண்டதாகவும் த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
சுதந்திரமானதொரு சர்வதேச விசாரணை 
‘இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுவரையில் நியாயமானதொரு விசாரணை நடத்தப்படவில்லை. உள்ளுர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை
இல்லை. திருகோணமலை மாணவர்களின் படுகொலை, மூதூர் படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் நீதியானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை.
அவை போன்றே யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உள்ளுர் விசாரணைகளும் நீதி, நியாயமற்று நடத்தப்படும். அதனால், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுதந்திரமானதொரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நவநீதம்பிள்ளையிடம் இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டதாக’ சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 
அத்துடன், ‘தற்போது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்க ஆதரவுடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பிலும் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும்’ சுமந்திரன் எம்.பி குறிப்பிட்டார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை
அத்துடன், ‘கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோர் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மூன்று வாக்குறுதிகள் தொடர்பிலும் அவை இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்பது தொடர்பிலும் நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைக்கப்பட்டன.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனியானதொரு விசாரணை நடத்தப்படும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என்ற மூன்று வாக்குறுதிகளை ஜனாதிபதி வழங்கியிருந்தார். இருப்பினும் அவ்வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று எடுத்துரைக்கப்பட்டன’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறினார்.
அபிவிருத்திகளால் பயனில்லை 
‘இவை தவிர, யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எமது மக்களைச் சென்றடையவில்லை. இராணுவ தேவைகளுக்காகவும் அரசியல் நோக்கங்களுக்காகவுமே இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன’ என்றும் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்கப்பட்டன.
இராணுவமயமாக்கலின் விளைவுகள் 
‘யுத்தத்துக்குப் பின்னர் வடக்கு கிழக்கு இராணுவமயமாக்கப்பட்டுள்ளதுடன் இதனால் இவ்விரு மாகாணங்களையும் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். காணி சுவீகரிப்பு, பொதுமக்களின் விவசாயக் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்தல், பாலியல் துஷ்பிரயோகங்கள், கலாசார சீரழிவுகள் என இராணுவ மயமாக்களினால் பல்வேறு பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்’ என்று எடுத்துரைக்கப்பட்டன.
அரசியல் தீர்வு
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தால் இதுவரையில் நியாயமானதொரு அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகளையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. சரியானதொரு பதிலையும் இதுவரையில் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துக் கூறினோம்’ என சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.

ad

ad