புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013




         டந்த இதழில் விஜய்யின் ‘"தலைவா'’படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அரசியல் அதிகாரத்தால் இந்த திரைப்படம் ரொம்பவே பந்தாடப்பட்டு வருகிறது.
முன் அனுமதி பெறாமல் ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 8-ந்தேதி ஜெ.வைச் சந்திக்க விஜய்யும், டைரக்டர் விஜய்யும் கொடநாடு சென்றது ஏன்?nakeeran

‘"தலைவா'’ படத்தை தியேட்டர்களில் வெளியிடக்கூடாது என வாய்மொழியாக காவல்துறை சொன்னதை தியேட்டர் அதிபர்கள் விஜய் தரப்பிற்கு கொண்டு சென்றனர். படத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய மையப்புள்ளியை அறிந்ததால்தான் அங்கு சென்றனர். ஆனால் ஜெ.வை சந்திக்க முடியாமலேயே விஜய் திருப்பியனுப்பப்பட்டார்.

டைரக்டர் விஜய் சென்னை திரும்பிவிட அப்செட்டில் இருந்த விஜய் கோவையிலேயே தங்கினார்.

அரசியல் நெருக்கடிகள் பட்டவர்த்தனமாக இருப்பதை உறுதி செய்துகொண்ட விஜய் மக்கள் இயக்க தலைமையிலிருந்து விஜய் ரசிகர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

"பட வெளியீட்டுக்காக வைக்கப்படும் பேனர்களில் "நாளைய...’ எதிர்கால...’வருங்கால...' போன்ற வாசகங்கள் இடம்பெறக்கூடாது. கடவுள் உருவத்தில் விஜய்யை சித்தரிக்கக் கூடாது. அரசியல் தலைவர்களின் படங்களை பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக தமிழக சட்டசபை மற்றும் பாராளுமன்ற கட்டடங்களின் புகைப்படத்தை பேனர்களில் பயன்படுத்தக்கூடாது. ஆர்வத்தில் எந்த ரசிகனாவது அப்படிப்பட்ட பேனர்களை வைத்தால் சக ரசிகர்களே அந்த பேனரை அகற்றிவிட வேண்டும்'’என்பதுதான் அந்த கண்டிஷன்ஸ்.


கோவையிலிருந்த விஜய் மறுநாள் அங்கிருந்து நாகபட்டினம் கிளம்பினார். வழக்கமாக விஜய்யின் படம் வெளியாகும் போதெல்லாம் முதல்நாள் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்குச் சென்று விஜய்யும், அவரின் குடும் பத்தாரும் வழிபடுவது வழக் கம். விஷயமறிந்து மீடியாக்கள் குழுமிவிட... விஜய் வரவேயில்லை. நாம் மாதா கோயில் வாட்ச்மேன் ஒருவரிடம் விசாரித்தபோது, "தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் கோயிலில் அதிக கூட்டம். இதனால் மாலை பிரார்த்தனைக்குப் பதில் அதிகாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண் டார்'’என்று சொன்னார்.

""எப்பவும் காலையில் நாகபட்டினம் வந்து தங்கி மாலையில் பிரார்த்தனையில் கலந்து கொள்வார் விஜய். இந்த முறை படம் வெளியாகாத பிரச்சினையால் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குக் கூட சொல்லாமல் வந்து போனார். மயி லாடுதுறையில் நாங்க வச்ச பேனரையெல்லாம் கிழிச்சிட்டாங்க. தலைமை பொறுமையா இருக்கச் சொன்னதால் பொறுமையா இருக்கோம்''’என நம்மிடம் சொன்னார் நாகை வடக்கு மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் குட்டி கோபி.

வேளாங்கண்ணியிலிருந்து சென்னை திரும்பிய விஜய்க்கு ‘"தலைவா'’ பட திருட்டு வி.சி.டி.கள் ஆங்காங்கே வெளிவரத் துவங்கி யிருப்பதாகவும், ‘"தலைவா'’ படம் வெளியாகாத தால் கோவை விஜய்ரசிகர் விஷ்ணுகுமார் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்திகள் வர... அதிர்ச்சியானார் விஜய். ‘"திருட்டு வி.சி.டி. மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்'’என நம்பிக்கை தெரிவித்தும், ‘"ரசிகர்கள் யாரும் தவறான முடிவு எடுக்க வேண்டாம்'’என்றும் அறிக்கை வெளியிட்டார்.
பிரச்சினைகள் சுமுகமாகி வரிவிலக்குடன் படம் வெளியாகிவிடும் என தியேட்டர்காரர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் "வரிவிலக்கு இல்லை' என்பதை அரசு ஆணை உறுதி செய்தது.

வணிகவரி இணை ஆணையர் தேவேந்திர பூபதி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குநர் அருள், தமிழ் வளர்ச்சி இயக்க இயக்குநர் கா.மு.சேகர், ஒளிப்பதிவாளர் பாபு என்கிற அனந்தகிருஷ்ணன், இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ், பின்னணிப்பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் சீனியர் நடிகை ராஜஸ்ரீ ஆகியோர் அடங்கிய வரிவிலக்குக் குழு ‘"தலைவா’படம் வரிவிலக்குப் பெற தகுதியில்லாத திரைப்படம்' என பரிந்துரைத்தனர்.  "வசனங்களில் ஆங்கில வார்த்தைக் கலப்பு அதிகம், வன்முறைகாட்சிகளில் ரத்த வெள்ளம், பெண்கள், குழந்தைகள் மனதை பாதிக்கும் காட்சிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளிக்கக் கூடாது' என அவர்கள் சொன்னதால் வரிவிலக்கு தர இயலாது என வணிகவரித்துறை அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோயிஸம் தொடங்கிய காலத்திலேயே தப்பு செய்கிறவர்களை ஹீரோவே தண்டிப்பதுபோல காட்சிகள் வந்துவிட்டது. ஆனால் "தலைவா'’ படத்தில் "சமுதாயத்தை திசை திருப்பும் வண்ணம் கதாநாயகன் சட்டத்தை கையில் எடுக்கிறார்'’ என வரிவிலக்கிற்கு அபத்தக் காரணம் ஒன்றை அரசியல் காரணமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அரசுக்கு வரி கட்டத் தேவை இல்லை என்ப தால் அந்தத் தொகை லாபமாக வரும் என்பதால் படத்தின் விநியோக விலைகள் அதிகப்படியாக இருந்தது. இப்போது ‘வரிவிலக்கு’ விலக்கப்பட்டிருப்ப தால் வியாபாரம் ஆகியிருந்த சிஸ்டத்தில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த வியாபாரப் பிரச்சினைகள் உடனடியாக வெடிக்காவிட்டாலும் விஜய்க்கு சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரங்களில். அரசியல் காரணங்களுக்காக அரசியல் காட்சிகள் இல்லாத, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘"ஒரு கல் ஒரு கண்ணாடி'’ படத்திற்கு அரசு வரிவிலக்கு மறுத்தது. அதை எதிர்த்து உதயநிதி வழக்கு தொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘வரிவிலக்கு’ இல்லை என்றான பிறகு படத்தை வெளியிடும் முயற்சியாக விஜய் தரப்பில் காவல் துறையின் அனுமதியும், பாதுகாப்பும் கேட்கப்பட... ‘"நிறைய்ய தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கும் படத்துக்கு பாதுகாப்பு தரும் அளவிற்கு போலீஸ் ஃபோர்ஸ் இல்லை'’ என மறுத்துவிட்டார்களாம். சுதந்திரதின பாதுகாப்பையும் காரணம் சொல்லியிருக்காங்களாம். கமலின் ‘விஸ்வரூபம்’ வெளியீட்டு பிரச்சினையின் போதும் ‘"அதிக தியேட்டர்களில் வெளியாவதால் பாதுகாப்பு தருவது சாத்தியமில்லை'’ என ஜெ. சொல்லியிருந்தது குறிப் பிடத்தக்கது. "காவல்துறையின் உயரதி காரிகளின் சிக்னல் இல்லாமல் படத்தை வெளியிடமாட்டோம்' என்பதில் தியேட்டர்காரர்களும் மிக உறுதியாக இருக்கிறார்கள்.

’12-ந் தேதி ஜெ. சென்னை திரும்பியதும் அவரைச் சந்திக்க விஜய் தரப்பில் அப்பாய்ன்ட்மென்ட் கேட்கப்படும். பிரச்சினைகள் சரியாகி சுதந்திர தினமான 15-ந் தேதி ‘"தலைவா'’ ரிலீஸாகும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் அரசியல் கோபங்களை தணிக்கும் விதமாக 11-ந் தேதி மாலை விஜய் ஒரு சரண்டர் அறிக்கை வெளியிட்டார்.


""புரட்சித்தலைவி ஜெயலலிதா தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை தந்துவருகிறார்கள். காவேரி பிரச்சினை, என்.எல்.சி. பிரச்சினை, அம்மா உணவகம், மாணவர்களுக்கு லேப்-டாப் என எத்தனையோ திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறார். அவரது வெளிப்படையான செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் எனக்கு எப்போதும் பிடிக்கும். எல்லோருக்கும் நல்லது செய்யும் முதல்வர் "தலைவா'’ படப்பிரச்சினையிலும் தலையிட்டு தமிழகமெங்கும் படம் வெளிவர ஆவன செய்வார்கள். அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்''’என அந்த அறிக்கையில் தெரிவித்தார் விஜய். தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘"தலைவா'’ திட்டமிட்டபடி 9-ந் தேதி ரிலீஸ் ஆனது. படம் குறித்த விமர்சனம் ‘"அப்படி ஒன்றும் சூப்பர் படமாக இல்லை'’ என்பது போல இணைய ஊடகங்களில் தகவல் பரவிவருவதும் விஜய்யை மேலும் கவலைப்பட வைத்திருக்கிறது.

’"அரசியல் நடவடிக்கைகளுக்குச் சமமாக மன்ற நடவடிக்கைகளைச் செய்ய வேண்டாம் என்று சொன்னபோதும் நீங்க அப்படிச் செய்ததால்தான் பிரச்சினையே'’என தந்தையுடன் விஜய் மன வருத்தத்தில் இருப்பதாக ரசிகர்மன்ற புள்ளிகளே பேசிக்கொள்கிறார்கள்.

ஜெ.வைச் சந்திக்க விஜய் மீண்டும் முயற்சி எடுத்து வரும் நிலையில்... அப்பாய்ன் மென்ட் கிடைக்குமா? என கார்டன் வட்டாரங்களில் விசாரித்தோம். 

‘"படத்தில் அரசியல் இருக்கோ இல்லையோ... அது பிரச்சினை இல்லை. கூட்டத்தைக் கூட்டி "மாஸ்' காட்டி ‘மக்கள் செல்வாக்குள்ள பெரிய்ய ஹீரோ’ என எந்த நடிகரும் காட்டிக்கொள்வதை மேலிடம் விரும்பவில்லை. அதனால்தான் படத்திற்கு சிக்கல். விஜய் படம் ரிலீஸாகும்         போது ரசிகர்களிடம் பரபரப்பும், ஆரவாரமும் இருக்கும்! அந்த ஓப்பனிங் மாஸை உடைக்க வேண்டும், விஜய் பெரிய ஆள் இல்லை என்று காட்டவேண்டும், "படம் வெளியாகாவிட்டால் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள்' என விநியோ கஸ்தர்களிடம் விஜய்யின் அப்பா சொல்லிய விஷயமும் மேலிடத்துக்கு வந்துவிட்டது. 

படம் ரிலீஸாகலேன்னா விஜய் ரசிகர்கள் கொந்தளிக்கமாட்டார்கள் என்பதை உணர்த்த வேண்டும்... என்பதுதான் மேலிட விருப்பம். அந்த விருப்பம் நிறைவேறிவிட்டது. இனி விஜய்யை வைத்து படம் தயாரிப்பவர்களும் தயாரிக்க  தயங்க வேண்டும் என்கிற நிலையும் ஏற்பட்டுவிட்டது. அதனால் படம் வெளியாகாத அளவிற்கு கெடுபிடிகள் இருக்காது. அதே சமயம் விஜய்யை முதல்வர் சந்திப்பது என்பது கஷ்டம்தான். ஒரு வாரமாக படம் வெளியாகாத நிலை. இப்போது முதல்வரை விஜய் சந்தித்தபிறகு படம் வெளியானால் ‘படத்திற்கு பிரச்சினை பண்ணியது அரசுதான்’ என்பதற்கு ஆதாரமாகி விடும். அதனால் வாய்மொழியாக ரகசிய உத்தரவின் பேரில் படத்தை வெளியிடாமல் செய்த பாணியில், வாய்மொழியாக ரகசிய உத்தரவின் பேரில் படத்தை வெளியிடச் சொல்வார்கள்'' என்கிறார்கள். 

ஜெயலலிதா ஆர்ப்பாட்டமில்லாமல் தனது அதிகாரத்தை செலுத்தி சகல மட்டங்களிலும் பயத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார்.

ad

ad