புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2013

பின் வரும் வினாக்களுக்கு கலைஞர் பதில் அளிக்க வேண்டும் : ஜெயலலிதா
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்ற பழமொழிக்கேற்ப பல பிரச்சனைகளில்
தி.மு.க. எடுத்த முடிவுகளை மனதில் வைத்துத்தான், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு நான் எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.


இதற்குப் பதிலளித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நான் எப்போது, எந்தத் தேதியில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை கொடுத்திருக்கிறேன்? ஜெயலலிதா தேதியைக் குறிப்பிட்டோ அல்லது ஏடுகளைக் குறிப்பிட்டோ சொல்ல முடியுமா? என்று வினவியிருக்கிறார்.
ஆனால், அதே அறிக்கையில், “உணவுப் பாதுகாப்பு மசோதாவில் நான் துரோகம் செய்துவிட்டேன் என்பதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா காட்டியுள்ள ஒரே ஆதாரம், கழக நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் இந்த மசோதாவை ஆதரித்துக் கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன என்று கூறியிருக்கிறார்.
இதிலிருந்து, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக கருணாநிதி அறிக்கை வெளியிட்டி ருப்பதாக நான் சொல்லவில்லை என்பதை கருணாநிதியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதே அறிக்கையில், டி.கே.எஸ். இளங்கோவன் 22.7.2013 அன்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பேட்டி அளித்ததாகவும், அது ஒரு தமிழ் நாளேட்டில் மட்டும் வெளிவந்ததாகவும் சொல்லப்படுகிறது என கூறியுள்ளார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால், பல்வேறு பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் இந்த செய்தி வெளியாகி உள்ளன என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக, “டி.கே.எஸ். இளங்கோவன் தான் தி.மு. கழகத்தின் ஒட்டு மொத்தப் பிரதிநிதியா?”, அவர் என்ன நாடாளுமன்ற கழகக் குழுவின் தலைவரா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருக்கிறார் கருணா நிதி.
டி.கே.எஸ். இளங்கோவன், தி.மு.க. மக்களவை உறுப்பினராக மட்டுமல்லாமல் தி.மு.க. வின் அமைப்புச் செயலாளராகவும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியைவிட ஒரு படி மேலே இருக்கின்றவர் இளங்கோவன்.
தி.மு.க.வில் உயர் பதவியிலே இருக்கின்ற ஒருவர் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும் என்று பேட்டியளிக்கும் போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் எப்படி இருக்க முடியும்? தி.மு.க. தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இது போன்றதொரு பேட்டியை டி.கே.எஸ். இளங்கோவன் அளித்து இருக்க முடியுமா? அல்லது தன்னிச்சையாக கூறியிருப்பாரேயானால் இது பற்றி பத்திரிகைகளில் செய்தி வெளி வந்தவுடனேயே கருணாநிதி ஏன் மறுக்க வில்லை என்ற கேள்வி தற்போது மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.
கருணாநிதி மேலும் தனது அறிக்கையில், “அந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு பல வாரங்களுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அதாவது 2.8.2013 அன்று தான் அந்த மசோதாவினால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை விளக்கி பிரதமருக்குத் தமிழக முதல்–அமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.
முதல்–அமைச்சரே இத்தனை நாட்களுக்குப் பிறகு, அந்த பாதகங்களை எழுதும் போது, நான் எப்படி அந்த மசோதாவின் பாதகங்களை அறிந்து கொண்டு மசோதாவிற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்க முடியும்? என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆரம்பம் முதலே நான் எதிர்த்து வந்திருக்கிறேன். 2011 ஆம் ஆண்டிலேயே இது குறித்து மாநில அரசின் கருத்துரை கேட்கப்பட்ட போதே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20.12.2011 அன்றே நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். 25.12.2011 அன்று பிரதமர் சென்னை வந்த போதும் இந்த மசோதா மீதான தமிழகத்தின் நிலைப்பாடு குறித்த கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது. 8.2.2012 மற்றும் 9.2.2012 ஆகிய நாட்களில் புது டெல்லியில் நடைபெற்ற மாநில உணவு அமைச்சர்கள் கூட்டத்திலும் தமிழகத்தின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் 27.12.2012 அன்று பிரதமர் தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். கடந்த மே மாதம் நாடாளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டமுன்வடிவு அறி முகப்படுத்தப்பட்ட போதும், இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் 10.6.2013 அன்று டெல்லியில் திட்டக் குழு துணைத் தலைவர் முன்பு நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் இதற்கு எனது எதிர்ப்பினை நான் தெரிவித்தேன்.
இது குறித்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த உடனேயே, இந்தச் சட்டத்தினால் தமிழகத்திற்கு ஏற்படக் கூடிய பாதகங்களை சுட்டிக் காட்டி, 4.7.2013 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை இணைச் செயலாளர் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 62.55 விழுக்காடு ஊரகப் பகுதி மக்களும், 37.79 விழுக்காடு நகர்ப்புற மக்களும் தான் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும் என்ற எண்ணிக்கையை தெரிவித் ததையடுத்தும், 5.8.2013 அன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்பதைக் கருத்தில் கொண்டும், 2.8.2013 அன்று பிரதமருக்கு ஒரு விரிவான கடிதத்தினை எழுதியுள்ளேன்.
அந்தக் கடிதத்தில், இந்த அவசரச் சட்டம் தமிழக மக்களுக்கு எவ்விதத்தில் பாதிப்பளிக்கும் என்பதை விரிவாக சுட்டிக்காட்டி, அதில் என்னென்ன திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்து இருந்தேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை எதிர்ப்பது என்ற ஒரே நிலைப்பாட்டைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, “கடந்த ஒரு மாதமாக முதல்– அமைச்சர் இந்த மசோதா பற்றி ஏன் பிரதமருக்கோ, மத்திய அரசுக்கோ கடிதம் எழுதி எதிர்ப்பினைத் தெரிவிக்க வில்லை?” என்று கருணாநிதி கேட்டிருப்பது உண்மையை மூடி மறைக்கும் செயல்.
“2.8.2013 அன்று தான் அந்த மசோதாவினால் தமிழக மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களை விளக்கி பிரதமருக்குத் தமிழக முதல்– அமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். முதல் அமைச்சரே இத்தனை நாட்களுக்குப் பிறகு அதன் பாதகங்களை எழுதும் போது நான் எப்படி அந்த மசோதாவின் பாதகங்களை அறிந்து கொண்டு, மசோதாவிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் கருணாநிதி.
தேசிய உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த உடனேயே, 4.7.2013 அன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான் அறிக்கை வெளியிட்டேன் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்னுடைய அறிக்கையை பார்த்த உடனாவது இந்த மசோதா குறித்து என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தனது கருத்தினை கருணாநிதி தெரிவித்து இருக்கலாம்.
இல்லை, மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டத்தினை பார்த்து அல்லது தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் கேட்டறிந்து தனது கருத்துகளை தெரிவித்து இருக்கலாம். மாநிலங்களவைத் தேர்தலில் தன் மகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியை அணுகும் கருணாநிதி, தமிழக மக்கள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை அணுக ஏன் தயங்குகிறார்? தமிழக மக்களின் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியை அணுக கருணாநிதிக்கு மனமில்லை போலும்! இந்தத் தருணத்தில் கருணாநிதியின் இரட்டை வேடத்திற்கு அவரது அறிக்கையிலிருந்தே ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கருணாநிதி தனது அறிக்கையில், “இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அந்நியப் பெரும் நிறுவனங்களை அனுமதிக்க முடிவு செய்த இந்திய அரசைக் கண்டித்துக் கூறியிருக்கிறேனே, அது தான் மத்திய அரசை ஆதரிப்பதன் அடையாளமா?” என்று கூறி இருக்கிறார். இந்த விஷயத்தில் கருணாநிதி கண்டித்து அறிக்கை வெளியிட்டார் என்பது உண்மை தான்.
ஆனால், இந்தப் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தி.மு.க. உறுப்பி னர்கள் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதரவாகத் தான் வாக்களித்தனர் என்பதை கருணாநிதி மறுக்க முடியுமா? ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு எதிராக வாக்களித்தது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வாக்கெடுப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதி, “நிலையான மத்திய அரசு கவிழ்ந்து விடக் கூடாது என்ற என்னுடைய கருத்து இந்த வாக்கெடுப்பின் மூலமாக வெற்றி பெற்றிருக்கிறது” என்று கூறியிருந்தார். இது 6.12.2012 நாளிட்ட ‘முரசொலியில்’ வெளி வந்துள்ளது. இது இரட்டை வேடமில்லையா? துரோக மில்லையா? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
தற்போது, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கவில்லை என்றாலும், தி.மு.க.வின் நிலையினை “மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பு”, “மாநிலங்களவை தேர்தலுக்கு பின்பு” என்று தான் பார்க்க வேண்டும். மாநிலங்களவைத் தேர்தலில் தனது மகளை வெற்றி பெறச் செய்வதற்காக காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி தூது அனுப்பிய போது, “பார்லிமென்ட்டில் உணவு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற காங்கிரஸ் முயற்சி எடுக்கும் போது குறுக்கே நிற்கக் கூடாது” என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி விதித்ததாகவும், அதை கருணாநிதி ஏற்றுக் கொண்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. இதில் உள்ள உண்மை நிலையை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.
மேலும் தனது அறிக்கையில், எதற்கெடுத்தாலும் நான் அவரது குடும்பத்தைப் பற்றி பேசுவதாக கருணாநிதி கூறி இருக்கிறார். இவருடைய குடும்பத்தில், மகன்கள், மகள், பேரன் என எல்லோருமே அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். “கழகமே குடும்பம்“ என்றிருந்த நிலைமை மாறி “குடும்பமே கழகம்“ என்று ஆகிவிட்ட நிலையில் குடும்பத்தைப் பற்றி பேசாமல் எப்படி இருப்பது?
கருணாநிதியின் பதில் அறிக்கையில் கூட, தமிழக மக்களுக்கு பாதகமான, துரோகம் விளைவிக்கக் கூடிய தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும் என்ற வாசகங்கள் இடம்பெறவில்லை. மேலும், 10.8.2013 அன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கருணாநிதியின் அறிக்கையில் “இந்த மசோதா காரணமாக தமிழகத்தில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் பொது விநியோகத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஊனம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதிலும்; யாருக்கும் பாதிப்பு கூடாது என்பதிலும்; மாநில உரிமைகள் பறிபோய் விடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில், இந்த மசோதாவின் காரணமாக கிடைக்கக்கூடிய பயன்களையும் இழந்துவிடக் கூடாது.
“உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்த்திடாமல், அப்படியே ஆதரித்தும் விடாமல் அவசர அவசியமான திருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்பக் கொண்டு வர மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே இருக்கின்ற மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே திராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்!” என்று கூறியிருப்பது “பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலையும் காட்டுவது” என்ற பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது.
கருணாநிதியின் இந்த அறிக்கையால் என்ன பயன் விளையப் போகிறது? இந்தத் தருணத்தில் பின் வரும் வினாக்களுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1) உணவு பாதுகாப்பு சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் அரிசி 1 லட்சம் டன் அளவுக்கு குறைக்கப்பட்டுவிடும் என்பது தெரியுமா? தெரியாதா?
2) இந்த மசோதா தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத் திற்கு எதிரானது என்பது உண்மையா? இல்லையா?
3) இந்த மசோதாவில் மூன்று ஆண்டுகளுக்கு தான் கிலோ 3 ரூபாய் விலையில் அரிசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்பது உண்மையா? இல்லையா?
4) இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டால், 5,000 கோடி ரூபாய் செலவில் தற்போது செயல் படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்த 3,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவு ஏற்படுமா? இல்லையா?
5) இந்தச் சட்டம் தமிழக மக்களுக்கு எதிரானதா? இல்லையா?
6) இந்த மசோதாவிற்கான திருத்தங்களை தி.மு.க. நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா?
7) தமிழகத்திற்கு எதிராக உள்ள இதே வடிவில் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா?
நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு மேற்காணும் வினாக்களுக்கு கருணாநிதி பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என்று கூறி உள்ளார்.


ad

ad