புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2013



           ""ஹலோ தலைவரே... போன வாரம்தான் தமிழ்நாட்டு மந்திரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. இப்ப மறுபடியும் மூச்சுத் திணறிக்கிட்டிருக்காங்க.''


""அதற்குள்ளே என்னாச்சு? ''நன்றி நக்கீரன் 

""ஜெ. எப்போது என்ன முடிவெடுப் பாருன்னு மந்திரிகள் யாராலேயும் புரிஞ்சுக்க முடியலை. எம்.பி தேர்தலையொட்டி கொடுக்கப்பட்டிருக்கும் டார்க்கெட்டால் மந்திரிசபை மாற்றத்தில் ஜெ. கவனம் செலுத்தமாட்டாருங்கிற நம்பிக்கையில் கூலா இருந்தாங்க. இப்ப திரும்பவும் சிச்சுவேஷன் ஹாட் ஆகியிருக்கு. சீனியரான ஓ.பி. எஸ்.ஸுக்கு ஏற்பட்ட நிலமையால் சிலர் நிம்மதியை இழந்திருக்காங்க.''

""என்ன நடந்ததாம்?''


""அ.தி.மு.க.வின் மதுரை புறநகர் மா.செ. முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வைத் தி.மு.க விலிருந்து அ.தி.மு.க.வுக்கு கொண்டுவந்தவர் ஓ.பி.எஸ்.தான். உலகப் புகழ்பெற்ற திருமங்கலம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிற்க அவருக்கு சீட் வாங்கிக்கொடுத்தவரும் ஓ.பி.எஸ்.தான். கடந்த தேர்தலில் முத்து ராமலிங்கம் போட்டியிட்டு ஜெயிக்கவும், மா.செவாகவும் ஓ.பி.எஸ்.தான் காரணம். முத்துராமலிங்கம் தன்னோட  மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை ஜெ.வை நேரில் சந்திச்சிக் கொடுத்திருந்தாரு. திரு மணத்துக்கு தலைமைன்னு ஓ.பி.எஸ் பேருதான் இருந்தது. பேனர், போஸ்டர்னு ஓ.பி.எஸ். பேரை பெருசு பெருசா போட்டி ருந்தாங்க. ஜெ. சார்பில் நிச்சயமா சீனியர் அமைச்சர்கள் பலரை அனுப்பிவைப் பாருன்னும் முத்துராமலிங்கம் நினைச்சாரு. ஆனா...''

""ஆனா, என்ன?''

""கல்யாணத்துக்குத் தலைமை வகிக்க வேண்டிய ஓ.பி.எஸ் வரலை. மேலிடத்து உத்தரவாம். மற்றொரு சீனியரான நத்தம் விஸ்வநாதன் யாரும் வருவதற்கு முன்பே வந்து மணமக்களை கைகுலுக்கிட்டுப் போயிட் டார். ஜெ. தன்னோட சார்பில் மந்திரி தங்க மணியைத் தான் அனுப்பி வச்சார். லோக் கல் மந்திரிகள் செல்லூர் ராஜு, இராஜேந் திர பாலாஜி போன்றவங்க கலந்துக்கிட் டாங்க. இது முத்துராமலிங்கத்துக்கு மட்டுமில்லை, ஓ.பி.எஸ்.ஸுக்கும் ஷாக்தான். கட்சி நிர்வாகி வீட்டுக் கல்யாணத்திற்குத் தலைமை வகிக்க முடியலை. சீனியர் அமைச்சரான அவரே  கடந்த 10 நாட் களில் 2 முறைதான் ஜெ.வை நேரில் சந் திக்க முடிந்திருக்குதாம். வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்த சீனியர் அமைச்சரான கே.பி.முனுசாமி ஜெ.வை உடனடியா சந்தித்திருக்கிறார். நால்வர் அணியில் உள்ள மற்றொரு  அமைச்சரான வைத்திலிங்கத் தின் மகன் திருமணம் வரும் 30-ந் தேதி ஜெ. தலைமையில் நடக்குது. தன்னுடன் இருக்கும் சக மந்திரிகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் தனக்கும் தன் ஆட்களுக் கும் இல்லைங்கிறதால ஓ.பி.எஸ். டல்லா இருக்காராம். ஆனாலும் இப்போதைக்கு மந்திரி பதவியில் மாற்றம் எதுவும் இருக் காதுன்னும் நம்பிக்கையா சொல்றாராம்.''

""ஓ.பி.எஸ். மேலே ஜெ. அதிருப்தியா இருப்பதை நம்ம நக்கீரன்தான் முதலில் சொன்னது. தொடர்ந்து அதே நிலை மைதானா?''


""அந்த நிலைமையை மாற்றணும்னு அவரும்  ட்ரை பண்ணினார். விஜயகாந்த்தோட பிறந்த நாளன்னைக்கு தே.மு.தி.க.விலிருந்து மேலும் 3 எம்.எல்.ஏக்களை அ.தி.மு.க பக்கம் கொண்டு வருவதுங்கிறது ஓ.பி.எஸ்ஸோட ப்ளான். ஆனா, அது நடக்கலை. ஏன்னா, ஏற்கனவே தே.மு.தி.க.விலிருந்து விலகி வந்த எம்.எல்.ஏக்களுக்கு என்ன செய்து  தருவதா ஓ.பி.எஸ் சொல்லியிருந்தாரோ, அதை செய்து தரலையாம். அதனால, இப்ப அவரோட வலையில புதுசா யாரும் விழலை. ஓ.பி.எஸ் மேலே மேலிடத்தின் அதிருப்தி அதிகரிச்சிக்கிட்டே இருக் கிறதால அவரும் அவரோட ஆதரவு மா.செக்களும் பதவி பறிபோகுமோங்கிற பதட்டத்தில் இருக்காங்க. 

""மத்தவங்க?''

""பெருசா பதட்டம் இல்லை. ஆனா, எம்.பி தேர்தல் வருவதால சொந்த மாவட்டத்தில் செல்வாக்குள்ள செங்கோட் டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் இவங்களுக்கு மந்திரி யோகம் அடிக்கும்னு ஒரு தரப்பும், அப்படிப் பதவி கொடுத்தால், அவங்களாலதான் அந்த ஏரியாவில் அ.தி.மு.க ஜெயிக்குதுங்கிற இமேஜ் உருவாகிடும்கிறதால இப்போதைக்கு ஜெ. பதவி தரமாட்டாருன்னு இன்னொரு தரப்பும் சொல்லுது. ஜெ. என்ன முடிவெடுப்பாருன்னு தெரியாம அ.தி.மு.க வட்டாரத்தில் ஆளுக்கொரு தகவலை மாற்றி மாற்றி சொல்லிக்கிட்டிருக்காங்க.  அதே நேரத்தில் 2 மந்திரிகள் மேலே சக அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் ரொம்ப பொறாமையா இருக்காங்க.''

""யார் அந்த இரண்டு பேர்?''


""ஒருத்தர், பொதுப்பணித்துறை கே.வி.ராமலிங்கம். இன்னொருத்தர் நெடுஞ்சாலைத்துறை எடப்பாடி பழனிச்சாமி. ஜெ. ஆட்சி அமைந்த 2011-லிருந்து இந்த இரண்டுபேரோட இலாகாவும் இதுவரைக்கும் மாற்றப் படலை. அதனால இவங்க இரண்டு பேர் துறையிலும் இவங்க ராஜ்ஜியம்தான். சக மந்திரிகளோ, மா.செ.க்களோ சிபாரிசு செய்தாலும் சம்பந்தப்பட்ட இரண்டு மந்திரிகளும் மனசு வச்சாதான் எதுவும் நடக்கும். கே.வி.ராமலிங்கத்தைப் பொறுத்தவரை ஈரோட்டைச் சேர்ந்த தனக்கு வேண்டிய 4 கான்ட்ராக்ட்டர் களுக்குத்தான் பெரிய டெண்டர்களைக் கொடுக்கிறாராம்.''

""எடப்பாடி பழனிச்சாமி?''


""அவர்தான் மந்திரி.. ஆனா நிழல் மந்திரியா இருக்கிறவர் சேலம் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர் இளங்கோவன். இவரைத்தான் கட்சிக்காரங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அய்யான்னா, இளங்கோவன்தான் சின்னய்யா. லோக்கல் டெண்டர்களை இவர்தான் முடிவு செய்வாராம். மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு 3 தொகுதிகளும் இவர் கண்ட்ரோலில்தானாம். ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருது. இறந்துபோன எம்.எல்.ஏ பெருமாளின் மகனும், கட்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளருமான ராஜேஷ்கண்ணாவை நிறுத்தலாம்னு பெரும்பாலான கட்சிக்காரங்க நினைக்கிறாங்க. இளங் கோவனோ பெருமாள் குடும்பத்திற்கு சான்ஸ் கிடைச்சிடக் கூடாதுன்னு தங்கமணிங்கிறவரை அமைச்சர் மூலமா சிபாரிசு பண்ணி காய் நகர்த்துறாராம். இந்த தங்கமணி, தி.மு.கவுக்குப் போய்விட்ட செல்வகணபதியின் ஆளுன்னும், இப்பவும் அவர்கூட காண்டாக்ட்டில் இருக்காருன்னும் ஏற்காடு ர.ர.க்கள் சொல்றாங்க.''

""தி.மு.க ஏரியாவில் என்ன நடக்குது? கூட்டணி விஷயமா ஏதாவது தகவல்கள் உண்டா?''


""கூட்டணி சம்பந்தமா காங்கிரஸ் வட்டாரத்திலிருந்துதான் தகவல் கிடைச்சுதுங்க தலைவரே.. டெல்லிக்கு ஒரு விசிட் அடிச்சிட்டு வந்தேன். காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான ஒரு சோர்ஸ் சொன்ன தகவல் இதுதான். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு தி.மு.க கூட்டணியை விட்டால் வேறு நல்ல வாய்ப்பு கிடையாது. நாங்க அது சம்பந்தமா யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே, தி.மு.க சைடிலிருந்து பட.. பட..ன்னு கூட்டணிக் கதவைத் தட்டுறாங்க. தயாநிதி மாறன் வந்து சோனியாவை சந்திச்சிப் பேசுறாரு. அப்புறம் கனிமொழி வந்து கூட்டணி பற்றி பேசுறாரு. டி.ஆர்.பாலுவும் காங்கிரஸ்கூடத்தான் கூட்டணின்னு சொல்றாரு. பொதுவா, தி.மு.க சைடிலிருந்து கூட்டணி பற்றி பேசுவதா இருந்தா, கலைஞர் யாராவது ஒருத்தரைத்தான் அனுப்புவார். அவங்கதான் கடைசி வரைக்கும் டீல் பண்ணுவாங்க. இப்படி ஆளாளுக்கு வந்து பேசும்போது குழப்பமா இருக்குது. கலைஞர்தான் சொல்லி அனுப்பினாரா? அல்லது இவங்களா இன்ட்ரஸ்ட் காட்டுறாங்களான்னு சந்தேகமும் வருதுன்னு சொல்றாங்க. அடுத்து ஜே.பி.சி. பற்றித்தான் பேச்சு.''

""என்ன சொல்றாங்க?''


""நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளே, ஜே.பி.சி தலைவர் சாக்கோ ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பிக்க ரெடியாயிட்டாராம். அவரோட  அறிக்கை தொடர்பா ஏற்கனவே குழு உறுப் பினர்களா இருக்கிற எதிர்க்கட்சியினர் தரப்பில் எதிர்ப்பு இருக்குது. 2ஜியைப் பொறுத்தவரை அதில் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.கதான். தி.மு.க சார்பில் இப்ப குழுவில் இருப்பவர் டி.ஆர்.பாலு. அவர், ஜே.பி.சி. தலைவரின் அறிக்கைக்கு ஒரு மறுப்புக் குறிப்பை எழுதித்தருவார்னும் அதையும் அறிக்கையோடு சேர்த்து தாக்கல் செய்வதுன்னும் முடிவாகியிருக்குதாம். அதாவது, 2ஜியில் தி.மு.க. அமைச்சர் ராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு களும் இருக்கும், அதற்கு தி.மு.க. உறுப்பினர் கொடுத்த மறுப்பும் இருக்கும். இதனால தி.மு.க. வுக்கு எந்தப் பலனும் கிடையாது. இதைத்தான் ஜே.பி.சி.யில் உள்ள மற்ற கட்சிகளான சி.பி.எம்., சி.பி.ஐ., தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சொல் லுது. தி.மு.கவை மட்டும் குறி வைத்து ஜே.பி.சி. செயல்படுதுன்னு குற்றம்சாட்டும் இந்தக் கட்சிகள், தப்பு செய்தது அமைச்சரா, அதிகாரிகளான்னு தெளிவா அறிக்கை  கொடுக்கணும்னும், தலைமை தணிக்கை அதிகாரி சொன்ன நட்டக் கணக்கை, 2ஜி பற்றி விசாரிக்கும் சி.பி.ஐ.யே ஒத்துக்கொள் ளாதபோது, ஜே.பி.சி ஏன் தி.மு.க சார்பில் அமைச்சரா இருந்தவர் மீது பழிபோடணும்ங் கிறதுதான் மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர் களோட கேள்வி.''



""இந்தக் கேள்வியைத் தி.மு.கதானே அழுத்தமா  கேட்கணும். அவங்க சைடில் மறுப்புக் குறிப்பே போதும்னு நினைக்கி றாங்களா?''


""தலைவரே.. தி.மு.க.வில்  யார், எப்போ, என்ன மாதிரியான சிக்னல் காட்டறாங்கன்னு கட்சிக்காரங் களுக்கே புரிய மாட்டேங்குது. உள்கட்சித் தேர்தலையொட்டி கிளைக்கழகங்களில் தேர்தல் நடந்துக்கிட்டிருக்குது. கிளைக் கழகங்கள்தான் தி.மு.க.வோட வேர். இங்கேயிருந்து செலக்ட் ஆகிறவங்கதான் நகரச்செய லாளர்கள், ஒன்றியச் செயலாளர் களைத் தேர்வு செய்து  மா.செக் களோட தேர்வுக்குக் காரணமா இருப்பாங்க. அதனால, தி.மு.க வில் கிளைக்கழகத் தேர்தல் எப்போதும் ஜரூரா இருக்கும்.''

""ஆமாப்பா.. நானும் கவனிச்சிருக்கேன். கட்சிக்காரர்களுக்குள்ளேயே  போட்டி, மோதல், வெற்றி, தோல்வின்னு கலவையாகவும் ரகளையாக வும் இருக்குமே!''


ரகளையா இருந்தாலும் அந்தப் பூசல் எல்லாம் எம்.பி தேர்தலோ, எம்.எல்.ஏ. தேர்த லோ வரும்போது மறைந்து எல்லோரும் உதயசூரியனுக்காக வேலை பார்ப்பாங்க. இந்த  முறை உள்கட்சித் தேர்தலில்  கிளைக்கழகங்களிலேயே மா.செக்கள் தங்களோட வேலைகளையும் லீலைகளை யும் காட்ட ஆரம்பிச்சிட்டாங் களாம். உதாரணத்துக்கு நெல் லை மாவட்ட கிளைக்கழகத் தேர்தலுக்கு கட்சியின் தேர்தல் ஆணையாளர்களாக வந்திருந்த வங்களெல்லாம் விருதுநகர் மாவட்டத்திலிருந்து கே.கே. எஸ்.எஸ்.ஆரால் அனுப்பி வைக்கப்பட்டவங்க. அவங்க ளோ, உங்க மா.செ. கானா சொல்றதைத்தான் கேட்க ணும்னு எங்க மா.செ. இன்ஸ்ட் ரக்ஷன் கொடுத்திருக்காரு. பேசாம லிஸ்ட்டை  கொடுங்க. மாவட்டம் சொல்றபடி அறிவிப்பு வந்திடும்னு சொல்லியிருக்காங்க. ஏம்ப்பா.. வேருல வெந்நீரை ஊத்து றீங்கன்னு கிளைக்கழகத்தினர் பொருமியிருக்காங்க.''

""இப்படித்தான் மற்ற மாவட்டத்திலும் கட்சித் தேர்தல் நடக்குதா?''


""எல்லா மாவட்டத்திலிருந்தும் புலம்பல்கள் கேட்குது. இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, சம்பந்தப்பட்ட மா.செக் களுக்குப் போன் பண்ணி, ‘லண்டனி லிருந்து தளபதி என்கிட்டே பேசுனாரு. இதை இதை சொன்னாருன்னு பகீரைக் கிளப்புறாராம். கிளைக்கழகத் தேர் தலிலேயே இப்படின்னா இன்னும் நகரம், ஒன்றியம், மாவட்டம்னு பல கட்டத் தேர்தல்கள் இருக்குதே, இதெல்லாம் கட்சிக்கு நல்லதான்னு தொண்டர்கள் பலரும் கேட்குறாங்க.''

""தி.மு.க தலைமையின் காதுக்கு இது கேட்கணும்…!''


""விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னைத் திருமணம் செய்துகொள்வதா சொல்லி ஏமாற்றிட்டதாகவும், சொத்துகளை அபகரிக்க முயன்ற தாகவும் கோவை யைச் சேர்ந்த  கவிதாங்கிற பெண் மணி புகார் கொடுத்து பரபரப்பு உண்டாக்கிட்டாரே?''

""கவிதாவுக்கு லோக்கலில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோடு பிரச்சினை. அவரோட  சொத்துகளை விற்கிற விவகாரத்தில் தகராறு. அது சம்பந்தமா ஏற்கனவே சென்னையில் டி.ஜி.பிகிட்டேயே புகார் கொடுத் திருக்காரு. அதில் திருமா பற்றி எதுவும் சொல்லலை. புகார் மேலே பெரியளவில் நடவடிக்கை இல்லைங்கிறதால, தன்னோட நில விவகாரத்தை மீடி யாக்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக கோவை போலீஸ் கமிஷனர்கிட்டே புகார் கொடுத்துட்டு வெளியே வந்ததும், திருமா மீது குற்றம்சாட்டுகிறார்னு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சொல்றாங்க. கவிதாவோட டிரைவர் வி.சி. கட்சியில் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் கவிதா வின் வளர்ப்பு மகன் பிறந்தநாளில் திருமா கலந்துக்கிட்டாராம். அப்ப எடுத்த படத்தை இப்ப கொண்டுவந்து இல்லாததையெல்லாம் இட்டுக்கட்டுறாருன்னு வி.சிக்கள் சொல்றாங்க.''

""அடுத்த மேட்டர்?''

""தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பிரபாகரனோட பதவிக்காலம் அக்டோபர் 18-ந் தேதியோடு முடியுது. புது துணைவேந்தரை  தேர்வுசெய்ய 3 பேர் கொண்ட சர்ச் கமிட்டி அமைப்பாங்க. இந்த கமிட்டிதான் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுடைய 3 பெயர் கள் கொண்ட பேனலை கவர்ன ருக்கு அனுப்பும். அப்படிப்பட்ட இந்த கமிட்டியில் ராஜஸ்தான் மாநில கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் அசோக் கெலாட், ஹரியானா தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீவத்சா இருவரும் இடம்பெற்றி ருக்காங்க. இந்த இரண்டுபேருமே தற்போதைய துணைவேந்தர் பிரபாகரனுக்கு நண்பர்களாம். சர்ச் கமிட்டியில் இடம்பெற தமிழகத் தில் யாரும் தகுதியானவங்க கிடையாதா, வேறு மாநிலத்து ஆட்கள்தான்  கிடைத்தார்களா, இதெல்லாம் பிரபாகரனின் ப்ளான்தான்னு தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் குமுறல்கள் கேட்குது.''

""கோட்டை வட்டார  குமுறல் ஒன்றை நான் சொல் றேன்.. .. டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஜே.எம்.டிங்கிற பவர்ஃபுல் போஸ் டிங் காலியாகவே இருந்தது. டாஸ்மாக் மீது உள்துறை செய லாளருக்குத்தான் அதிகாரம். அதனால, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, டி.ஆர்.ஓ லெவலில் உள்ள மோகன் என்பவரை டாஸ்மாக் ஜே.எம்.டியா நியமிச்சாரு. இந்த  போஸ்டிங் போட்டது துறையின் அமைச்சரான நத்தம் விஸ்வநாதனுக்கே தெரியாதாம். டாஸ்மாக்கிற்குள் இப்ப ஜே.எம்.டி மோகனின் அதிகாரம்தானாம். உள்துறைச் செயலாளர்  பல விஷயங்களிலும் இப்படித் திட்டமிட்டு செயல்படுறாருன்னு கோட்டையில் குரல்கள் ஒலிக்குது.''

 புது திருப்பம்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞருக்கு உதவ அனுமதிக்கவேண்டும் என தி.மு.க தரப்பு தாக்கல் செய்த மனுவை ஏற்று, எழுத்துப்பூர்வமாக வாதங்களை அளித்து உதவலாம் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அரசு வழக்கறிஞர் பவானிசிங் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் அவரை மாற்ற  வேண்டும் என்றும் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த டி.எஸ்.பி., அரசுத் தரப்பில் சாட்சியளிக்காமல் குற்றம்சாட்டப் பட்டவருக்கு ஆதரவாக சாட்சியமளித்ததையும் (இதுபற்றி நக்கீரன் ஏற்கனவே எழுதியுள்ளது) அதனை அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியிருக்கும் தி.மு.க தரப்பு, இப்படிப்பட்டவருக்கு எப்படி நாங்கள் உதவமுடியும், இந்த வழக்கில் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும் எனக் கோரி அரசு வழக்கறிஞரை  மாற்றக்கோரும் மனுவைத் தாக்கல் செய்தது. பல திருப்பங்களை சந்தித்த சொத்துக் குவிப்பு வழக்கில் இது புது திருப்பமாகியுள்ள நிலையில், தற்போதைய நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் இறுதியில் ஓய்வு பெறுவதற்குள் இவ்வழக்கு முடிந்து தீர்ப்பு வெளியாகவேண்டும் என கமுக்கமாக எதிர்பார்க்கிறது ஜெ. தரப்பு.


 லாஸ்ட் புல்லட்!

பெல்ஜியம் நாட்டின் வர்த்தகத்துறை கௌரவத்தூதராக நியமிக்கப்பட்ட  தமிழக தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மீது நிதி சம்பந்தப்பட்ட புகார் எழுந்ததால் அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டதுடன், அதுபற்றி மத்திய உள்துறைக்கும் தகவல் அனுப்பப்பட்டதை ஏற்கனவே தெரி வித்திருந்தோம். மத்திய உள்துறையிலிருந்து தமிழக உள்துறைக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் திட்டக்கமிஷ னில் ஏ.சி.முத்தையா ஓர் உறுப்பினர். அவரை நீக்கவேண்டும் என சுப்ரமணியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஏ.சி.முத்தையா வை திட்டக்குழு உறுப்பினரிலிருந்து நீக்கியுள்ளது ஜெ.அரசு.

ஜெ.வை சமீபத்தில் சந்தித்தார் பரிதி இளம்வழுதி. தான் பேசச் சென்ற இடங்களிலெல்லாம் நல்ல கூட்டம் என்றும், அ.தி.மு.க ஆட்சிக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்றும் ஜெ.விடம் பரிதி சொல்ல, இன்னும் அதிக கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள் என்ற ஜெ., ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய உத்தரவிட்டுள்ளாராம். மத்திய சென்னை யில் தயாநிதி மாறனுக்கு எதிராக பரிதி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனி தொகுதியான நீலகிரியில் ஆ.ராசாவை எதிர்த்து களமிறக்கும் எண்ணம் அ.தி.மு.க தலைமைக்கு உள்ளதாம். ராசாவின் திருமணம் பரிதி தலைமையில்தான் நடந்தது.

முன்னாள் அமைச்சரும் கடலூர் மாவட்ட தி.மு.க மா.செ.வுமான எம்.ஆர். கே.பன்னீர்செல்வத்தின் மகனுக்கும் தொழிலதிபர் எம்.ஏம்.எம்.ராமசாமி யின் உதவியாளர் ராஜேந்திரனின் மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடந்தது. இதில் கலைஞர் கலந்துகொண்டார். மணமகள் சார்பில் நிச்சயதார்த்த உடன்பாட்டில் எம்.ஏ.எம்.ராமசாமி கையெழுத்திட, மணமகன் சார்பில் கே.என்.நேரு கையெழுத்திட்டார். தி.மு.க நிர்வாகிகள் பலர் தங்களுக்கு அழைப்பில்லை என வருத்தப்பட்டாலும் நிகழ்ச்சி நடந்த எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கம், கூட்டத்தால் திக்குமுக்காடிவிட்டது.

திருச்சியில் நடந்த இளைஞர் காங்கிரசின் மாநாட்டில் அகில  இந்திய தலைவர் ராஜீவ் சத்தா கலந்துகொண்டு தமிழக காங்கிரசின் புதிய தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய் இளஞ்செழியனையும் துணைத்தலைவர் நாசேராஜேஷையும் அறிவித்தார். இந்த விழாவில் பேசிய திருநாவுக்கரசர், இளைஞர் அணி என்பது கட்சியின் முக்கிய பொறுப்பு. தி.மு.க.வில் ஸ்டாலின் இளைஞரணி செயலாளரானபோது நான் அ.தி.மு.கவின் இளைஞரணிக்குப் பொறுப்பு வகித்தேன். அப்போது நான் கண்டெடுத்த ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் எல்லோருமே இப்போது சீனியர் அமைச்சர்கள். முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரும் என்னால் இளைஞரணிக்கு கண்டெடுக்கப்பட்டவர்தான். அதுபோல, தி.மு.கவில்  இளைஞரணியில் இருந்தவர்கள் பலர் மந்திரிகளாகிவிட்டனர். ஸ்டாலின் துணை முதல்வர் பதவிவரை வந்துவிட்டார் என்றார்.

ad

ad