புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

சிங்கள அரசு உரிமை தர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றி சிந்திப்பதை தடுக்க முடியாது: சி.சிறீதரன்
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது என பரந்தன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் பரந்தன் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00மணிக்கு நிறைவு பெற்றது.
இப்பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்காலில் 140,000க்கு மேற்பட்ட எம்மக்கள் பூண்டோடு அழிக்கப்பட்டார்கள். காணாமல் போனார்கள். அவர்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும். அது இலங்கை அரசால் சொல்லப்படுகின்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் நடாத்தப்படும் விசாரணயல்ல. அது ஒரு பன்னாட்டு விசாரணையாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்கின்றோம்.
“விடுதலைப் புலிகள் போராடி என்ன கண்டார்கள், முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொண்டு சென்று விட்டார்கள்” என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் திருப்பிச் சொல்லுங்கள் விடுதலைப் புலிகள் எங்களை முள்ளிவாய்க்காலில் விடவில்லை. அவர்கள் எங்களைக் கொண்டு சென்று ஐக்கிய நாட்டு சபையின் கதவுகளைத் திறந்து உள்ளே விட்டுள்ளார்கள்.
நாம் இன்று சர்வதேசமும் அவதானித்துக் கொண்டிருக்கின்ற பிரஜைகள். ஒவ்வொரு மக்களதும் தியாகம், அவர்களது இரத்தம், கண்ணீர் ஆகியவை தான் நவனீதம்பிள்ளையை முள்ளிவாய்க்காலில் காலூன்ற வைத்தது.
எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக நாம் 1960களில் 1970களில் 1980களில் 1990களில் இருந்ததை விட இப்போது நாம் பலமாக இருக்கிறோம்.
ஏனெனில் எங்களுக்குப் பக்கபலமாகப் புலம்பெயர் நாடுகளில் எங்கள் உறவுகள் இருக்கிறார்கள், போராடுகிறார்கள். இச் சந்தர்ப்பத்தில் நாம் எம்மிடமுள்ள வாக்கு என்கின்ற உரிமையைச் சரியாகப் பிரயோகிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியான எமது தாயக மண். இம்மண்ணில் நாங்கள் வாழ வேண்டும். நாம் ஒரு தேசிய இனமேயன்றி சிறுபான்மை இனமல்ல. எமக்குத் தனித்துவமான மொழி, இன அடையாளம், கலை பண்பாட்டு அம்சங்கள் இருக்கின்றன.
சிங்கள தேசிய இனத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சிங்களச் சகோதரர்களை நாம் வரவேற்கிறோம்.ஆனால் அவர்கள் எங்களை அழிக்கக் கூடாது. நாங்களும் இம்மண்ணில் சிங்கள மக்களைப் போல வாழ விரும்புகிறோம்.
நாங்களும் சிங்கள மக்களும் இந்த மண்ணில் வாழவேண்டுமானால் எங்கள் உரிமைகள் எங்களுக்குத் தரப்பட வேண்டும். எங்கள் இடங்களில் சிங்கள மக்கள் புத்த கோவில்களைக் கட்டுகிறார்கள். எங்கள் காணிகளை அடாத்தாகப் பிடிக்கிறார்கள். எங்கள் மேல் நாட்டாண்மை காட்டுகிறார்கள்.
2009ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பயங்கரங்களெல்லாம் இருந்ததா, இப்படி ஒரு வரலாறு வருமென்று நாங்கள் நினைத்தோமா, நாம் ஒருபோதும் ஆயுதங்களைப் பற்றிச் சிந்தித்தவர்களல்ல.
அதை நோக்கி நிர்ப்பந்திக்கப்பட்டோம். இப்பொழுதும் நாம் தெளிவாகச் சொல்கிறோம். ஜனநாயக ரீதியாக வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பூமிப்பந்தில் இந்தச் சிறிய இனம் வடக்கு கிழக்கு எனும் சிறிய பரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது.
அந்த உரிமையினைக் கூட தருவதற்கு சிங்கள இன வாத அரசு தரமறுத்தால் இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் ஒரு 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்கமுடியாது. ஆயுதங்கள் ஏந்தும்படி நாம் யாரையும் தூண்டவில்லை, ஊக்குவிக்கவில்லை. அந்த வழிக்கு நாங்கள் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பதைத் தான் நாம் கேட்கிறோம் எனத் தெரிவித்தார்.
இப்பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன் வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப. அரியரத்தினம், த. குருகுலராசா, சு. பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச தவிசாளர் நாவை குகராசா, உபதவிசாளர் வ. நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் வி. சுவிஸ்கரன், சு. தயாபரன், மா. சுகந்தன், யாழ். வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர் த. நடனேந்திரன், கட்சி செயற்பாட்டாளர் தி. சிவமாறன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ad

ad