புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

இராணுவத்தினர் விசாரணைக்கென 1990ல் அழைத்து சென்ற 174 இளைஞர் பற்றி இன்றுவரை எந்த தகவலுமில்லை!- சீ யோகேஸ்வரன்
மட்டு. வந்தாறுமூலை பல்கலைக்கழக முகாமில் 1990ல் தஞ்சமடைந்த 174 இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் 23 வருடங்கள் கடந்தும் அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவல்களும் இல்லை  என பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தமது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது!
1990ம் ஆண்டு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட 174 பேருக்கு நடந்தது என்னவென்று குறித்து 23 வருடங்கள் கடந்தும் ஆட்சிக்கு மாறி மாறி வந்த எந்த அரசாங்கத்தினாலும் உண்மை நிலை கண்டுபிடிக்கப்படவில்லை.
கிழக்கு பல்கலைக் கழக அகதி முகாமில் காணாமல் போன தமது உறவுகளை வியாழக்கிழமை இன்று உறவினர்கள் நினைவு கொள்கின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் காணாமல் போய் இருக்கின்றார்கள்.
1990ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் காரணமாகவே முறிவடைந்தது.
அக்காலகட்டத்தில் மட்டக்களப்பில் பலர் காணாமல் போயிருந்தார்கள். சிலரது உடலங்கள் சடலங்களாக வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டு காணப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக வாழைச்சேனை தொடக்கம் பிள்ளையாரடி வரையிலான கிராம மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி ஆலயங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகம் என பல்வேறு இடங்களிலும் அகதிகளாக தஞ்சம் பெற்று இருந்தார்கள்.
தஞ்சம் பெற்ற அதிக முகாம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமென நம்பினார்கள். இத்தகைய சந்தர்ப்பத்தில் 05.09.1990ம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் 158 பேர், 23.09.1990ம் ஆண்டு 16 பேர் என மொத்தம் 174 பேர் கைது செய்யப்பட்டு இராணுவ வாகனத்தில் வந்த முகமூடி அணிந்தவர்கள் தலையாட்டிக் காட்டிக் கொடுத்ததற்கமைய பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்.
அவ்வாறு ஏற்றிச் செல்லப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? என்று இதுவரை தெரியாது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக 1995ம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று மறைந்த மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிருஸ்ணன் தலைமையில் நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. பலரும் சாட்சியம் அளித்தார்கள்
ஆனால் காணமல் போன சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தும் முறையில் வாக்கு மூலங்களை அளித்திருந்தார்கள் என்பதையும் இச்சந்தரப்பத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
கிழக்கு பல்கலைக்கழக முகாமில் வைத்து காணாமல் போனவர்கள் இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண தமிழ் மக்களைப் பொறுத்த வகையில் ஒரு மறக்க முடியாத நாளாகவே கருதுகின்றார்கள்.
செப்டெம்பர் 05 என்றால் கிழக்கு பல்கலைக் கழகத்தில் அகதியாக தஞ்சம் பெற்று கடத்தப்பட்ட, காணாமல் போன தமது உறவுகளை நினைவுகூரும் இந்நாளில் குடும்பத்தவர்கள் மட்டுமல்ல நாம் அனைவரும் நினைவு கொள்ள வேண்டுமென இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad