புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013



                "மத்திய அரசை தீர்மானிப்போம்! மாநில அரசை வென்றெடுப்போம்! 2016 நம் லட்சியம்... அதை வெல்வது நிச்சயம்...'’என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. 9-ஆம் ஆண்டு துவக்க விழா... தூத்துக்குடி மேடையில் பொளந்து கட்டினார்கள் முரசுக் கட்சியினர். 

""விஸ்கியில மிக்ஸ் பண்ணுறதுக்கு மினரல் வாட்டர் கொடுக்கிறவங்களுக்கு பேரு அம்மாவா? நான் ஜெயிலுக்கு போறேன். நானும் ரவுடிதான்னு வடிவேலு சொல்லுற மாதிரி.. நான் நல்ல முத லமைச்சர்ன்னு இவங்களே விளம்பரம் பண்ணிக் கிட்டா எப்படி?''’என்று பேராசிரியர் ரவீந்திரநாத் போட்டுத் தாக்க... களை கட்டியது கூட்டம். 

""வைகுண்டராஜனைக் கூண்டில் ஏற்ற வேண்டும். வி.வின்னா விரைவிலேயே விலங்கு'' ’என்று ஒரு பிடிபிடித்தார் பிரேமலதா.  

""அவலங்களைப் பேசினால் அவதூறு  வழக்கு போடுங்க... எத்தனை கேஸ் வேணும்னாலும் போடுங்க'' என்று, தான் சந்தித்து வரும் பிரச்சினைகளை குமுறலோடு சொன்ன விஜயகாந்த், ""அ.தி.மு.க. என்னைக்கும் ஜெயிக்கக் கூடாது. ஜெயிக்க விடக் கூடாது. என் மனசுல இந்தப் பொறி இருக்கு. உங்களுக்கு அந்த வெறி இருக்கா? இல்லியா?''’என்று  கூட்டத்தைப் பார்த்து கேட்க... "இருக்கு... இருக்கு...'’என்று பதில் குரல் எழுப்பி னார்கள் தொண்டர்கள். ""வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல, அவங்களா? நாமளான்னு  பார்த்திரு வோம். ஆளும் கட்சிக்கு சல்யூட் அடிச்சிக்கிட்டு, பொதுமக்களை வதைச்சுக்கிட்டு இருக்கு காவல் துறை. லேடி எஸ்.ஐ. கழுத்துல கிடந்த சங்கிலிய அறுத்துக்கிட்டு ஓடறான். இந்த ஆட்சியில சட்டம்-ஒழுங்கு இப்படியிருக்கு. பத்து லட்சம் கோடிய கொள்ளை அடிச்சிருக்காரு ஒரு தனி நபர். அரசாங்கம் தடுத்து நிறுத்தலியே? வைகுண்டராஜ னுக்கு அரசியல்வாதிங்க, மந்திரிங்க, ஆட்சி அதிகாரத்துல இருக்கிறவங்க துணை போறாங்க. 19-4-2007-ல் வைகுண்டராஜனுக்கு சப்போர்ட் பண்ணி அ.தி.மு.க. கட்சிக்காரங்க பேசினது சட்ட மன்ற புத்தகத்துல இருக்கு.  அன்னைக்கே சப்போர்ட் பண்ணுனவங்க,  இப்ப சப்போர்ட் பண்ணாமலா இருப்பாங்க.? ஆய்வுக்குழுவெல்லாம் செட்டப் பண்ணுன நாடகம். இதையெல்லாம் பேசினா  விஜய காந்த் கோபப்படறாருன்னு சொல்லுறாங்க. குடிச் சிட்டு பேசறான்ங்கிறாங்க. அவங்க அந்த தப்ப செஞ் சிட்டு விஜயகாந்த் மேல பழி போடறாங்க.  அவங்க கோபப்படலயா? அவங்க மந்திரிய மாத்தலயா. தைரியம்னா என்ன? குருட்டுத்தனமான தைரியமா? 



எனக்கே ஒண்ணும் புரியல. தலையா? மக்கள் அலையா? இனிமேல் நம்ம மாநாட்டுக்கு 100 ஏக்கர் நிலம் பிடிக்கணும். இப்ப நான் திமிரா இருக்கேன். இறுமாப்போட இருக்கேன். இட்லி ஒரு ரூபாய், பாட்டில் தண்ணீர் பத்து ரூபாய். இதுவா நல்லாட்சி? ஜெயலலிதா நிரந்தர முதல்வர் கிடையாது. விடமாட் டான் இந்த விஜயகாந்த். அரசன் அன்று கொல் வான், தெய்வம் நின்று கொல்லும். கொல்லத்தான் போகுது...''’என்று கண் சிவக்கப் பேசினார் கேப்டன். 

தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைக்கப் போகிறதாம்?

""இந்த மேடையில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், தமிழ்நாட்டில் மட்டும் இல்ல... இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். கேப்டன் சொல்பவர்தான் நாளைய பிரதமர் ஆவார். மாற்றத்தைக் கொண்டுவருவோம்''’என்று பிரேமலதாவும், ""முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு காரணமே காங்கிரஸ் அரசாங்கம்தான். அது என்ன உணவுப் பாதுகாப்பு திட்டம்? புதுடெல்லியில் இப்போது யோசித்துக்கொண்டிருப்பார்கள், தூத்துக்குடியில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று''’என பண்ருட்டி ராமச்சந்திரனும், ""சிங்கள ராணுவத்தினர் தமிழக மீனவர் களை அடித்து துன்புறுத்துவதை இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்காதா? இப்ப யார், யாரையோ வாழும் காமராஜர்ங்கிறாங்க. அப்ப அவரை கட்சிய விட்டு விரட்டிட்டு, இப்ப காமராஜர் ஆட்சிங்கிறீங்க''’என்று கேப்டனும் காங்கிரசுக்கு எதிராகவே பேசினார்கள். 

அதேநேரத்தில் ""அவ்வளவு பெரிய கலைஞருக்கே இன்விடேசன் லேட்டாத்தான் போயிருக்கு. அவரோட "பராசக்தி', "மனோகரா' வசனத்த பேசிக்காட்டிட்டுத் தானே பலரும் நடிக்க வந்தாங்க. கலைஞர் மேல 12 கேஸு. ஒரு பெரியவர்... அவரால வர முடியுமா? அவரை தீயசக்தின்னு பேசுனீங்களே... அது எவ்வளவு மோசமான வார்த்தை''’என்று கலைஞர் குறித்து சிலாகித்துப் பேசிய விஜயகாந்த்...“""கூட்டணி வச்சாத்தான் ஜெயிக்க முடியுமா? கூட்டணி வைக்கலைன்னா ஜெயிக்க முடியாதா? என்னய்யா பி.ஜே.பி.ய திட்டுறாரு, கலைஞர திட்டுறாரு, அப்ப யாருடன்தான் கூட்டணிங்கிற கேள்வி வரும். நிச்சயம் சொல்வேன்.  மாநாடு கூட்டி என் தொண்டர் களிடம் சொல்வேன்...''’என்று பொடி வைத்தே பேசினார். 

‘"அது சரி... வைகுண்டராஜன் விஷயத்தில் இந்த மேடையில் இத்தனை தீவிரம் காட்டியது ஏன்?’கூட்டணி குறித்த ஆலோசனை எதுவும் இருக்கிறதா?'’என்று கேட்டோம் தே.மு.தி.க. முக்கிய நிர்வாகி ஒருவரிடம். “

""அது வந்துங்க... எங்க எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேரு அந்தப் பக்கம் போனாங்கள்ல, அவங்களை இழுக்கிறதுக்கு பணம் கொடுத்தது வைகுண்டராஜன்தான். எங்க கட்சிய பலவீனப்படுத்த ஃபைனான்ஸ் பண்ணுன ஆளை விட்டுவைக்கலாமா? அதான்... விளாசித் தள்ளிட்டோம்.  

அப்புறம்... இப்பவே எதுக்கு இந்தக் கட்சி கூடத்தான் கூட்டணின்னு சொல்லணும். பி.ஜே.பி., காங்கிரஸ்ன்னு ரெண்டு பக்கமும் பேலன்ஸிங்காத்தான் போய்க்கிட்டிருக்கோம். எது சரியா வருதோ, அந்தக் கட்சியோடுதான் கூட்டணி. அதே நேரத்துல, தேவையில்லாம இப்ப கலைஞரையும் பகைச்சுக்கக்கூடாதுன்னு நினைக்கிறாரு கேப்டன். அ.தி.மு.க. ஒரு இடத் துல கூட ஜெயிக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்காரு. அப்படி பார்த்தால்... காங்கிரஸோ, பி.ஜே.பி.யோ, தேசிய கட்சியோட தனியா  கூட்டணி வைக்கிறதெல்லாம் ஓட்டு வங்கி குறைச்சலா இருக்கிற தமிழ்நாட்டுல நெகடிவ் ரிசல்ட்டத்தான் தரும்கிறது அவருக்கு தெரி யாம இல்ல. தமிழ்நாட்டுல  பெரிய கட்சியான தி.மு.க. ப்ளஸ் ஒரு தேசிய கட்சியோட கூட் டணி வச்சாத்தான் அ.தி.மு.க.வை வாஷ்-அவுட் பண்ண முடியும்கிறது அவருக்கு நல்லாவே தெரியும். ஆனாலும்... பி.ஜே.பி. கூட்டணில அ.தி.மு.க. சேர்ந்துடக் கூடாதுங்கிற திட்டத் தோடுதான்  பி.ஜே.பி. பக்கம் போற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கிக்கிட்டிருக்காரு. ஆமா... இலங்கைத் தமிழர் விவகாரத்துல வெறுப்பைச் சம்பாதிச்சிருக்கிற காங்கிரஸை இப்ப விமர்சிக்கிறதுகூட அந்த வகையிலதான் தி.மு.க.வோ, பி.ஜே.பி.யோ... யாருகிட்டயும் பிடி கொடுக்காம கடைசி வரைக்கும் காய் நகர்த்துவாரு. கேப்டன் மனசுல இதான் ஓடிக் கிட்டிருக்கு'' என்றார் கிளம்பிக்கொண்டிருந்த பரபரப்பில்.

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: சக்ரவர்த்தி ராம்

ad

ad