புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்

 வரலாற்றில் என்றும் இல்லாதளவிற்கு கடும் அச்சுறுத்தல்களுடனும், எச்சரிக்கைகளுடனும் வடமாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்தத் தேர்தலில் தங்கள் வெற்றிகளை விட, எதிர்த்துப் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தோற்கடிக்க வேண்டும்
என்பதையே குறியாகக் கொண்டு சிங்களப் பேரினவாதம் சாம, தான, பேத, தண்டம் என அனைத்து வழிகளையும் கையாண்டு வருகின்றது.
இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும், ஒட்டுக்குழுக்களும் எல்லா வழிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல்ப் பணியாற்றுபவர்களையும் அச்சுறுத்திப் பார்த்துவிட்டனர்.
ஆனாலும், கூட்டமைப்பிற்கே வெற்றி கிடைக்கும் என சிங்களப் பேரினவாதமே உறுதியாக நம்புகின்றது. இதனால் தேர்தலை வென்றுவிடுவதற்காக மகிந்த ராஜபக்சவே நேரடியாகக் களமிறங்கி கூட்டமைப்பிற்கு எதிராக வடமாகாணம் எங்கும் பிரச்சாரம் செய்கின்றார். மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என ஓடியோடி உரையாற்றுகின்றார். எப்போதோ திறந்துவைத்திருக்க வேண்டியவற்றை இப்போதுதான் ஓடியோடித் திறந்து வைத்து தமிழர்களின் மனதைக் குளிர்விக்க முயல்கின்றார். குந்தியிருக்க தமிழருக்கு ஒரு குடிசையில்லை, கிளிநொச்சிக்கு தொடருந்துப் பயணத்தை தொடக்கி வைக்கின்றார்.
தண்டவாளத்தின் முன்னே பாதுகாப்பு அணிகள் உந்துருளிகளில் அணிவகுத்துச்செல்ல, கிளிநொச்சிக்கு ‘கடகட தொடருந்தில்’ போய் தரையிறங்கிய மகிந்தவின் வீரப்பிரதாபத்தை அங்குள்ள மக்களே கிண்டலடித்திருக்கின்றனர்.
இதேவேளை, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தால் ‘வடக்கின் வசந்தம்’ என்ற பெயரில் ஒரு சிலருக்கு வழங்கப்படும் பிச்சைப் பணத்தைக்கூட நிறுத்திவிடப் போவதாக பசில் ராஜபக்ச எச்சரிக்கின்றார். ‘புலிகள் கேட்டதைத்தான் கூட்டமைப்பும் கேட்கின்றது’ என கோத்தபாய இன்னொரு பக்கம் மிரட்டுகின்றார். கூட்டமைப்பைத் தோற்கடிக்க மகிந்த, பசில், கோத்தபாய என குடும்ப ஆட்சிப் பெருந்தலைகள் வரிந்துகட்டிக்கொண்டுநிற்க, மறுபுறம் சிங்களப் பேரினவாத சக்திகளும் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.
‘வட மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றினாலும், அவர்களை ஆட்சியமைப்பதற்கு தாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. ‘சிங்கள மக்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் எனவும் அரசியலமைப்பை மீறிச் செயற்படுவதோடு மாத்திரமின்றி சம்பந்தன் குழுவினர் நாட்டின் இறையாண்மையை அச்சுறுத்தும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் வெளியிட்டுள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்வதுடன் நாடாளுமன்றத்திலும் நடவடிக்கை எடுப்போம்’ என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் எச்சரித்திருக்கின்றார்.
‘கொழும்புக்கு திரும்பி வரலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் கனவு காணக்கூடாது’ என புதிதாக உருவாகியுள்ள சிங்கள மதவாத அமைப்பான ‘ராவண பலய’ இன்னொரு பக்கம் எச்சரிக்கை விடுகின்றது. ‘வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக இரத்து செய்யுமாறும்’ இந்த அமைப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ‘சிங்கள மக்களோடு இணைந்து வாழாவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை’ என்று சிறீலங்காவின் இடதுசாரி அமைச்சர்களில் ஒருவரான டியூ.குணசேகர யாழ்ப்பாணத்தில் நின்றே எச்சரிக்கின்றார்.
இவ்வாறு சிங்கள ஆட்சியாளர்களும் பேரினவாதமும் எச்சரிக்கைகளை விடுத்துவரும் நிலையில் இந்தத் தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டுள்ளது. மாகாணசபைக்கான தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட விடயங்களுக்கு எதிராக சிங்களம் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை மறுத்துவரும் கூட்டமைப்பு, ‘நாட்டைப் பிரிக்கச்சொல்லி ஒரு போதும் கூட்டமைப்பு கோரவில்லை என்றும் சிறீலங்காவின் சட்டங்களுக்கு உட்பட்ட சுய நிர்ணய உரிமையுள்ள சமஷ்டி ஆட்சியைத்தான் கோருகின்றோம்’ என்றும் கூறுகின்றது.
தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதும், இழந்த நிலங்களை மீட்டெடுப்பதுமே தமிழர்களிடம் உள்ள மிகமுக்கிய விடயமாக இன்றுள்ளது. தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் வடமாகாணத்தில் இருந்து படையினரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும், படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்போம் என்றும் தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்துவருகின்றது. விடுதலைப் புலிகளின் பலத்தினால் செய்யமுடியாதவற்றை வெறும் பதவியினால் செய்துவிடலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனவு காண்கின்றது. ஆனால் இவற்றை தேர்தலில் வென்று அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் கூட்டமைப்பினால் நிறைவேற்றிவிட முடியாது என்பதே உண்மை.
வட பகுதியில் இருந்து இராணுவத்தை ஒருபோதும் வெளியேற்ற சிங்களம் ஒத்துக்கொள்ளாது. ‘பாதுகாப்பு’ என்ற ஒற்றைச் சொல்லுடன் இராணுவத்தை இலட்சக் கணக்கில் அங்கு எப்போதும் குவித்துத்தான் வைத்திருக்கும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களையும் மீட்டெடுக்க முடியாது. உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையிலும், சிங்களக் குடியேற்றம், மத வழிபாட்டுத் தலங்கள் என்ற பெயரிலும் அவை நிரந்தரமாக ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எனவே, ஒரு பலமான சக்தியாக மீண்டும் தமிழினம் உருப்பெற்று எழும்வரைக்கும் சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து இழந்த நிலங்களை மீட்டெடுப்பதென்பது முயல் கொம்பாகவே இருக்கும். வடமாகாண சபைத் தேர்தலில் வென்றாலும் கூட்டமைப்பு தாம் நினைத்ததுபோல ஒருபோதும் நடந்துகொள்ள முடியாது. முதலமைச்சர் பதவி என்பது ஒரு கடிவாளம் பூட்டிய குதிரையைப் போன்றது. குதிரையின் கடிவாளக் கயிறுகள் மகிந்தவின் கையில் மட்டுமல்ல, வடமாகணத்தின் இராணுவ ஆளுநரான ஜீ.ஏ.சந்திரசிறியிடமும் இருக்கப்போகின்றது. குதிரையை ஓடவிட வேண்டுமா அல்லது நிறுத்தி வைத்திருக்க வேண்டுமா என்பதை இந்த இருவரில் ஒருவர் தீர்மானித்தாலே போதும்.
எனவே, குண்டுச் சட்டிக்குள் இருந்துகொண்டு குதிரை ஓட முடியும் என்கிற கற்பனையை விதைத்து தமிழ் மக்களை ஏமாற்றத்திற்குள் தள்ளாமல், சாத்தியமான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும்.
சர்வதேச மனித உரிமைகள் ஊடான வழிகளைப் பின்பற்றி சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டும், ஒப்படைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், மீட்டெடுக்கவும் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்ளலாம்.
எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிக்கலாம். இனஅழிப்பில் அனைத்தையும் இழந்து அடிப்படை வசதிகளின்றி அவலப்படும் மக்களுக்கு மீள் வாழ்வளிக்க முயலலாம்.
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச நாடுகளின் உதவிகளை நாடலாம்.
மாகாண சபை முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு இதுவே கூட்டமைப்பினால் அதுவும் சிங்களத்தின் பல்வேறு தடைகளையும் தாண்டிச்சென்று சாதிக்கக்கூடிய பெரும் சாதனையாக இருக்க முடியும்.
வானமேறி தமிழர்களுக்கு வைகுண்டம் காட்டுவோம் என்று கனவுகளை வளர்க்காமல், கூரையேறிக் கோழி பிடித்தாலே கூட்டமைப்பிற்கும் அவர்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கும் அது வெற்றிதான்.
ஆசிரியர் தலையங்கம்நன்றி: ஈழமுரசு

ad

ad