புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2013

முஸ்லிம்களின் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு தமிழ் கூட்டமைப்புக்கு நன்றி தெரிவிப்பு
இலங்கையில் பௌத்த பேரினவாத செயற்பாடுகளால் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நலன் பேணும் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கையறு நிலையிலிருந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொண்டு செயற்பட்டமைக்கு இந்த நன்றியையும், பாராட்டுதலையும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் தூண்டி விடப்பட்டு, முஸ்லிம்கள் மீதான அடாவடிகள் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
ஹலால் பிரச்சினை என்றும், ஹபாயா என்றும் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் இறை வணக்கத்திற்கான பள்ளிவாசல்களை மூடியும், தாக்குதல் நடத்தியும் காட்டுதர்பாராக இன்று உருவெடுத்துள்ளது.
நாட்டில் 24 பள்ளிவாசல்கள் வரை தாக்கப்பட்டும், அதனை கண்டும் காணாத நிலையில் பொறுப்பு வாய்ந்த அரசு மௌனம் காத்து வருகின்றது.
சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து ஜனநாயகம், நல்லிணக்கம் பேசும் அரசு தவறியுள்ளது.
இனவாதத்தைத் தூண்டி மதப் பயங்கரவாதத்தை முன்னெடுத்து வரும் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளைத் தடை செய்யவோ, அவைகளது செயற்பாடுகளுக்கெதிராக நீதி நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ இன்றுவரை அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. 
இந்த நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று கூறித்திரிவோரும் உறுதியான, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அவ்வப்போது வீறாப்பான அறிக்கைகளை விட்டு முஸ்லிம் மக்களை ஏமாற்றித் தம் கதிரைகளையும், சுகபோகங்களையும் காப்பாற்றிக் கொண்டே வருகின்றனர்.
முஸ்லிம்களின் தனிப்பெரும் கட்சியெனத் தம்பட்டமடிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கூட அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பதிலேயே கண்ணாகவிருக்கின்றது.
முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் மதஸ்தலங்களுக்கும் இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து அரசை விட்டு வெளியேறி சர்வதேச கவனத்தை ஈர்க்கவும், இதன் மூலம் தகுந்த பாடத்தைப் புகட்டவும் முஸ்லிம் காங்கிரஸ் முன்வர மாட்டாதா? என்ற ஆதங்கம் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ளது.
ஆனால் அரசை விட்டு வெளியேறுவதால் அரசுக்கு நட்டமில்லையென்ற கையாலாகாத்தனக் கருத்தை வெளியிடும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை, அரசு எம்மை வெளியேற்றினால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடுமென்ற உசுப்பேத்தும் வீர வசனங்களையும் பேசுகின்றது.
இவ்வாறெல்லாம் கையறு நிலையில் முஸ்லிம் மக்கள் கவலையிலிருக்கும் தறுவாயில்தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.
திராணியற்ற முஸ்லிம் தலைமைகள், முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை அவரது கவனத்திற்குக் கொண்டு வருவதில் வழக்கம் போல் மௌனம் காத்தன.
ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இடம்பெறும் போதெல்லாம் தம் சகோதர இனத்திற்காகக் குரல் கொடுக்கத் தவறாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இன்றும் குரல் கொடுக்கத் தவறவில்லை.
அன்று சிறீமாவோ ஆட்சியில் புகழ் பூத்த முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்காக தந்தை செல்வா பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
காலியில் நடந்த கலவரம் தொடர்பில் அன்று எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அண்ணன் அமிர்தலிங்கம் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தார்.
அந்த வரலாற்று வரிசையில் இன்று முஸ்லிம்களுக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குரல் கொடுத்து வருகின்றார்.
இந்த வகையில் வக்கற்ற முஸ்லிம் தலைமைகள் மௌனம் காக்க, இன்றைய முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நவநீதம்பிள்ளையின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளமை முஸ்லிம்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
இதற்காக நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனும் அமைப்பு, முஸ்லிம் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளமை பாராட்டத்தக்கதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad