புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013



அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயல்!- முழங்காவில் தேர்தல் பிரசாரத்தில் சுமந்திரன் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் முழங்காவில் பகுதியில் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பொருளாளர் தனராஜின் தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00 மணிக்கு நிறைவு பெற்றது.
இப்பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தனது உரையில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
எங்களுடைய மக்களுடைய தீர்ப்பை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வருகின்ற வெளிக்காட்டுகின்ற ஒன்றாக இத்தேர்தல் முடிவினை நாம் காட்ட வேண்டும். இத்தேர்தல் வெறும் உள்ளூர்த் தேர்தலாகவோ வெறும் மாகாண சபைத் தேர்தலாகவோ இல்லாமல் சர்வதேசமே உற்று நோக்குகிற தேர்தலாக மாறியுள்ளது.
வேறு எந்த ஒரு இடத்திற்கும் ஒரு மாகாணசபைத் தேர்தலுக்கும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருவதில்லை. ஆனால் இங்கு நடைபெறப்போகும் மாகாணசபைத் தேர்தலுக்கு இரண்டு இடங்களைச் சேர்ந்த சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் வருகிறார்கள்.
இலங்கை அரசாங்கமும் அதற்கு இடங்கொடுக்க வேண்டிய நிலையில் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி இணங்கியுள்ளது. அதற்குக் காரணம் இதுதான். இத்தேர்தல் சர்வதேசத்தின் கண்காணிப்பின் கீழ் சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேசத்தின் அழுத்ததின் மீது நடைபெறுகிற ஒரு தேர்தல் ஆகையால் சர்வதேச சமூகம் இந்தத் தேர்தலின் முடிவை, எப்படியான ஜனநாயகத் தீர்ப்பினை இம்மக்கள் கொடுக்கிறார்கள் எனப் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஒருவாக்குக் கூட அரசாங்கத்திற்கு செல்லக்கூடாது என்ற இறுக்கமான ஒரு நிலைப்பாட்டில் நாங்கள் தங்கியிருக்கிறோம். இது அரசாங்கத்திற்காக, அரசாங்கம் கொடுக்கும் நன்மைக்காக, அறிந்தவர் தெரிந்தவர் உறவினர் என்பதற்காக அளிக்கப்படும் வாக்கு அல்ல.
அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயலாக இருக்கும் என்பதை எம்மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாக்களிப்பு விகிதாசாரம் எவ்வளவுக்கு உயர்கிறதோ அந்த அளவுக்கு எங்களது ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் வாக்களிப்பதோடு மற்றவர்களையும் வாக்களிப்பதற்குத் தூண்ட வேண்டும்.
65 ஆண்டுகளாக நாம் செய்த தியாகங்கள் வீண்போகக் கூடாது. எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நாம் இழந்து விடக் கூடாது. இத் தேர்தல் எமது அரசியல் போராட்ட வடிவங்களின் ஒரு திருப்புமுனை என்பதை மக்கள் உணர வேண்டும்.
போராட்டங்கள் காலத்துக்குக் காலம் வடிவங்கள் மாறுபடலாம். இது நியதி. நாம் இப்போது சர்வதேசத்தை இணைத்துக் நாம் தொடுத்திருக்கும் ஜனநாயகப் போரிலே நாம் வெல்வது உறுதி எனத் தெரிவித்தார்.
இப்பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களுடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச தவிசாளர் நாவை குகராசா, உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன், கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் வி.சுவிஸ்கரன், சு.தயாபரன், ப. குமாரசிங்கம், இ.பொன்னம்பல நாதன் யாழ்.வலிகாமம் பிரதேச சபை உறுப்பினர் த.நடனேந்திரன், கிளிநொச்சி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.சுரேன் கட்சி செயற்பாட்டாளர் தி.சிவமாறன், குலேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ad

ad