புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றிய
தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது.
இலங்கை ஆங்கிலேயரின் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே சிறுபான்மையினங்கள் மீதான ஆக்கிரமிப்புக்களும் அடக்குமுறைகளும் இந்த நாட்டில் முளைவிடத் தொடங்கியதும் அதற்கு எதிராக அகிம்சைப் போராட்டங்கள் பலனற்றுப்போய் ஆயுதப் போராட்டமும் வலுவிழந்து இன்று மீண்டும் சாத்வீக போராட்டத்திற்காக தயாராகின்றது தமிழ்பேசும் சிறுபான்மையினம்.
இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் இணைந்த தாயக நிலப்பரப்பான வடக்குக் கிழக்கு மண்ணை தன் கோரப்பற்களால் கௌவிக் கொண்டிருந்த போர் முடிவிற்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இனப்பிரச்சினைக்குரிய தீர்க்கமான முடிவுகளோ முன்மொழிவுகளோ ஆளும் தரப்பிடமிருந்து இதுவரை கிடைக்காதமையே வேதனைக்குரிய விடயம்.
அபிவிருத்தி என்ற பெயரில் தென்னிலங்கையை விட வடக்கு கிழக்கை சீர்படுத்திவிட்டு இது தான் தீர்வு என்று அமுக்கிப் பிடிப்பதானது சிறுபிள்ளைத்தனமான முடிவாகும்.
இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியைப் பற்றி பலரும் பலவாறாக பேசுகின்றார்கள் அபிவிருத்தியால் மக்களின் மனங்களை மாற்றலாம் என்று ஆளும் தரப்பு சிந்திக்கின்றது.
ஆனாலும் ஒன்றை மட்டும் உணர வேண்டும். பழைய புத்தகத்திற்கு புது உறைகளைப் போட்டு விட்டு அதனை கறையான் புற்றுக்கு அருகில் வைப்பதை போன்றதே இலங்கை அரசின் அபிவிருத்தி நோக்கம்.
அதாவது இலங்கையில் இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் அனைத்து இனங்களும் சமத்துவம் சகோதரத்துவம் என்னும் அடிப்படையில் ஒற்றுமையுடன் இணைந்து
வாழ வேண்டும் என்று அடிக்கொரு அறிக்கை விடுகின்ற அதே அரசாங்கம் தான் இனவாத நெருப்பை கக்கிக் கொண்டிருக்கின்றது.
தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது சலுகைகளோ சன்மானங்களோ இல்லை. மரபு வழியாக தம் உயிரோடும் உடலோடும் பிரண்டு உருண்ட சொந்த மண்ணில் எந்த வித அச்சுறுத்தல்களும்
இன்றி நிம்மதியாகவும் தன்னிறைவாகவும் வாழ்வதற்கான உரிமையினையே காலம் காலமாக வேண்டி நிற்கின்றனர்.
இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் மக்களின் மனங்களை வெல்லலாம் என்று இலங்கையரசு தொடந்தும் எதிர்பார்ப்பதே கவலைக்குரிய விடயமாகும்.
வரலாற்று காலத்திருந்தே இலங்கை முழுவதும் தமிழ் இனப் பரம்பல்கள் காணப்பட்டன. பின்னர் வடஇந்தியாவிலிருந்து வந்த விஜயனை பிற்பட்ட அரசுகளால் தமிழ்மக்களுக்கான நிலவுரிமை வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில் திட்டமிட்டு சுருக்கப்பட்டு வந்தது.
தன் பின்னர் வடக்கு கிழக்கு நிலங்களிலே திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் தமிழ்பேசும் மக்களுக்கான நிலவுரிமையினை 1948 க்கு பின்னர் வந்த அரசுகள் சுருக்கிக் கொண்டு வந்துள்ளன.
இன்னும் அதேயே நிறைவேற்றுவதற்கு வென்றுள்ள அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.
இதனடிப்படையிலேயே வடக்கோடு இணைந்திருந்த கிழக்கு மாகாணத்தை வலிந்து பிரித்து விட்டு மூவினங்களும் சமமாக வாழ்கின்ற அம்மாகாணத்தில் எதுவித சலனமும் இன்றி தேர்தலை நடத்தி
இரண்டு முறையும் கிழக்கு மாகாணசபையை பிடித்து பொம்மையாட்சி நடத்துகின்றது இலங்கை அரசாங்கம்.
ஆனால் வடக்கில் மிகப் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்வதால் தம் வெற்றி குறித்த சந்தேகத்தில் வடமாகாணத் தேர்தலை இதுவரை காலமும் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சர்வதேசத்தின் நெருக்குதல்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இந்ந வடமாகாண சபைக்கான தேர்தலை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதற்காக தமிழ் பேசும் மக்களது வாக்குகளை சிதறடிப்பதற்காக எதுவித அரசியல் வரலாற்று அறிவுமற்ற நபர்களை பல்வேறு சுயேட்சை குழுக்களாக களமிறக்கி அற்ப சொற்ப சலுகைகளையும்
வாக்குறுதிகளையும் தொடர்ந்தும் வழங்கி வருவது தமிழ் மக்களை மேலும் மேலும் ஏமாற்றும் செயலாகும்.
அன்புக்குரிய எமது மக்களே!
இன்று முழு உலகமே இந்த தேர்தலை முழுமனதுடன் எதிர்பார்க்கின்றது. எதற்காக இலங்கைத் தீவுக்குள் அச்சுறுத்தல் அற்ற வாழ்க்கையை ஒவ்வொரு சிறுபான்மையினமும் அனுபவிக்கின்றதா என்பதனை இந்தமுறைத் தேர்தல்தான் உலகிற்கு உணர்த்தப் போகின்றது. தமிழ் மக்களாகிய நாம் முழுமையான வாக்குப்பதிவுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
எனவே காலத்தையும் சூழ்நிலையையும் தேவையினையும் உணர்ந்து தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான இறைமையினை நிலைநாட்டக்கூடிய தமிழ் தேசியத்திற்காய் போராடுவோருக்கே உங்களது வாக்குகளை வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் உரிமையுடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம்.

ad

ad