புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013

தாயக மண்ணில் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ தீர்வு கிடைக்க வேண்டும்: சிறீதரன் எம்.பி
வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்கள் சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ்வதற்குரிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும் என முட்கொம்பனில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி முட்கொம்பன் பிரதேசத்தில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார்.
கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் சு.தயாபரன் அவர்களின் தலைமையில் மங்கள விளக்கேற்றல், உயிர் நீத்தோர் அகவணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வு, இரவு 8 மணியளவில் நிறைவு பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டோம். ஏறக்குறைய 140,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் காணமலும் போனார்கள். நாங்கள் கொல்லப்பட்ட போது, எங்கள் உறவுகள், பிள்ளைகள்,சகோதரர்கள், சகோதரிகள் இல்லாமல் போன அந்த மே 19ம் திகதி, சிங்கள தேசமெங்கும் இலங்கை அரசு சிங்கக் கொடிகளைப் பறக்க விட்டு வெற்றி விழாக் கொண்டாடியது.
காலி முகத்திடலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது வெற்றிப் பிரகடனத்தைச் செய்தார். அந்த வெற்றிப் பிரகடனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனது அண்ணனிடம் கையளித்தார்.
சிங்கள இனம் இந்தத் தமிழினத்தை அழித்து அதில் ஒரு வெற்றி கொண்டாடி அந்த வெற்றியின் மமதையினை எவ்வாறு கொண்டாடினார்களென்று அந்தச் செய்தி தெளிவாகச் சொல்கிறது. இதிலிருந்து ஒரு விடயம் எங்களுக்குத் தெளிவாகிறது.
அதாவது இந்த நாட்டிலே இரு தேசங்கள் இருக்கின்றன. அவை சிங்கள மற்றும் தமிழ் தேசம். இந்த தமிழ் தேசத்திலே வாழுகின்ற நாங்கள் எங்கள் மண்ணிலே வாழுகின்ற உரிமையினைக் கேட்கின்றோம்.
வடக்கு கிழக்கு என்பது வரலாற்று ரீதியாக நாங்கள் தோன்றி வளர்ந்த மண். இந்த வடக்கு கிழக்கு இணைந்த தாயக மண்ணில் எங்கள் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, எங்களுடைய தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு தேசமாக நாங்கள் வாழ்வதற்குரிய தீர்வு எமக்குக் கிடைக்க வேண்டும்.
அந்தத் தீர்வை பிரிக்கப்படாத இலங்கைக்குள் நாங்கள் கேட்கிறோம். ஆனால் நீங்கள் எங்களை அழித்து, எங்கள் நிலத்தில் வருடாவருடம் யுத்தவெற்றி விழாவினைக் கொண்டாடுகிறீர்கள்.
எங்கள் இடங்களிலே புத்த விஹாரைகளைக் கட்டுகிறீர்கள். எதற்காக அரச மரங்களை உருவாக்கி புத்தர் சிலைகளை வைக்கிறீர்கள். சிறிது காலங்களின் பின்னர் இந்த இடங்களை சிங்களவர் வாழ்ந்த இடங்களாக இவர்கள் சொல்வார்கள்.
எங்களுடைய இடங்கள் அடாத்தாகப் பிடிக்கப்படுகின்றன. எங்கள் இயற்கை வளங்கள் யுத்தம் முடிந்த சிங்களவர்களால் பறித்தெடுத்துச் செல்லப்பட்டன.
காப்பெற் வீதி போடுவதற்காக எங்கள் பிள்ளைகளின் துயிலுமில்லங்களையெல்லாம் சிங்கள ஒப்பந்தகாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இவற்றையெல்லாம் செய்து விட்டு எந்த உரிமையோடு இப்போது உங்களிடம் வந்து வாக்குக் கேட்கிறார்கள்.
அன்பானவர்களே! எங்களை அழித்தவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போமானால் நாம் தமிழராக இருக்கமுடியுமா, எங்களுக்கு உணர்வு இருக்கிறதா என நாங்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ப.அரியரத்தினம், த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் சு.தயாபரன், சி.சுப்பையா, கட்சி செயற்பாட்டாளர் ஜெயக்குமார், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

ad

ad