புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

    சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

சிரியா மீது அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக தாக்குதல்
நடத்தக் கூடாது என்று ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.பி. செய்தி நிறுவனத்துக்கும் ரஷிய அரசின் சேனல்-1 தொலைக்காட்சிக்கும் அவர் அளித்த பேட்டியில் கூறியது: சிரியாவுக்கு எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய எஸ்-300 ரக ஏவுகணைகளின் பாகங்களை ரஷியா வழங்கியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின்றி சிரியா மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் முடிவு செய்தால் சிரியாவுக்கு கூடுதலாக ஏவுகணை பாகங்கள் விற்பனை செய்யப்படும்.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களை எதிர்த்து ராணுவம் போரிட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்று கூறுவது கேலிக்குரியது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தினால் அதையே சாக்காகக் கூறி தங்கள் நாட்டின் மீது தடைகள் விதிக்கப்படவும், தாக்குதல் நடத்தவும் முனையும் என்பது சிரியாவுக்குத் தெரியும்.
ஒருவேளை சிரியாவில் ரசாயன ஆயுதங்களை ராணுவம் பயன்படுத்தியது என்றால் அதற்கான ஆதாரங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட தகவல் எங்களால் நம்பும்படி இருக்க வேண்டும். ஆனால், அது வதந்திகளின் அடிப்படையிலோ, ரகசிய உளவாளிகள் அளிக்கும் தகவல் அடிப்படையிலோ இருக்கக் கூடாது.
ஜி-20 நாடுகளின் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா என்னைத் தனியாகச் சந்திக்கவிருந்தார். அந்தச் சந்திப்பை அவர் ரத்து செய்தது வருத்தம் அளிக்கிறது. ரஷியாவுக்கு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் என்னை மற்றநாடுகளைத் திருப்திசெய்வதற்காக ரஷிய மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றார் புதின்.
இதனிடையே, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 60 நாள்கள் வரை தாக்குதல் நடத்த அனுமதிக்கும் வகையில் இத்தீர்மானம் வரையப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஒபாமாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிரியா மீது தாக்குதல் நடத்தும் ஒபாமாவின் திட்டத்துக்கு அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எனினும், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க மக்களிடையே கடும் எதிர்ப்பு காணப்படுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம் நடத்திய கணிப்பில் சுமார் 48 சதவீத அமெரிக்கர்கள், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு வெறும் 29 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் ஏபிசி செய்தி சேனலும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பிலும் சுமார் 48 சதவீதம் பேர் சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ad

ad