புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2013

    ஜம்முவில் தற்கொலைப்படைத் தாக்குதல்

ஜம்முவில் ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் காவல் நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது நடத்திய அதிரடித் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும்,
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அமெரிக்காவில் சந்திக்க உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து 3 தற்கொலைப்படை பயங்கரவாதிகள் எல்லை வழியாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்தியத்தில் கதுவா பகுதிக்குள் வியாழக்கிழமை காலையில் ஊடுருவினர். அவர்கள் ஒரு ஆட்டோவை வழிமறித்தனர். அதன் டிரைவர் ரோஷன்லாலை துப்பாக்கி முனையில் மிரட்டி அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு ஓட்டிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினர்.
ராணுவ முகாம் ஏதும் அருகில் இல்லை என்பதால், கதுவா பகுதியில் உள்ள ஹீராநகர் காவல் நிலையம் முன்பு காலை 6.45 மணிக்கு ஆட்டோவை நிறுத்தச் செய்தனர். பயங்கரவாதிகள் காவல் நிலையத்துக்குள் சென்றபோது, ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பினார்.
இதனிடையே, ராணுவச் சீருடையில் இருந்த பயங்கரவாதிகள், போலீஸார் மீது கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து கையெறி குண்டுகளையும் வீசினர். இத்தாக்குதலில் ஒரு துணை சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீஸாரும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபரும் உயிரிழந்தனர். மற்றொரு துணை சப்-இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.
ராணுவ முகாம் மீது தாக்குதல்
இத்தாக்குதலை நடத்திய பின், அப்பகுதியில் இருந்த ஒரு பொதுத் தொலைபேசி கடைக்காரரை சுட்டுக் கொன்றனர். அதைத் தொடர்ந்து, ஒரு டெம்போ வாகனத்தை டிரைவர் மற்றும் கிளீனருடன் கடத்திக் கொண்டு பயங்கரவாதிகள் தப்பினர். வழியில் டெம்போவின் கிளீனர் முகமது ஃபெரோஸ் என்பவரை சுட்டுக் கொன்றனர்.
டெம்போவில் சம்பா பகுதிக்கு அருகில் உள்ள ராணுவ முகாமுக்குச் சென்றனர். அந்த முகாமின் வாயிற்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது சுட்டனர்.
அதைத் தொடர்ந்து, அங்குள்ள ராணுவ உணவகத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாகச் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும் சுட்டனர்.
இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் ராணுவ உயரதிகாரியான லெப்டினன்ட் கர்னல் விக்ரம்ஜித் சிங் உள்பட ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டனர். கர்னல் நிலையிலான கமாண்டிங் ஆபீசரான ஏ.உத்தையா உள்பட 3 பேர் காயமடைந்தனர். உத்தையா இப்போது பதான்கோட்டில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இத்தாக்குதலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முகாமுக்கு அதிரடிப்படை கமாண்டோக்களையும், விரைவு நடவடிக்கைக் குழுக்களையும் ராணுவம் வரவழைத்தது. சில மணிநேர துப்பாக்கிச் சண்டைக்குப் பின் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தில்லியில் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் 16 முதல் 19 வயது நிரம்பியவர்கள் என்றும் அவர்களது உடல்கள் ராணுவத்தினரின் காவலில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையைக் குலைக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
4 பயங்கரவாதிகள்?
இத்தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""முதற்கட்டத் தகவல்களின்படி எல்லைக்கு அப்பாலிருந்து 4 பயங்கரவாதிகள் வந்தனர்'' என்று தெரிவித்தார். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இது புதிய ஊடுருவல் சம்பவமாகும். வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில்தான் பயங்கரவாதிகள் சர்வதேச எல்லையைக் கடந்து வந்திருக்க வேண்டும்'' என்றார்.
தாக்குதல் நடத்தியது யார்?
இதனிடையே, அதிக அளவில் அறியப்படாத ஒரு பயங்கரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஷோஹடா பிரிகேட் என்ற அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சமி-உல்-ஹக் என்பவர், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தொலைபேசி மூலம் கூறுகையில், ""ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் நாங்கள்தான் தாக்குதலை நடத்தினோம். 3 பேர் இத்தாக்குதலை நடத்தினர். அவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். 3 பேரில் ஒருவருடன் தகவல் தொடர்பு இல்லை. ராணுவ முகாமுக்குள் உள்ள மற்ற இருவர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்'' என்று தெரிவித்தார்.

ad

ad