புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2013

மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டியெழுப்பி வழிபட அனுமதிக்க முடியுமா?: கீதாஞ்சலிக்கு சரவணபவன் சவால்
சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று கீதாஞ்சலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.
நாம் வீடுகளில் தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றோம். இதை யாராலும் தடுக்கமுடியாது.
இப்படி இருக்கையில் கிளிநொச்சியில் கீதாஞ்சலி அம்மையார் மாவீரர் தினம் கொண்டாட அரசிடம் அனுமதி பெற்றுத் தருவேன் என்கிறார். இவர் யார் எமக்கு அனுமதி பெற்றுத்தர?
காணாமற் போன தன் கணவரைத் தேட முயற்சிக்காத இவர் வாக்குப் பெறுவதற்காக கதைவிடுகிறார்.
முடிந்தால் சிங்கள அரசினால் தரை மட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டி எழுப்பி மக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சவால் விடுத்தார்.
தென்மராட்சி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது:
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சக்திமிக்க வேட்டுகளுக்கு சமமானவர்கள். இவர்கள் பெறும் வாக்குகளால் கிடைக்கும் வெற்றி, தமிழனைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். அது உங்கள் கைகளிலேயே இருக்கிறது
2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி, தமிழ் இனம் தாங்க முடியாத துன்பத்தில் ஆழ்ந்திருக்கையில், வெற்றிக்களிப்பில் வெடி கொளுத்தி ஆரவாரமாக கொண்டாடினர்.
மண்ணைத் தொட்டு முத்தமிட்டு கும்பிட்டனர். தமிழர்களின் வலியில் இன்பம் கண்டனர்.
இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பை நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
1971ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், 70 வீதமான மக்கள் வாக்களித்து 18 பேரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினோம்.
இதேபோன்றே எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலிலும் 80, 90 வீதம் வாக்களித்து மாகாணசபைக்கான அனைத்து ஆசனங்களையும் கூட்டமைப்பு கைப்பற்றும் வகையில் அணி திரள்வோம்.
22ம் திகதி கிடைக்கும் தேர்தல் முடிவின் போது நாமும் வெடிகொளுத்திக் கொண்டாடுவோம்.
அந்த வெடிஓசை நமது வலியின் இன்பம் கண்டவர்களுக்கும், மண்ணைத் தொட்டுக் கும்பிட்டவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பதிலடியாக அமைய வேண்டும்.
ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தான் மக்களோடு மக்களாக இருந்து செயற்படுவதாகக் கூறுகின்றார். அது உண்மைதான் மக்களோடு மக்களாக நின்று தான் நம்மைக் காட்டிக் கொடுக்கின்றனர்.
இவர்கள்தான் ஊடகவியலாளர் மீதான படுகொலைகளுக்கும், தாக்குதல்களுக்கும் துணை போகின்றனர்.
தமிழ் மக்களுக்கு நியாய பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பல்வேறு உதவிகளைத் தடுக்கின்றனர்.
சிங்கள அரசு வடக்குக்கு பொருளாதாரத் தடைவிதித்து துன்புறுத்திய போது ஒரு சோப் துண்டு நூறு ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் ஆயிரம் ரூபாவுக்கும் விற்பனை செய்தனர்.
மக்கள் ஒரு பொருளையும் இங்கு கொண்டுவர முடியாத நிலையில், இவர்கள் இராணுவத்தின் பங்களிப்புடன் பொருள்களைக் கொண்டுவந்து கோடி கோடியாகக் கொள்ளை இலாபம் அடித்தனர்.
இவை எல்லாம் ஈ.பி.டி.பி. யினர் மக்களோடு மக்களாக நின்று செய்த சேவைகள்தான் என்பதை எம்மக்கள் மறந்து விடவில்லை என்றார்.

ad

ad