புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

கிழக்கு மாகாண சபையில் இன்று கூச்சல் குழப்பம்
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த பிரேரணைக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, சபையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டதுடன் சபை நடவடிக்கையும் ஒத்திவைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வு அதன் தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பான தனி நபர் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.
13வது திருத்த சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு தென்னிலங்கை பேரினவாத அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை கிழக்கு மாகாண சபை முறியடிக்க வேண்டும் என்று இதன்போது அவர் வலியுறுத்தினார்.
சிறுபான்மையினரின் நலன்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் இதனை ஒழிப்பதற்கோ அல்லது 13வது திருத்த சட்டத்தில் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்களை குறைப்பதற்கோ கிழக்கு மாகாண சபை ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் ஜெமீல் கேட்டுக் கொண்டார்.
இவரது இந்த உரையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் குறித்த பிரேரணைக்கு தனது பலமான எதிர்ப்பை வெளியிட்டார்.
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதால் அது குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அது மாத்திரமல்லாமல் 13 ஆவது திருத்த சட்ட விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இந்த சபையில் அது பற்றி விவாதிக்க முடியாது என்று தெரிவித்த முதலமைச்சர், இந்த விவாதத்தை நடத்துவதற்கு தன்னால் அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீலுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஜெமீலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர். அதேவேளை முதலமைச்சருக்கு ஆதரவாக ஆளும் தரப்பு சிங்கள உறுப்பினர்கள் சிலர் கோஷமெழுப்பினர்.
“கிழக்கின் ஆட்சியை இன்றே மாற்றியமைப்போம்” ,“பொம்மை ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை ஒத்திவைத்தார்.
இதேவேளை, இவ்விடயத்தில் எமக்கு அநீதியிழைக்கப்படுமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து புதிய தவிசாளரைத் தெரிவு செய்வோம் என்றும் ஆட்சியை மாற்றியமைப்போம் என்றும் கடும் தொனியில் எச்சரித்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலைமைச்சரும் தவிசாளரும் குறித்த பிரேரணையை விவாதிப்பதற்கு இணங்கி வந்தனர். அதன் பின்னர் ஒத்திவைப்புக்கப்பட்ட சபை தவிசாளரினால் மீண்டும் கூட்டப்பட்டு விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad