புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2013

5 மாணவர்கள் கடத்தல்! விசாரணையில் தவராசாவின் வாதத்தால் திடீர் திருப்பம்! ஜப்பான் தூதுவர் வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை
மனுதாரர்கள் சார்பாக ஆட்கொணர்வு மனு விசாரணையில் சாட்சியம் அளிக்க முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பான் வெளிநாட்டு தூதுவருமான வசந்த கரன்னாகொடவுக்கு அழைப்பாணை விடுக்கும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார் 
மனுதாரர்களின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் முன்வைக்கப்பட்ட வாதத்தையடுத்தே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிட்டிய முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பானின் இலங்கைத் தூதுவருமான வசந்த கரன்னாகொடைக்கு நவம்பர் மாதம் 20ம் திகதி பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு வெளிநாட்டு அமைச்சு ஊடாக அழைப்பாணை அனுப்பும்படி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்
மனுதாரார்களின் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது விண்ணப்பத்தின் போது நீதி மன்றின கவனத்திற்கு கொண்டு வந்ததாவது,
2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தெஹிவளையில் கடத்தப்பட்ட ஐந்து இளைஞர்களில் 17 வயதையுடைய மாணவன் ராஜீவ் நாகநாதனின் தாயார் சரோஜா நாகநாதனும், 18வயது மாணவனான பிரதீப் விஸ்வநாதன் சார்பில் அவரது தந்தையார் விஸ்வநாதனும், 18 வயது மாணவனான திலகேஸ்வரன் இராமலிங்கம் சார்பில் அவரது தாயார் காவேரி இராமலிங்கமும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த ஆட்கொணர்வு மனுக்களின் விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய இந்த நீதிமன்றத்தில் முன்னர் கடமையாற்றிய பிரதான நீதிவான் ரஸ்மித் வெங்கப்புலி முன்னிலையில் நடைபெற்றது இந்த விசாரணையில் மனுதாரர்கள் மூவரும் சாட்சியமளித்துள்ளனர்.
மனுதாரர்களின் சாட்சியங்களை ஒப்புறுதிப்படுத்த முக்கிய சாட்சியாக முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்பொழுது ஜப்பானின் இலங்கைத் தூதுவருமான வசந்த கரன்னாகொடையின் சாட்சியம் முக்கியமானதாகும்.
முதலாவது மனுதாரரான சரோஜா நாகநாதன், அவரது ஒரே பிள்ளை ராஜீவ் கடத்தப்பட்ட பின்னர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமையால் ராஜீவ் நாகநாதனின் தாயாரான சரோஜா நாகநாதன் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தனது சாட்சியத்தில்,
18-09.2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஒரே பிள்ளையான தனது மகன் மருத்துவ மேற்படிப்பிற்காக லண்டன் பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருந்த நிலையில் அவரது சகோதரனுக்கும் மற்றும் மூன்று நண்பர்களுக்கும் இரவு விருந்தொன்றினை வழங்க செப்டெம்பர் மாதம் 17ம் திகதி உணவு விடுதிக்கு சென்றிருந்தாகவும் விருந்து வழங்கிவிட்டு வந்த வேளையிலேயே தனது மகனும் அவரது நண்பர்களும் தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார்.
மேலும் தனது சாட்சியத்தில், கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள தனது மகனை கண்டுபிடித்துத் தரும்படி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது மட்டுமின்றி நாட்டின் பல இடங்களில் தேடித்திரிந்த பொழுது 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தனது மகன் தொலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொண்டு தன்னையும் ஏனைய நான்கு மாணவர்களையும் கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கமாண்டர் சம்பத் முனசிங்கவும், ஹெட்டியாராச்சி உட்பட கடற்படையை சேர்ந்த நால்வரே தங்களைக் கடத்தியதாகவும் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் தனது மகன் தனக்கு கூறியதாகவும் சாட்சியம் அளித்துள்ளார்.
2009ம் ஆண்டு மே மாதம் தொலைபேசியில் தன்னைத் தொடர்பு கொண்ட சகாப்தீன் என்பவர் ஐந்து இளைஞர்களையும் கடற்படையைச் சேர்ந்த தனக்கு தெரிந்த அதிகாரிகளே கடத்தி வைத்துள்ளனர். ஒரு கோடி ரூபா தந்தால் அவர்களை விடுவிக்கலாம் என எனக்கு கூறியதுடன் இதனை பொலிசிற்கு அறிவித்தால் உனது பிள்ளையை உயிரோடு பார்க்கமாட்டாய் என எச்சரித்து பணத்தை ஆயத்தப்படுத்தும்படி கூறினார் என தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.
அத்துடன், தனது ஒரே மகன் கடத்தப்பட்டதனால் கணவர் மனநோயாளியாகி விட்டதாகவும் தங்களிடம் ஒரு கோடி ரூபா கொடுக்க வசதியின்மையால் பணத்தைக் கொடுத்து பிள்ளையை மீட்க முடியவில்லையெனவும் சாட்சியமளித்துள்ளார்.
கடற்படை கமாண்டேர் சம்பத் முனசிங்கவே ஐந்து இளைஞர்களையும் கடத்தி திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைத்திருப்பதாக தனது மகன் தனக்கு கூறியதாக சரோஜா நாகநாதன் சாட்சியம் அளித்துள்ள நிலையில்,
கடற்படை கமாண்டர் சம்பத் முனசிங்கவிற்கு எதிராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, சம்பத் முனசிங்கவிற்கு புலிகளுடன் தொடர்பு உள்ளதாக 2008ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கடற்படை கமாண்டோ சம்பத் முனசிங்கவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடாத்திய பின்னர் கொழும்புக் கோட்டை நீதிமன்றில் விசாரணை அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
கடத்தப்பட்டு காணாமல் போன ஜந்து இளைஞர்கள் விடயத்தில் கடற்படை கமாண்டோ சம்பத் முனசிங்கவிற்கு தொடர்பு உள்ளதாக சான்று உள்ளதென கொழும்புக் கோட்டை நீதிமன்றில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்த மேலதிக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை அறிக்கை சம்பந்தமாக சான்றளிக்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம் ஏ. ஜயதிலக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி ரஞ்சித் முனசிங்க, கொழும்புக் கோட்டை நீதிமன்றப் பதிவாளர் ஆகியோருக்குக்கும், கொழும்புக் கோட்டை நீதிமன்றத்தில் கடற்படை கமாண்டோ சம்பத் முனசிங்கவிற்கு எதிரான தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டாளரான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடைக்கும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிமன்றத்தை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா வேண்டிக் கொண்டதையடுத்து,
2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் திகதி பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு வெளிநாட்டு அமைச்சு ஊடாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடைக்கும் மற்றைய சாட்சிகளுக்கும் அழைப்பாணை அனுப்பும்படி நீதவான் நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

ad

ad