வெள்ளி, அக்டோபர் 18, 2013

சென்னையில் பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

'லத்திகா' படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்து பிரபலமான இவர், 'ஒன்பதுல குரு', 'சும்மா நச்சுன்னு இருக்கு', 'ஆர்யா சூர்யா' போன்ற
படங்களிலும் நடித்துள்ளார்.


தற்போது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடித்து வருகிறார். வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கடன் வாங்கி தருவதாக பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றிவிட்டதாக பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார்கள் குவிந்தன. ஆந்திரா, கர்நாடக மாநிலத்தவர்களை ஏமாற்றியதாகவும் கூறப்பட்டது. மோசடி பணத்தில் படங்கள் தயாரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.50 கோடி கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி கமிஷன் பெற்ற புகாரின் பேரில் டெல்லி போலீசாராலும் இவர் கைது செய்யப்பட்டார். திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பல மாதங்கள் சிறையில் இருந்தார். ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீன் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார். மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கு விசாரணைக்காக எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் நிருபர்களிடம் பேசியபோது, அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வாங்கியுள்ளேன். இனி, என்னை நிறைய படங்களில் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு வெளியில் வந்த பவர் ஸ்டார் சீனிவாசன் சிவகாசி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிவகாசிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் எழும்பூரில் பவர்ஸ்டார் சீனிவாசனை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர் முன்ஜாமீனை காட்டியதால் விட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றது தெரிய வந்துள்ளது.