புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013



          ந்திய சினிமாவின் நூற்றாண்டை நான்கு நாள்‘"சிறப்பாக' கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது தமிழக அரசும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும். ஆனால், "தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கும் மறு மலர்ச்சிக்கும் வித்திட்ட ஜாம்பவான்கள் பலரும் மறக்கடிக்கப்பட்டனர்,
புறக்கணிக்கப்பட்டனர்' என் றெல்லாம் மன அழுத்தங்களோடு புழுங்கிக்கொண்டிருக் கிறார்கள் மூத்த கலைஞர்கள் பலர். ஒரு அசாதாரண மான சூழல் இங்கு நிலவுவதால் தங்களது ஆதங்கங்களை வெளிப்படையாகச் சொல்வதில்  அவர்களிடம் தயக்கமே நிலை கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அதனை உடைக்கும் விதத்தில் முதல் குரலை எழுப்பியிருக்கிறார் பிரபல எடிட்டர் பி.லெனின். தமிழ் சினிமாவுக்குப் பெருமைச் சேர்த்த முக்கியமானவர்களில் ஒருவரான பழம்பெரும் இயக்குநர் பீம்சிங்கின் மகன் இவர். அவரிடம் நாம் பேசிய போது,’""இந்திய சினிமாவின் வளர்ச்சியில் தென்னிந்திய சினிமாக்களுக்குத் தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் தென்னிந்திய மொழி திரைப்படங் களை புறக்கணித்துவிட்டு இந்திய சினிமாவை பேசிவிட முடியாது. இந்திய சினிமாவிற்கு நூற்றாண்டு என்பது பெருமைக்குரிய விஷ யம்தான். அதனை கொண்டாடி மகிழலாம் தான். கொண்டாடுவது என முடிவெடுத்த பிறகு அதனை எப்படி கொண்டாடுவது என்று உருப்படியாக சிந்தித்திருக்க வேண் டும். அந்த சிந்தனை இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.

நூற்றாண்டு கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் சில தியேட்டர்களிலும் பூங்காக்களிலும் பல திரைப்படங்களை திரையிட்டனர். சினிமாவின் உன்னதத்தையும் தமிழர்களின் பண்பாட்டை யும் எந்த வகையிலும் பிரதிபலிக்காத வெறும் கேளிக்கையை மட்டுமே முன்னிறுத்துகிற படங்கள் அவை. இத்தகைய படங்கள்தான் இந்த 100 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் வந்தவையா? வெட்கமாக இருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து கேமராவின் பாகங்களை விற்க வந்த எல்லீஸ் ஆர்.டங் கன்தான் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய வடிவத்தைத் தந்தவர். அவர் இயக்கிய எம்.ஜி.ஆரின் "மந்திரி குமாரி'யை திரையிட்டி ருக்கலாம். நாவலில் இருந்து மலர்ந்த "மலைக்கள்ள'னை பரிசீலித்திருக்கலாம். ஏன், செய்யவில்லை? இந்தப் படங்களில் கலைஞர் பங்காற்றியிருக்கிறார் என்பதாலா? வெறும் நடிகர்- நடிகைகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல இந்த கொண்டாட்டம். இந்திய சினிமா நூற்றாண்டை கடந்து வந்ததற்கு காரணம், ஆளுமை செலுத்திய இயக்குநர்கள்தான். அவர்களில் முக்கியமானவர்கள் ராம்நாத், டி.ஆர்.ரகுநாத், பி.ஆர்.பந்துலு போன்றவர்கள். அவர்களையோ அவர்களது படங்களையோ கண்டுகொள்ளப்படவில்லை. 

எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, அஜித், விஜய் மட்டுமே சினிமாவின் தூண்கள் அல்ல. இவர்களைச் செம்மைப்படுத்திய இயக்குநர்கள் வகுத்துத் தந்த பாதையில்தான் இவர்கள் பயணம் செய்தனர். அப்படிப்பட்ட இயக்குநர் களைப் பெருமைப்படுத்தியதா இந்த நூற் றாண்டு விழா? இல்லை என்கிறபோது மனசு வலிக்கிறது. ஆயிரம் அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் சினிமாவுக்கு கலைஞர் கருணாநிதி செய்த தொண்டினை மறந்துவிட முடியாது. அவரை புறக்கணித்துவிட்டு தமிழ் சினிமா வரலாறு கிடையாது. உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும் ஒரு மாபெரும் கலைஞன் கலைஞர். தமிழ் சினிமா வின் கொடை அவர். அவரை ஏன் தமிழ் சினிமா உலகம் மறந்தது? சிவாஜி என்கிற ஆளு மையை அடையாளம் காண வைத்து, தமிழகத்தில் பகுத்தறிவு கருத்துக்களை கொண்டு சென்ற கலைஞரின் "பராசக்தி', வீர வசனங்களுக்குப் பேர்போன "மனோகரா' படங்களைக்கூட திரையிட்டு மகிழாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களிடம் மண்டிக் கிடந்த மூடநம்பிக்கைகளை அழித்தொழிக்கும் பணியில் பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய எம்.ஆர். ராதாவை பற்றிய சின்னக் குறிப்புக்கூட இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இல்லை என்கிறபோது…கோபம்தான் அதிகரிக்கிறது. இப்படி நிறைய சொல்ல முடியும்.



தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்களை பெருமைப்படுத்தாத இந்த விழா சிறுமையாகத் தெரிகிறது''’என்கிறார் மிக இயல்பாகவும் அழுத்தமாகவும்.

ஸ்டுடியோவிற்குள்ளேயே சிறைப்படுத்தப்பட்டிருந்த தமிழ் சினிமாவிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்த இயக்குநர் பாரதிராஜா, சமகால மக்களின் வாழ்க்கை வலிகளை திரையில் விவரித்து 3 முறை தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலுமகேந்திரா போன்றவர் களுக்கு அங்கீகாரம் இல்லை. விழாவிற்கு அழைக்கவும் கூட இல்லை. 

பாரதிராஜாவிடம் விழா குறித்து பேசியபோது, ""கருத்துச் சொல்ல விரும்பவில்லை'' என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டார். இதே பதிலை நம்மிடம் சொன்ன பாலுமகேந்திராவிடம் "உங்களை விழாவுக்கு அழைக்கவில் லையே' என்று கேட்டபோது, ""நான் ஒரு சின்ன ஆள். எனக்கு எதற்கு அழைப்பு?'' என்றார் பாலுமகேந்திரா.

சிறந்த நடிப்பிற்காக நான்கு மொழிகளில் தேசிய விருதும், பல்வேறு மாநில விருதுகளையும் பெற்ற மூத்த நடிகை லட்சுமிக்கும் இந்த விழாவில் எந்த அங்கீகாரமும் இல்லை. அவரிடம் நாம் பேசியபோது, ""எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. தமிழ் சினிமாவை ஒரு வேள்வி போல வரித்துக்கொண்டு சாதித்தவர்கள் பலர். தமிழ்  சினிமாவை தேசிய அளவில் கொண்டு சென்று அந்த காலத்திலேயே வியக்க வைத்தவர்கள் பலர். அவர்களைப் பற்றிய நினைவலைகள் பெரிதாக பதிவு செய்யப்பட வில்லையென்று கேள்விப்பட்டேன். அது ஏன் என்று  எனக்கு தெரியவில்லை. நூற்றாண்டு விழாவில், கலைஞர் போன்றவர்களே தவிர்க்கப்படுகிறபோது நாங்களெல்லாம் எம்மாத்திரம்?'' என்கிறார் ஆதங்கமாக.

திரைப்படக் கல்லூரியில் முறைப்படி சினிமாவை கற்றுத் தேர்ந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த இயக்குநர் தங்கர்பச்சான், ""சினிமா நூற்றாண்டு விழாவில் தமிழ் சினிமா வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. சினிமா வை உருவாக்கியவர்கள், அதனை கொண்டு வந்த வர்கள், அதனை வளர்த்தும், வார்த்தும் எடுத்துச் சென்றவர்கள், சினிமாவிற்காக சொத்துக்களை விற்று கலைக்காகவே வாழ்ந்து பிச்சைக்காரராக அழிந்து போனவர்களையெல்லாம் அடையாளப் படுத்தாமல் சினிமாவை வெறும் வணிக நோக்காகவே பயன்படுத்தி செழிப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் நடிக-நடிகை களை அடையாளப்படுத்துவதிலா அடங்கியிருக்கிறது தமிழ் சினிமாவின் வரலாறு? சினிமாவை பிழைப்பிற்காக பயன்படுத்தும் ஒரு கூட்டத்தினை மட்டுமே அடையாளம் காட்டியிருக் கிறார்கள். 

சினிமாவை ஒரு தவமாக நினைத்து மாற்று சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்ற எத்தனையோ இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விழாவில் கண்டுகொள்ளப்படவில்லை என்பது என் கோபம். ஒரு நூற்றாண்டு விழா வை ஏன் அவசரம் அவசரமாக கொண்டாட வேண்டும்? சினி மாவில் மறுமலர்ச்சியை ஏற் படுத்தியவர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து நீண்டநாள் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி திட்டமிட்டு நடத்தவேண்டிய ஒரு விழாவை, அள்ளித் தெளித்த அவசர கோலம் போல நடத்தி முடித் திருக்கிறார்கள். விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜனாதி பதி, "நல்ல கருத்துக்கள் கொண்ட படங்களை எடுக்க வேண்டும்' என்கிறார். கருத்து சொல்ற படங்களை எங்கே அடையாளப்படுத்துகிறீர்கள்? கௌரவப் படுத்துகிறீர்கள்? கருத்து சொன்ன படங்களையெல்லாம் எங்கே வைத்திருக்கிறீர்கள்? தூக்கி அல்லவா கடாசியிருக்கிறீர்கள். சினிமா கலை...  கலை என்கிறார்கள். ஆனால், கலையாக பார்த்த வர்களெல்லாம் காணடிக்கப்படுகிறார்கள். வியா பாரமாக பார்த்தவனைத்தான் கொண்டாடு கிறார்கள். அவர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் என முடிசூட்டப்படுகிற கொடுமையும் இங்குதான் நடக்கிறது. சினிமாவை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துபவனை புறந்தள்ளிவிட்டு மக்களை சிந்திக்க வைக்கும் மாற்று சினிமா எடுப்பவர்களை ஆராதிக்கிற போதுதான் தமிழ் சினிமா உயிர் வாழும். இல்லையேல் மெல்ல மெல்ல தமிழ் சினிமா சாகும்''’என்கிறார் மிக ஆவேசமாக.

இவர்களை அடுத்து, மேலும் சில மூத்த கலைஞர்களிடம் பேசியபோது அவர்களின் கருத்துக்களும் இப்படியாகவே இருந்தன. மொத்தத்தில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா தமிழ் சினிமா உலகில் கசப்புகளையே உண்டாக்கியிருக்கிறது.

-இரா.இளையசெல்வன், இரா.த.சக்திவேல்

ad

ad