வெள்ளி, அக்டோபர் 18, 2013


‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது! சென்னையில் மோடி பேச்சு!
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வநதார். விமான நிலையத்தில்
தொண்டர்கள் மத்தியில் நரேந்திர மோடி பேசியதாவது,
மாற்றத்திற்கான அலை தமிழ்நாட்டிலும் வீசுகிறது. திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பாரதீய ஜனதாவுக்கு ஒரு மகத்தான வெற்றி. ‘காங்கிரஸ் அல்லாத இந்தியா’ என்பதே இந்திய மக்களின் கனவாக இருக்கிறது. அந்த கனவை நனவாக்கும் மனநிலையை உங்கள் மத்தியில் நான் காண்கிறேன்.
மாற்றத்திற்கான பேரலை நம் நாட்டில் எழுந்து உள்ளது.  இன்றைக்கு உலகமே நம்மைப் பார்த்து எள்ளி நகையாடும் நேரத்தில் யாரோ சொன்ன தகவலுக்காக புதையல் தோண்ட தயாராகியிருக்கிறது மத்திய அரசு. இந்த நாட்டில் இருந்து திருடர்கள், கொள்ளைக்காரர்கள் சூறையாடிய பணம் சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் உள்ளது. அந்த பணம், ஓராயிரம் டன் தங்கத்தின் மதிப்பைவிட அதிகம். அந்த பணத்தை முதலில் இந்தியாவுக்கு கொண்டு வாருங்கள். மக்களுக்கு சேவை செய்வது ஒன்றே பா.ஜனதாவின் கடமை. மீண்டும் ஒருமுறை டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான அரசு ஏற்பட்டால், தமிழக மக்களின் கனவை நனவாக்குவோம்.
மீண்டும் டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது தெரிகிறது. இதுபோன்ற நேரத்தில், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் , நாங்கள் தமிழர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதி கூறுகிறேன். சமீபத்திய திருச்சி பேரணியை வெற்றி பெற செய்தது தமிழக மக்களையே சாரும்.
ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவால் தான் இந்தியாவை பைலின் புயல் தாக்கவில்லை. ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை பைலின் புயல் கடுமையாக தாக்கி, பலத்த சேதத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிப்புக்கள் குறைவு தான். ஏனெனில், இந்தியாவில் மாற்றத்திற்கான அலை ஏற்பட்டுவிட்டது. இதனால், புயல் கூட தாக்குலை குறைத்துக் கொண்டது. காங்கிரஸ் இல்லாத ஆட்சி வேண்டும் என்பதை மக்களின் விருப்பம். நாட்டு மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற பா.ஜ., தொண்டர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.