புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2013

வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைய விரும்பினால் கெஹலியவால் தடுக்க முடியாது! முதலமைச்சர் விக்னேஸ்வரன்
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
முழு நாட்டையும் நாடாளுமன்றம் நிர்வகிக்கும் போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர், ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மதத்தையும் மொழியையும் கொண்டவர்களாக இருந்து மற்றைய இனங்களை, மதங்களை, மொழிகளை அசட்டை செய்யும் விதமாக நடந்து கொண்டதாலேயே அதிகாரங்கள் மத்திய அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறிய அலகுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோ­சம் எழுந்தது.
அந்த வகையில் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைகள் மத்திய அரசின் முகவர்கள் போலத்தான் செயற்பட்டு வந்தன. பங்குதாரர்களாக அல்ல. 1980 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டத்தால் அபிவிருத்திச் சபைகள் கொண்டுவரப்பட்டன.
இவை மாவட்ட மட்டத்தில் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் போதுமானதாக அந்தப் பகிர்வு அமையவில்லை. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கப் பிரதேச சபைகள் சட்டம் ஓரளவு அதிகாரப் பகிர்வை பிரதேச மட்டத்தில் மக்களுக்கு அளிக்க முன்வந்தது.
இதன் பின்னர் தான் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டமானது 13 ஆவது திருத்தத்துடன் கொண்டு வரப்பட்டது.
கொண்டு வரப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாண சபைகள், சட்டத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு மாகாண சபையும், கிழக்கு மாகாண சபையும் சேர்ந்து இணங்கி இயங்க முற்பட்டால் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.
இது தொடர்பில் அமைச்சர் கெஹலிய அப்படி எதுவுமே செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இது சட்டம் சம்பந்தமான விடயம். அதை அவர் ஏதோ தான் நினைத்தது சரியயன்று சொல்லியிருக்கிறார்.
முழு நாட்டையும் நாடாளுமன்றம் தனது எண்ணத்துக்கேற்ப நிர்வகித்த காலம் போய் மாகாண சபைகள் மாகாண மட்டத்தில் நிர்வகிப்பதையும் பிரதேச சபைகள் பிரதேச மட்டத்தில் நிர்வகிப்பதையும் அறிமுகப்படுத்தினர்.
இது மற்றைய மாகாணங்களுக்குத் தேவைப்படாமல் இருந்தபோதும் தமிழ் பேசும் மக்களுக்கு நாம் எதனையும் அதிகபடியாக வழங்கவில்லை என்று ஒரு கருத்தை அரசியல் ரீதியாகச் சிங்கள மக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணமாக மாகாண சபைகள் என்பது மாகாணங்களுக்கும் ஏற்புடையதாக்கப்பட்டன.
ஒன்றுபட்ட நாட்டினுள் அதிகாரப் பகிர்வு என்று கூறும் போது மத்திய அரசு தானாக முன்வந்து போதிய அதிகாரப் பகிர்வை பிரதேசங்களுக்கும் கொடுக்க முன்வந்தாலன்றி, ஒன்று மற்றொன்றின் செயற்பாடுகளில் சதா காலமும் குறுக்கீடு செய்து கொண்டேயிருக்கும்.
இதனால்தான் நாங்கள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வைக் கோரி நிற்கின்றோம். எமது இளைஞர்கள் ஆயுதமெடுத்து, பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டுப் பிரிவினை பெறப்படாமல் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில் தான் மீண்டும் சமஷ்டி அலகைத் தமிழ் மக்கள் தமது தேர்தல் ஊடாக வழங்கக் கோரியுள்ளார்கள் என்றார்.

ad

ad