புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 அக்., 2013

மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர்
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டை சிறீலங்காவில் மனித உரிமைகள், தமிழர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் ஆகியவற்றை காரணமாகக் காட்டி கனடியப் பிரதமர் புறக்கணித்தமை அனைவரும் அறிந்ததே.
அதுவும் குறிப்பாக சர்வதேச நாடுகளில் சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த 30 மாதங்களுக்கு மேலாக கனடிய தேசமே அனைத்து தேசங்களுக்கும்; முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வருவதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் திங்கட்கிழமை, ஒக்டோபர் 28ஆம் நாள் கனடியத் தமிழர் செய்யவுள்ளனர்.
இந்த ஆண்டில் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா வருடாந்த கூட்டத்தொடாரில் நாடுகளின் அறிக்கையில் சிறீலங்கா விடயத்தை விவாதித்த ஒரே நாடு கனடா என்பது மட்டுமன்றி, 2011 இல் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இருந்து சிறீலங்கா விடயத்தை அனைத்து கொமன்வெல்த் கூட்டங்களிலும் முதன்மைப்படுத்திய ஒரே நாடும் கனடாவே.
அத்துடன் ஜ.நா மனித உரிமை அவையில் சமர்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளையும் அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் முன்மொழிந்தும், வாக்களிக்கும் நாடாக இல்லாவிட்டாலும் அதன் வெற்றிக்காக பல நாடுகளை அணுகி காத்திரமாக உழைத்தும், பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், தமது மகிழ்ச்சியை வெளியிட்டு ஆதரித்த நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக நன்றியறிதலை முதலாவதாக வெளியிட்ட நாடும் கனடாவே.
கனடாவில் உள்ள பிரதான கட்சிகளான ஆளும் கன்சவேட்டிவ் கட்சி, எதிர்கட்சியான புதிய சனநாயகக்கட்சி, மூன்றாம் கட்சியான லிபரல் கட்சி அனைத்தும் சிறீலங்காவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஒரே நாடும் கனடாவே.
பிரித்தானியா போன்று கனடிய ஊடகங்களும் சமீபகாலமாக பல செய்திகளை சிறீலங்கா குறித்து பிரிசுரித்துவருவதும் கனடா தழுவி அனைத்து மக்களும் அதனை நன்கு அறிந்தவர்களாக மாறியிருப்பதுவும் இன்றைய சிறப்பம்சம்.
எனவே எமது கனடிய அரசிற்கும், குறிப்பாக மாண்புமிகு பிரதமர் ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாகவும், அத்துடன் கனடா அரசு தொடர்ந்தும் வலியுறுத்தி நிற்கும் சுயாதீன சர்வதேச விசாரணையை விரைவில் ஏற்படுத்த வலியுறுத்தியும், நீதியான தமிழர் தீர்வின் அவசியத்தை எடுத்தியம்பியும், கனடியத் தமிழர் அமைப்புக்களின் ஒத்தாசையுடன் கனடியத்தமிழர் சமூகம், நடாத்தும் மாபெரும் கனடியத் தமிழர் ஒன்று கூடல் ஒட்டாவா கனடியப் பாராளுமன்ற முன்றல், வரும் திங்கட்கிழமை, ஒக்டோபர்; 28ஆம் நாள், காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ரொரன்ரோ, மொன்றியல் நகரங்களில் இருந்து பெருவாரியான தமிழர்கள் ஒட்டாவா வாழ் தமிழ் மக்களுடன் இந்நிகழ்வில் இணைந்து கொள்கின்றனர். ஓட்டாவா செல்வதற்கான பேரூந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒட்டாவாவில் பல்வேறு இராஐதந்திர செயற்பாடுகளை அன்று முன்னெடுக்கும் பல்வேறு பணிகளை பல தமிழர் அமைப்புக்கள் பகிர்ந்து முன்னெடுத்து வருவதாக செயற்பாட்டாளர்கள் மேலும் அறியத்தந்துள்ளனர்.ஓற்றுமைப்பட்ட இனமாக ஒரணியில் அணிதிரள்வோம் என கனடிய தமிழர் சமூகம், கனடியத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
தொடர்புகளுக்கு: 416-930-5937 , 647-203-6261, 416-903-6058 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ad

ad