புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2013

வடமாகாண அமைச்சுப் பதவிகள் அறிவிப்பு- ஐங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வடமாகாண சபைக்கான அமைச்சரவை தெரிவு தொடர்பில் விளக்கமளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள், அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப் பெறக் காலதாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் அடையாளம் காணவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னும்கூட கிடைத்தபாடில்லை.
எமது கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் தமது அமைச்சர் விருப்புகளைத் தெரிவித்திருந்தன. எனினும் சகல உறுப்பினர்களும் ஒரேமாதிரியான தேர்வுக்கே உட்படுத்தப்பட்டனர்.
போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது.
ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது.
எதிர்க்கட்சியாக இதுவரை இருந்து தற்போது ஆட்சியில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நாம் எமது நோக்குகளில் அடிப்படை வித்தியாசத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அத்துடன் மக்கள் எமக்களித்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.
எனினும் குறிப்பிட்ட அளவு அமைச்சர்களையே சட்டப்படி நாங்கள் நியமிக்க வேண்டியிருந்தது. பலருக்குத் தகைமையிருந்தும் சிலருக்கே அமைச்சுப் பதவிகள் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் பிரதேச பிரதிநிதித்துவம், கட்சியடிப்படை, நிர்வாகப் பொறுப்புக்களின் அந்நியோன்யம் ஆகியனவும் கருத்தில் எடுக்கப்பட்டன.
மக்களின் ஆதரவைப்பெற்ற கட்சிகளுக்கு உரிய முன்னுரிமையும் அளிக்கப்பட்டது. இவ்வாறான அடிப்படையிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதேநேரம் எந்த ஒரு உறுப்பினருக்கு குறிப்பிட்ட அமைச்சுத் துறை சார் பொறுப்புக்கள் கொடுக்கப்படாமல் விடுபடவும் இல்லை.
அவர்கள் அந்தந்த அமைச்சின் குறிப்பிட்ட துறைசார் பொறுப்புக்களை ஏற்று அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவார்கள். விடுபட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் அந்தந்த அமைச்சர்களால் நேரடியாகவே கண்காணிக்கப்படுவன. குறிப்பிட்ட பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் சில பொது ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டே செயலாற்ற வேண்டியிருக்கும்.
அவையாவன:-
1. காலத்திற்குக் காலம் பொறுப்புள்ள தலைமை அலுவலருடன் சேர்ந்து குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக ஆற்றப்படும் காரியங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.
2. அதேபோல் அந்தந்த அமைச்சரினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களின் நன்மை தீமைகள், பயன்கள், விளைவுகள் ஆகியன தொடர்ந்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
3. இரு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் தமது கருத்துக்களை மேற்படி உறுப்பினர்கள் எழுத்து மூலம் தெரியப்படுத்தி வரவேண்டும்.
இவற்றை விட சில நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டி இருக்கும். அவை பின்னர் அறிவிக்கப்படும்.
அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு,
சபையின் தவிசாளர் - சீ.வீ.கே.சிவஞானம் (இ.த.அ.கட்சி யாழ்)

சபையின் பிரதி தவிசாளர் - அன்ரன் ஜெயநாதன் (இ.த.அ.கட்சி முல்லைத்தீவு)
முதலமைச்சர் - நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் (பொது வேட்பாளர் யாழ்)
வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர் - பி.ஜங்கரநேசன் (ஈ.பீ.ஆர்.எல்.எப் யாழ்)
கல்வி, கலாசார, அமைச்சர் - தி.குருகுலராஜா (இ.த.அ.கட்சி கிளிநொச்சி)
சுகாதார அமைச்சர் - வைத்திய கலாநிதி .பி.சத்தியலிங்கம் (இ.த.அ.கட்சி வவுனியா)
மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் - டெனீஸ்வரன் (ரெலோ மன்னார்)
கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு-
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 14
ஈ.பீ.ஆர்.எல்.எப் - 06
ரெலோ - 05
புளொட் - 02
ரி.யு.எல்.எப் - 01
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் - 01
பொது வேட்பாளர் - 01
மொத்தம் - 30
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் அன்ரன் ஜெயநாதனுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயுப் அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும்.
வடமாகாணசபை மற்றைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம். இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர் களையப் பாடுபடுவோமாக!

ad

ad