புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013


            "அய்யா... கன்பார்மா அது போலீஸ் பக்ருதீன்தான்... எல்லீஸ் ரோட்லதான் இருக்கறான். இன்னைக்கி வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை கூட்டம் அதிகமா இருக்கு. மெயின்ரோட்ல விடச் சொல்லி "பைக்'ல வர்றவங்ககிட்ட லிப்ட் கேட்டுக்கிட்டு இருக்கிறான். என்கூட இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆப்போசிட்ல நின்னு "வாட்சிங்'ல இருக்காரு...'


"ஓ.கே. கேர்ஃபுல்லா ஃபாலோ பண்ணுங்க... நாங்க பார்த்துக்கறோம்... கான்டாக்ட்லியே இருங்க' சென்னையில் கடந்த 4-ந்தேதி தேடப்படும் குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் பிடிபடுவதற்கு 80 நிமிடங்களுக்கு முன் சிறப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணனும், தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி.யான கு.ராமானுஜமும் நடத்திய சிறு உரையாடல்தான் இது.

அப்போது நேரம் பகல் 2.10.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் திகில் ரகம்தான். போலீஸ் பக்ருதீனின் "லிப்ட்' கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஒருவர் அவனை அண்ணாசாலை சிக்னலில் விட, சென்ட்ரல் நோக்கிச் செல்லும் ஒரு பேருந்தில் முன்பக்கம் பக்ருதீன் ஏற... பின்பக்கம் ஏறுகிறார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன். சிக்னல் பாஸ் ஆனதும் பஸ்சை ஃபாலோ செய்தபடி மேலிடத்துக்கும் தகவல் கொடுத்தபடி பைக்கில் தொடர்கிறார் லட்சுமணன்.

சென்ட்ரலில் பக்ருதீன் இறங்கியதும் பின்னாலேயே வந்த சூளை நோக்கி செல்லும் பேருந்தில் பக்ருதீன் ஏற... அதேபோல் ரவீந்திரனும் ஏற... பைக்கில் மறுபடியும் பின் தொடர்கிறார் இன்ஸ்பெக்டர் லட்சுமணன். 

"...பெரியமேடு வழியாக சூளை செல்லும் பேருந்தை ஃபாலோ செய்யுங்கள். மஃப்டியில்இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அந்த பேருந்தை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். மிக முக்கியமான விஷயம். குயிக்...' இப்படி வந்த தகவலையடுத்து பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரக்குமார் ஆம்புலன்ஸ் போல ஸ்பாட்டை தேடிப் பறக்க... "சூளை போஸ்டாபீஸ் ஸ்டாப் இறங்குங்க' என்ற கண்டக்டர் குரல் "அந்த' பேருந்திலிருந்து வெளியே வர பக்ருதீனும், ரவீந்திரனும் இன்னும் சிலரும் இறங்குகின்றனர். 



பேருந்தை வலதுபக்கம் ஓவர்டேக் செய்து பயணிகள் இறங்கிய பாதையில் பைக்கை நிறுத்திய வேகத்தில் பக்ருதீன் மீது பாய்ந்து விழுந்து பிடிக்கிறார் லட்சுமணன். இதை சற்றும் எதிர்பாராத பக்ருதீன் இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் தொண்டையை கையால் இறுக்கி மல்லுக்கட்டியபடி மறுபுறம் பாய்ந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் ரவீந்திரனையும் பிடிக்க விடாமல் உடம்பை முறுக்கி, திமிறி உதைக்க... போலீஸ் பக்ருதீனுக்கு சமமான உடல்வாகோடு இருக்கும் வீரக்குமார் நடுவில் புகுந்து, விட்ட குத்துக்களை தாங்க முடியாமல் கீழே மடங்கி சாய்ந்தான் பக்ருதீன்.

""யாரோ சண்டை போட்டுக்கறாங்கன்னுதான் பார்த்தோம். அக்யூஸ்ட்டைதான் போலீஸ் பிடிக்கறாங்கன்னு தெரியாம போச்சே... சாரி ஸார்'' என்று அங்கிருந்த பொதுமக்களில் சிலர் விளக்கம் கொடுத்த வேளையில்தான் "நான்தான் போலீஸ் பக்ருதீன்... நான்தான் போலீஸ் பக்ருதீன் என்னை என்கவுன்ட்டர் பண்ணப் போறாங்க' என்று பக்ருதீன் பெருங்குரலில் கத்த வழக்க மாய் அந்த ஜங்ஷனில் பாதுகாப்புக்கு இருக்கும் சில போலீசாரும் பொதுமக்களும் ஒரே நொடியில் மாயமாகியிருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் வலது கை உடைந்து சிகிச்சை பெற்று ஒருவாரம் முன்புதான் டியூட்டிக்கு வந்திருக்கிறார். அதனால் இடது கையை மட்டுமே பயன்படுத்தி தீவிரவாதியுடன் மோதியிருக்கிறார். அவருடன் உதவிக்கு ஓடோடி வந்த ஒரு பெண் காவலர் மற்றும் வீரக்குமாரை சிட்டி கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

வாயையும், கையையும் இதன்பின் சேர்த்துக் கட்டி போலீஸ் டீம் பக்ருதீனை ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொள்ள... உடனடியாக தகவல் டி.ஜி.பி.க்கு தெரிவிக்கப்படுகிறது. "அவன்கிட்ட மொபைல் ஏதாவது இருக்கா?' "ஆமாங்கய்யா இருக்கு' -இது லட்சுமணன். "அதுல இன்னக்கி அவுட்-கோயிங், இன்கமிங் நம்பரை மட்டும் "டக்'குன்னு சொல்லுங்க' என்றதும் நம்பர்கள் வாசிக்கப்பட்டன. கூடவே "திருப்பூரில் மொட்டை... சென்னையில் ஜி' என்று 3-ந்தேதி இரவு வந்துள்ள ஒரு மெசேஜையும் லட்சு மணன் சொல்கிறார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன், வீரக்குமார் மற்றும் போலீஸ் பக்ருதீன் ஆகியோரைக் கொண்ட ஜீப் இந்த இடைவெளியில் டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் நுழைகிறது. அப்போது மாலை 4 மணி. இதற்குள் "திருப்பூரில் மொட்டை... சென்னையில் ஜி...' என்பது என்ன கோட்-வேர்ட் என்ற அலசலில் டி.ஜி.பி. ராமானுஜம், மத்திய உளவுத் துறை ஐ.ஜி.ரவி மற்றும் "இன்ட்'டின் முக்கியங்கள் ஈடு பட்டு ரிசல்ட்டையும் பார்த்து விட்டனர். திருப்பூரில் மொட்டை என்பது ராம.கோபாலனையும் சென்னையில் "ஜி' என்பது கோபால்ஜியை குறிப்பதும் என்பதை அறிந்து அதிர்ந்தனர்.


உடனே அதிரடியாக சென்னை யானைகவுனி பகுதியில் திருப்பதி குடை ஊர்வலத்துக்கு அவசர அவசரமாக 3 ஆயிரம் போலீசார் அனுப்பப்படுகின்றனர். ஊர்வலத்தில் இருக்கும் முகங்களை "வாட்ச்' பண்ண மதத் தொடர்பான ஸ்பெஷல் டீமின் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.கள், போலீசார் ஒருபக்கம் கூட்டத்தில் ஊடுருவி நின்றனர். ஊர்வலம் துவங்கிய யானைகவுனியிலிருந்து பாதுகாப்பு காரணமாக சூளை ஸ்டரஹான்ஸ் சாலை வரை நடந்தே உடன் சென்றார் கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன்.

மாலை 5.30-க்கு "திருப்பதி குடை'யை துவக்கி வைத்து ஊர்வலத்தில் நடந்து செல்வதாக பிளானில் இருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில பொதுச் செயலாளரும் வேலூர் தினமலர் அதிபருமான "கோபால்ஜி'யை அறிமுகமான போலீஸ் அதிகாரி ஒருவர் நெருங்கி, "ஜி' கொஞ்சம் இங்க வாங்களேன்' என்றழைத்து அவரே எதிர்பாராத நொடியில் பிரைவேட் காரில் அவரை ஏற்றிக் கொண்டு பறந்தனர். போகிற வழியிலேயே அவருக்கு "சென்னை யில் ஜி' பற்றிய குறிப்பை விளக்கியுள்ளனர்.

அதே சமயம் போலீஸ் பக்ருதீனின் செல்ஃபோனில் இருந்த தொடர்பு எண்கள் பெரும்பாலும் (சுமார் 50 எண்கள்) சென்னை டவரையே காட்ட 5 நம்பர்கள் மட்டும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், புத்தூரை காட்டியிருக்கிறது. "ஆந்திராவில் தெலுங்கானா விஷயம் பெரிய அளவில் இருப்பதால் புத்தூர் ஏரியா முழுவதையும் கண்காணிக்கும்படி ஆந்திரா போலீசை கேட்க முடியாது. சரியான லொகேஷன் வேண்டும்... அவன் (பக்ருதீன்) ஏதாவது சொன்னானா?' என்று உயரதிகாரிகளிடம், டி.ஜி.பி. கேட்க... "இதுவரை ஏதும் இல்லை' என்றே பதில் வந்திருக்கிறது. "சரி... கொக்கி ட்ரீட்மெண்ட் குடுங்க' என்ற உத்தரவு வர அது உடனே நிறைவேற்றப்பட்டி ருக்கிறது.

ட்ரீட்மெண்ட்டின் 3-வது நிமிடத்திலேயே மொத்தத்தையும் ஒன்று விடாமல் கக்கியிருக்கிறான் பக்ருதீன். அதில் முக்கியமானது, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் அங்கேதான் உள்ளனர். அவர்களிடம் சிறு கத்தி தவிர வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. வீட்டில் டி.வி. கூட கிடையாது. தான் பிடிபட்ட தகவல் இன்னும் 2 நாள் ஆனால் கூட அவர்களுக்கு தெரிய வராது. பெரும்பாலும்  ஏரியாவில் கரண்ட்டும் இல்லை என்பதுதான் அந்தத் தகவல்.

(எந்த கருவியோ, மனிதரோ, மயக்கம் தரும் பொருளோ இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டவரை தொடாமலே உண்மையை வரவழைக்கும் ட்ரீட்மெண்ட்தான் கொக்கி ட்ரீட்மெண்ட்). 

இதையடுத்து, "இவனை அந்த ஸ்பாட்டுக்குக் கூட கூட்டிக்கிட்டுப் போங்க... ஏதாவது "ட்ரை' பண்ணினா "முடிச்சிடுங்க', ஒத்துழைப்பு கொடுத்தா எதுவும் செய்ய வேண்டாம்' என்ற உத்தரவுடன் இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தவிர்த்து இன்ஸ் பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன் மற்றும் கமாண்டோஸ் 3 கார்களில் இடைவெளி விட்டு மாலை 5 மணியளவில் டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து சித்தூர் நோக்கி பறக்கின்றனர்.

 திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. ரூபேஷ்குமார் மீனா, சித்தூர் எஸ்.பி.கிரண்டி ராணா விடம் இந்த "கேப்'பில் விஷயத்தை சொல்ல, சைலண்ட்டாக அங்கே "அலெர்ட்' போடப்பட்டு குறிப்பிட்ட புத்தூர் ரெயில்வே கேட் ஏரியா போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடுகிறது. அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டு முடிக்கும்போது இரவு மணி 11.30. அடுத்தது ஆபரேஷன்தான்.

இரவு 12 மணி, 20 நிமிடங்கள். இருபதடி தூரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் வீட்டை போலீஸ் பக்ருதீன் காட்ட... வீட்டை நோக்கி லட்சுமணனும், ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்த திருவள்ளூர் ஏ.எஸ்.பி. செந்தில்குமாரும் ஒன்று போல் சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். வேகமான நடையில் இரண்டே நிமிடத்தில் அந்த வீட்டின் முன்பாக சென்று லட்சுமணன் நிற்க... தயார் நிலையில் ரிவால்வரை சரிசெய்தபடி பக்கவாட்டில் ஏ.எஸ்.பி. நின்று கொண்டார்.

"ஏங்க வீட்ல யாரு இருக்கீங்க... கொஞ்சம் வெளியே வாங்க' என்றபடி கதவைத் தட்டிக் கொண்டே லட்சுமணன் கொடுத்த குரலுக்கு எந்த பதிலும் உள்ளேயிருந்து வரவில்லை. இதை யடுத்து ஏ.எஸ்.பி.யுடன் டிஸ்கஸ் செய்த லட்சுமணன் பின் புலிபோல ஒரே பாய்ச்சலில் அந்த வீட்டின் மீதேறி ஓட்டின் மீது நின்று ஓட்டைப் பிரிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த ஏ.எஸ்.பி.யும் "ஏதும் விபரீதமாகி விடக்கூடாதே' என்று அவரும் தாவிக் குதித்து மேலேற அதற்குள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அந்த வீட்டிற்குள் குதித்துவிட்டார். உள்ளே பலத்த சத்தத்துடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது மேலே கேட்க, ஏ.எஸ்.பி.யும் உள்ளே குதித்தார். அவர் குதித்ததும் அமைதி நிலவியது.

அடுத்த சில நிமிடங்களில் படாரென அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக தள்ளியபடி ஏ.எஸ்.பி., லட்சுமணனை தாங்கிப் பிடித்தபடி வெளியே வர, உடலெல்லாம் வெட்டுக் காயங் களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந் தார் லட்சுமணன். உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருந்த ஏ.எஸ்.பி. செந்தில்குமார் போலீஸ் டீமை கூப்பிட அவர்கள் மொத்தமாக ஓடி வந்தனர். அவர்களில் 5 பேரை மட்டும் கூட்டிக் கொண்டு உள்ளே போனவர் பார்வையில் ரத்தம் வழிந்த ஒரு கத்தி... ரத்தக் கலரில் மாறிப் போயிருந்த ஒரு பால் குக்கரும் கிடைக்க அதை கைப் பற்றினர்.

வெட்டுக் காயங்களுடன் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆம்புலன்சில் கொண்டு போகப்பட்டிருப்பதையும், உள்ளே இருக்கும் மற்றொரு அறையில் தீவிரவாதிகள் பதுங்கிக் கொண்டிருப்பதையும் உயரதிகாரிகளுக்கு ஸ்பாட்டில் இருந்தவர் கள் "செல்' மூலம் சொல்ல... "ஆலோசனை நடத்திவிட்டு உள்ளே செல்வது' என்ற பதில் முடிவு வந்து சேர்ந்தது. இந்த ஆலோசனையே 2 மணிநேரம் வரை நீடித் தது.

அப்போது உள்ளிருந்தவர்கள், "வீட்டைச் சுற்றி 200 மீட்டருக்கு "பாம்'ஸ் வெச்சிருக்கோம். பிடிக்க ட்ரை பண்ணா வெடிக்க வெச்சுருவோம்' என்று சவுண்ட் வெளியே கேட்கும்படி கத்தினர். "இது உண்மையில்லை' என்பதை சில நிமிடங்களில் பாம்ஸ்குவாடும் டாக்ஸ் குவாடும் கண்டு பிடித்துச் சொல்ல, காரிலிருந்த போலீஸ் பக்ருதீன், "அங்க ஒண்ணுமே இல்லே, டெட்டனேட்டர் குச்சிங்க மட்டும் கொஞ் சம் இருக்குது. அதையும் மூட்டை கட்டி எங்கியோ தூக்கிப் போட்டுத்தான் வெச்சிருக்கோம். சொன்னா நம்புங்க  சார்னா நாயையெல்லாம் கூட்டிகிட்டு வந்து "செக்' பண்ணிக்கிட்டிருக்கீங்க' என்று சொல்ல, முழு தெம்புக்கு வந்தார்கள் போலீசார்.

ஐ.ஜி. இண்டலிஜென்ஸான கண்ணப் பன், சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.க்கள் அன்பு, விஜயகுமாரி, நாகஜோதி, சித்தூர் எஸ்.பி. ராணா, திருவள்ளூர் எஸ்.பி.ரூபேஷ்குமார் மீனா ஆகியோர் அருகிலிருந்த பள்ளிவாசலின் வாசலில் நின்றபடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். வீட்டிற்குள் உடைந்த ஓட்டின் வழியாக கண்ணீர் புகை செலுத்துவது என முடிவுக்கு வந்தனர். 

மறுநாள் பொழுது நன்றாய் விடிந்திருந்தாலும் காலை 8 மணிக்குப் பிறகுதான் வெளிச்சம் அந்த ஊருக்குள் ஊடுருவ ஆரம்பித்தது. குவியல் குவியலாய் போலீஸை அங்கே பார்த்தவர்கள் மிரள... அவர்களிடம் சென்ற ஐ.ஜி. கண்ணப்பன், "ஒண்ணுமில்ல... உங்களை பாதுகாப்பா வேற இடத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கேயே இருங்க. வேலை முடிஞ்சதும் நாங்களே வந்து சொல்றோம்' என்றபடி போலீஸாரை பார்க்க... அவர் கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த வீட்டை ஒட்டியிருந்த 16 வீட் டைச் சேர்ந்தவர்களையும் சுற்றுப்புறத்தில் இருந்தவர் களையும் 2 மணி நேரம் பேசியபின், அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர். அவர்கள் அகற்றப் பட்டபோது காலை மணி 10.30

11 மணி. கண்ணீர்ப்புகை உள்ளே சென்றது. 

11.45. "கண் எரிகிறது, எங்கள் பிள்ளைகளை ஒன்றும் செய்யாதீர்கள். அவர்களை வெளியே அனுப்புகிறோம்' என்று உள்ளே இருந்து குரல் வர... 


"முதலில் அனுப்பு' என்று பதில் கொடுத்தனர் போலீஸார்.

12 மணி. பிலால் மாலிக்கின் மனைவி அசீனாபானு, 3 குழந்தைகளுடன் வெளியே வந்தார்.  "உடனடியாக அவர்களை சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை கொடுங்கள்' என்று எஸ்.பி. அன்பு, போலீஸாரை கேட்டுக்கொள்ள... அதை வேண்டா மென்று மறுத்த அசீனாபானு, "மதுரையிலிருக்கும் உறவினர்களிடம் விட்டுவிடுங்கள் அது போதும்' என்று கெஞ்சினார். போலீஸார் கொடுத்த குடிநீர், பழம், பிஸ்கட் என்று எதையுமே வாங்க மறுத்து பிடிவாதம் காட்டியவர், கடைசியில் பகல் 2 மணி அளவில் குழந்தைகளுக்கு பிஸ்கட்டும், குடிநீரும் வாங்கிக் கொடுத்தார். பின்னர் அவரை போலீஸார் வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

இதற்கடுத்த சில நிமிடங்கள் சைலண்ட் மோடு லேயே இருக்க... மாலை 3.10-க்கு "சரண் அடைகிறோம்... எங்களை சுட்டுவிடாதீர்கள்' என்ற வேண்டுகோளுடன் வெளியே வந்தனர் பன்னா இஸ்மாயிலும், பிலால்   மாலிக்கும். போலீஸ்பக்ருதீன் முன்னரே "அபுபக்கர் சித்திக் எங்களுடன் இல்லை' என்று உறுதியாகச் சொல்லியிருந்ததால் அந்த விஷயத்தில் பெரிய அளவு தேடுதல் வேகம் காட்டவில்லை போலீசார். பிடிபட்ட வர்களை வேனில் ஏற்றியதும், மைக் மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை திரும்ப ஏரியாவுக்குள் வரும்படி அழைத்தனர் போலீஸார்.

திகிலடித்த முகங்களுடன் வீட்டுக்குத் திரும்பியவ ரில் பக்கத்து வீட்டுக்காரரான தமீம், ""இந்த ஊருல கரண்ட்டே ரொம்ப கம்மிங்க. அதுவும் சாயந்திரம் 5 மணி ஆகியிருச்சுன்னா ஊரே இருண்டுடும். ஊருல பேய் பயமும் ஜாஸ்தி. தூக்கம் வராம மொட்டை மாடியில போயி படுத்தப்பதான் நைட்டு பன்னெண்டு மணி இருக்கும்... அப்ப, யாரோ பக்கத்து வீட்டு ஓட்டு மேல நிக்கறா (இன்ஸ்பெக்டர் லட்சுமணன்) மாதிரி இருந்தது.  அடுத்து இன்னொரு உருவமும் தெரியுதுன்னு பக்கத்துல படுத்திருந்தவங்க சொல்லவே, பேய் பயத்துல வெலவெலத்துட்டோம். 

அவசரமா கீழே இறங்கி வந்து வீட்டுக்குள்ள போர்த்திக்கினு படுத்துக்கிட்டேன். விடிகாலம்பற வீட்டுக் கதவை போலீஸ் தட்டி "திருடங்க ஊருக்குள்ள நுழைஞ்சிருக்காங்க. நாங்க போலீஸ். அவங்களைப் பிடிக்க வந்திருக்கோம். நாங்க சொல்ற வரைக்கும் வெளியே வராதீங்க'ன்னு சொல்லிட்டுப் போனாங்க. கடைசியில என்ன டான்னா... இவ்வளவு பெரிய தீவிரவாதிங்க பக்கத்து வீட்டுலயே இருந்திருக்காங்களே'' என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

பக்கத்து தெருவில் வசிக்கும் ஒருவர் கூறும்போது, ""கதவைத் தட்டித் தட்டி எல்லா வீட்டுக்கும் போலீஸ் எச்சரிக்கை பண்ணிட்டுத்தான், அவங்களை புடிச்சாங்க. அவங்களுக்கு வீட்டை ஜமாத்ல பேசி வாடகைக்கு புடிச்சுக் கொடுத்த ஆளு ஓடிப்போயிட்டாரு. அவரையும் புடுச்சு உள்ள போடச்சொல்லுங்க சார்'' என்றார் கோபமாக. 

4-ந் தேதி மாலை தொடங்கி 5-ந் தேதி மாலை முடிவுக்கு வந்திருக்கும் இந்த சக்ஸஸ்ஃபுல் ஆபரேசன் பற்றி டீடெய்லாக விவரித்தார் ஒரு காவல் உயரதிகாரி. ""ரெண்டு மாசத்துக்கு முன்னால டி.ஜி.பி.யோட ஸ்பெஷல் ரூட்ல ஒரு நம்பர் கிடைச்சிருக்கு. அது மதுரையில இருக்கிற போலீஸ் பக்ருதீனோட மாமா நம்பர். அந்த நம்பரை வாட்ச்சிங்ல விடாம கவனிக்கச் சொல்லி உத்தரவு. திருவள்ளூர், திருப்பதி, சென் னைன்னு பல இடங்கள்ல இருந்து அந்த நம்பருக்கு பக்ருதீன் பேசுவான். 

பேசறது பக்ரூதீன்தான்கறதை கண்டுபிடிச்சிட்டு அதுக்கேத்த மாதிரி ஃபாலோ பண்ணினோம். எக்மோர்ல ஒரு மேரேஜ் ஃபங்ஷன்ல இரண்டு வாரத்துக்கு முன்னாடி பக்ருதீன் கலந்துக்கிட்டு ஒரு பிரமுகர்கிட்ட ஒரு பையில் பணம் வாங்கிட்டுப் போனான். அதிக கூட்டத்துல கூட்டத்தோடு கூட்டமா அங்கு மிஸ்ஸாயிட்டான். அடுத்து வெள்ளிக்கிழமைகள்ல திருவல்லிக் கேணி ஏரியாவுல குறிப்பிட்ட பாயின்ட்டுக்கு அவன் வர்ற தகவலைப் புடுச்சு அதையும் ட்ரை பண்ணினோம். அங் கேயும் அதிக கூட்டம் தான். அவன் தப்பிக்க காரணம், அவங்க பார்ட்டியில ஒரு லீடர்கிட்ட பேசி பணம் வாங்கிட்டுப் போன அன்னைக்கும் கையில சிக்காம தப்பிச்சிட்டான். 

டி.சி.யா இருந்த காலத்துல இருந்து இது தொடர்பா அப்டேட்ல இருக்கிற ஒரு டி.ஐ.ஜி. யோட ஒத்துழைப்பும் ரொம்ப உபயோகமா இருந்தது.  போலீஸ் பக்ருதீனின் அடிஷனல் செல்நம்பர் ஒன்றை ஐந்து நாளைக்கு முன்னால அவர் கொடுத்திருந்தது இந்த ஆபரேஷ னுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருந்தது.  பிடிபட்டிருக்கிற இவங்க மூணுபேரும் "டீம் பார்ம்' பண்ணி இந்துமத தலைவர்களை மட்டும் கொல்லச் சொல்லி அசைன்மென்ட்டை, ஆட் களுக்குத் தர்றவங்க. குண்டு சமாச்சாரம் ஒண்ணும் கிடையாது. பொதுமக்கள்கிட்ட பேரு ரிப்பேராக கூடாதுங்கிறதுல தெளிவா இருந் தவன்க. இன்ஸ்பெக்டர் லட்சுமணன், வீரக்குமார்கிட்ட மாட்டும்போது கூட "நாங்க போலீசுக்கும் பொதுமக்களுக்கும் எதிரி இல்ல. அவனுங்களுக்குத்தான் எதிரி'ன்னு  சொல்லி பக்ருதீன்  சத்தம் போட்டிருக்கான். விசாரணையில பல விஷயத்தை சொல்லியிருக்கான். வீட்ல கொஞ்சம் ஜெலட்டின் கிடைச்சிருக்கு. அதுக்குள்ள திருப்பதி சிதைப்பு, மோடிக்கு குறின்னு நியூஸுங்க போயிட்டிருக்கு. 

அபுபக்கர் சித்திக்தான் மெயின் பிரெய்ன். இந்த டீம்ல அவன் பிடிப்பட்டிருந்தா மொத்தத்தையும் ஃபினிஷ் பண்ணியிருக்க முடியும். என்ன கொஞ்சம் லேட்டாகும், ஆனா முடிச்சிடுவோம்'' என்று விளக்கினார் அந்த அதிகாரி.

இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த உளவுப்பிரிவு போலீ சார், தமிழ்நாடு காவல்துறை, சி.பி.சி.ஐ.டி. ஸ்பெஷல் பிராஞ்ச், க்யூ என்று எல்லோரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு தலைநகர் சென்னையில் போலீஸ்பக்ருதீனும், அதைத்தொடர்ந்து ஆந்திராவின் சித் தூர் மாவட்டம் புத்தூரில் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் பிடிபட்டிருப் பது போலீசாரையும், பொதுமக்களையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது. இவர்களின் செல் ஃபோன் தொடர்பில் இருந்துவரும் ஸ்லீப் பர் செல்கள் சென் னையில் மட்டுமே 60 பேர் உள்ளனர் என்ற தகவல் போலீசாரை புதிய டென்ஷனுக்கு கொண்டு சென்றி ருக்கிறது. மிகவும் டேஞ்சரஸ் நபர் களான நால்வரில் அபுபக்கர் சித்திக்கை பிடிக்காதவரை நிம்மதியாய் மூச்சுவிட முடியாது என்ற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறது தமிழக போலீஸ்.

பிடிபட்டுள்ள இவர்களின் செயல்பாட்டுக்கு பணம், ஆயுத உதவிகளை செய்து இந்தியாவில் தீவிரவாதத்தை வளர்த்தெடுக்கும் முனைப்பில் இறங்கியிருக்கும் கும்பலை ஆணிவேரோடு பிடுங்கி எறியும்வரை தமிழக போலீஸ் மட்டுமல்ல, இந்தியாவே தூக்கமின்றி தவிக்கிற நிலை தான் உருவாகும். அதேசமயம் நடந்து முடிந்திருக்கும் மயிர்க்கூச்செறியும் தியாகப் போராட்டத்தில் முதல் வெற்றியைத் தொட்டிருக்கும் தமிழக போலீசுக்கு தாராளமாக ஒரு சபாஷ் சொல்லலாம். 

ad

ad