சனி, அக்டோபர் 12, 2013

தமிழரசு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை பேணத் தவறியுள்ளது: நிகழ்வைப் புறக்கணித்தமைக்கான காரணம் கூறும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வினை புறக்கணித்தமைக்கு பதவி அங்கலாய்ப்பே காரணம் என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் மக்களுடைய உணர்வுகளை மதிக்கவும், உட்கட்சி ஜனநாயகத்தை பேணவும் தமிழரசு கட்சி தவறியுள்ளமையினாலேயே அதனைப் புறக்கணித்தோம் என கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் ரெலோ அமைப்பினர் இணைந்து யாழ்.நகரப் பகுதியிலுள்ள விடுதியொன்றில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை இன்று காலை நடத்தியிருக்கின்றனர்.
குறித்த சந்திப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இச்சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணசபை தேர்தலுக்கு முன்னதாகவும், தேர்தலின் பின்னரும் கூட்டமைப்பிற்குள் உள்ள சகல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாமல் தமிழரசு கட்சி தொடர்ந்தும் தான்தோன்றித்தனமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியே அமைச்சரவை தெரிவும்.
குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வவேஷ்வரனுக்கு அமைச்சுப் பதவி கேட்டதாக தமிழரசு கட்சி கூறுகின்றது. அதே தமிழரசு கட்சி தகுதி அடிப்படையில் அமைச்சுப் பதவிகளை வழங்கியதாகவும் கூறுகின்றது. எனவே சர்வேஷ்வரன் அரசியல் விஞ்ஞான பட்டதாரி அவர் எவ்வகையில் அமைச்சுப் பதவிக்கு தகுதி அற்றவர்?
அதனைவிட நாம் அதிகாரங்கள் உள்ள ஒரு அமைச்சுப் பதவியை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்றே கேட்டிருந்தோம். அதுவும் செய்யப்படவில்லை.
இந்நிலையில் எமது எதிர்ப்பிற்கு காரணம் எமக்கு அமைச்சுப் பதவிகள் தரப்படவில்லை என்பதற்கானது அல்ல. கூட்டமைப்பிற்குள் உள்ள அனைத்துக் கட்சிகளினதும் அங்கீகாரத்துடன் அமைச்சுக்கள் தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே.
குறிப்பாக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை தமிழரசு கட்சி தெரிவு செய்திருந்தது. அதே மாதிரியான உரிமை கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளுக்கும் உள்ளது. அதனையே நாங்கள் கேட்டோம். அதற்காக நாம் பதவிகள் மீது மோகம் கொண்டவர்கள் என்ற அர்த்தம் கிடையாது.
மேலும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்வதை மாவை சேனாதிராசா மற்றும் நாம் முற்றாக நிராகரித்தோம். ஏனென்றால் நாமே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவர் ஒரு போர்க்குற்றவாளி என குறிப்பிட்டிருக்கின்றோம்.
பிரபாகரன் மாவீரன் என பேசியிருக்கின்றோம் அவ்வாறு பேசியும், எழுதியும் மக்களிடம் வாக்கு பெற்றுவிட்டு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் ஏற்பது தவறு, எனவே நாங்கள் அதனை சுட்டிக்காட்டினோம்.
மேலும் ஆயுதப் போராட்டங்களில் இருந்து வந்தவர்கள் மீது தொடர்ந்தும் தமிழரசு கட்சி சேறுபூசும் நடவடிக்கையினை செய்கின்றது. சரி பிழைகளுக்கு அப்பால் நாம் இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர்கள். எங்கள் மக்களுடைய அபிலாஷைகளை அடைய முடிந்த வழியில் அடைவதற்காகவே நாங்கள் ஜனநாயக வழிக்கு திரும்பினோம்.
எம்மை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. எனவே நாம் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தின் பாதையில் பயணிப்போம். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த தொடர்ந்தும் பாடுபடுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.