புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 அக்., 2013

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு

தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

விஜயநகரத்தில் கலவரம் வெடித்தது
தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கடலோர ஆந்திரா ராயலசீமா பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான முடிவு மந்திரிசபை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்து உள்ளது.சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி தெலுங்கானாவுக்கு எதிராக தனது கட்சி சார்பில் 78 மணிநேர முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததோடு, அவரும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளார்.
இதன் காரணமாக ஆந்திராவில் தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. ஆந்திராவின் கடலோர நகரமான விஜயநகரத்தில் பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. ஆங்காங்கே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனியார் வாகனங்களை தீவைத்து எரித்தனர். தனியாரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பல இடங்களில் கூட்டத்தினரை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். முழு அடைப்பு போராட்டத்தினால் விஜயநகரம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நடைபெறாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
10 ஆயிரம் பேர் திரண்டு தாக்குதல்
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் மாநில போக்குவரத்து மந்திரி போத்சா சத்யநாராயணா, அவரது உறவினர் ஆகியோரின் வீடுகள் உள்ள கோரடவீதியில் நேற்று முன்தினம் இரவு 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு தாக்குதல் நடத்தினார்கள். சத்யநாராயணாவின் என்ஜீனியரிங் கல்லூரி மீதும் தாக்குதல் நடந்தது.கலவரக்காரர்களை விரட்ட முயன்ற போலீசார் மீது அவர்கள் கல்வீசி தாக்கினார்கள். கலவரக்காரர்கள் கோடவீதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தினார்கள். அந்த பகுதியில் 20 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.சி. கே.வீரபத்ரசாமி வீட்டையும் கலவரக்காரர்கள் தாக்கினார்கள்.கலவரக்காரர்கள் தாக்கியதில் பெண் துணை போலீஸ்சூப்பிரண்டு உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு
இதைத்தொடர்ந்து விஜயநகரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நேற்று முன்தினம் இரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு நேற்று 2–வது நாளாக நீடித்தது. இதுபற்றி போலீஸ் டி.ஐ.ஜி. துர்கா திருமலா ராவ் கூறுகையில், ‘‘விஜயநகரத்தில் கலவரம் வெடித்துள்ளதால் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும். நிலைமைக்கேற்ப பொது மக்கள் வசதிக்காக சிறிது நேரம் தளர்த்தப்படும். கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பிக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.
போலீஸ் துப்பாக்கி சூடு
 
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் விஜயநகரத்தின் புறநகரான கோதபெடா பல்லிவீதி பகுதியில் நேற்று திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் நிலைமையை கட்டுப்படுத்த ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதைத்தொடர்ந்து கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்’’ என்றார்.
மின்சார ஊழியர்கள் போராட்டம்
இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா மண்டலத்தில் உள்ள மின்சார ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். சீமாந்திரா பகுதியில் உள்ள கிருஷ்ணா, குண்டூர், ஒங்கோல், நெல்லூர், கர்னூல், கடப்பா, அனந்தப்பூர் மற்றும் சித்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மின்சார ஊழியர்கள் இந்த போராட்டத்தில் குதித்து உள்ளனர்.இதனால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின.
ரெயில் சேவை பாதிப்பு
மின்சார ஊழியர்களின் போராட்டத்தினால் ஆந்திராவில் மின்சாரம் மூலம் இயக்கப்படும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. மின் தடை ஏற்பட்டுள்ளதால் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.முக்கிய ரெயில்கள் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஐதராபாத்தில் இருந்து புறப்படும் சஸ்தவனா எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் மற்றும் விசாசகப்பட்டினத்தில் இருந்து புறப்படும் ரத்னாசால் எக்ஸ்பிரஸ் ஆகியவை டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டன. விஜயவாடா–குண்டூர் பகுதியில் இருந்து 7 பாசஞ்சர் ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.ரெயில்வே நிர்வாகம் 50 சதவீத மின்சாரத்தை வேறுவழிகளில் பெற்று ரெயில்களை இயக்கி வருகிறது. நிலைமையை ரெயில்வே அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். தேவைக்கேற்ப வெளியில் இருந்து மின்சாரம் பெறவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.ஆந்திராவில் கடந்த 2 மாதங்களாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தினால் அரசு பஸ் போக்குவரத்து முடங்கிய நிலையில், தற்போது மின்சார தடையினால் ரெயில் போக்குவரத்திலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆந்திராவில் மின் உற்பத்தி பாதிக்கப்படுமேயானால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மாநிலங்களிலும் மின் சப்ளை பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.
முதல்–மந்திரி வேண்டுகோள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்சார ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இந்த போராட்டத்தினால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாவர்கள். மேலும் திருமலையில் பிரம்மோற்சவ விழா தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த போராட்டத்தினால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கேட்டு கொள்வதாக கூறி உள்ளார்.

ad

ad