புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 நவ., 2013

அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் உள்நுழைந்த 79 இலங்கையர்கள் திரும்பவும் சிறிலங்காவிற்கு..

கடந்த மாதம் அவுஸ்திரேலியாவுக்குள் படகுகள் மூலம் சட்டவிரோதமாக உள்நுழைந்த 79 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக வெள்ளியன்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாரம் அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக நுழைந்த ஆறு இலங்கையர்கள் உட்பட புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 79 இலங்கையர்கள் மீண்டும் அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் குடியேற முற்பட்டால், நீங்கள் சிறிலங்காவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுவீர்கள் என்கின்ற மிகவும் முக்கிய செய்தியை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டமானது குறிப்பிடுகின்றது.

"இதற்கு முன்னைய காலங்களைவிட அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய கோட்பாடுகள் மிகவும் இறுக்கமாகக் காணப்படுகின்றன. எந்தவொரு நுழைவிசைவுகளுமின்றி புகலிடம் கோரி சட்டவிரோதமாகக் குடியேறும் எவரும் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்" என குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பிற்கான அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொற் மொறிசன் தெரிவித்துள்ளார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 1100 இற்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒக்ரோபர் 2012லிருந்து மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர் ஆணையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவும் சிறிலங்காவும் இணைந்து ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் எனவும் இவ்விரு நாடுகளின் ஒத்துழைப்பும் மிகவும் உறுதியாகக் காணப்படுவதாகவும் அவுஸ்திரேலியத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அவுஸ்திரேலிய அரசாங்கமானது ஆட்கடத்தல் தொடர்பில் அரைகுறையாகச் செயற்படவில்லை. ஆட்கடத்தல்காரர்களை எதிர்த்து சட்டவிரோதப் படகுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமானது முறையான முழுமையான கோட்பாடுகளைக் கொண்டுள்ளது" என அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்கொற் மொறிசன் குறிப்பிட்டுள்ளார்.

"படகுகள் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கமானது தொடர்ந்தும் அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காத் தீவில் முப்பதாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை தற்போது மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. படகுகள் மூலம் சிறிலங்காவிலிருந்து புறப்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட 1500 வரையானவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவிலிருந்து படகுகளில் பயணிக்கும் மக்களைக் கண்காணித்து அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கான பணியில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பணியாற்றுவதுடன், சிறிலங்கர்கள் தமது நாட்டை விட்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகவேண்டும் என்கின்ற மனநிலையை அதைரியப்படுத்துவதற்கான நடவடிக்கையிலும் சிறிலங்காவுடன் இணைந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பணியாற்றுகிறது. 

ad

ad