புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

90 ஆயிரம் விதவைத் தமிழச்சிகளின் நிலையை எண்ணியாவது காமன்வெல்த்தை புறக்கணிக்க வேண்டும்: கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் எல்லையற்றவை; சர்வதேசச் சட்டங்களாலும், மனிதநேய அடிப்படையிலும், இராஜபக்சே  தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளியாவார்.
ராஜபக்சேயின் தந்திரம்
இது போன்ற இரக்கமற்ற இனப்படுகொலை,
தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டதைப் போன்று, ஹிட்லரின் யூத ஒழிப்பு - இனப்படுகொலையில்கூட உவமை காண முடியாது.

இதை மறைக்க இலங்கை ஆடும் பல்வேறு, நாடகங்களில் ஒன்றுதான், காமன்வெல்த்  மாநாட்டை இலங்கையில் 2013 நவம்பர் 15,16,17 ஆகிய நாள்களில் நடத்த தந்திரமாக முயற்சித்து வெற்றி கண்ட நிலை; இரண்டாண்டுகளுக்கு இலங்கை, அதன் தலைவராக உள்ள நிலை தொடரும். அதன் மூலம் போர்க் குற்றங்களுக்காக, மனித உரிமை மீறல்களுக்காக அய்.நா.வோ, மனித உரிமை ஆணையமோ தீவிர நடவடிக்கை ஏதும் எடுக்க இயலாத இக்கட்டான நிலை உருவாகும்.
இப்படிப்பட்ட தந்திரரோபாயங்கள் இலங்கைக்குக், கை வந்த கலை என்பதை, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ‘கார்டன் வைஸ்’ என்ற அய்.நாவின் செய்தியாளராக இலங்கையில் பல காலம் பணியாற்றி, பிறகு ஆஸ்திரேலியா சென்று விட்டவர் எழுதிய ‘Cage’ (‘கூண்டு’) என்ற ஈழப் போர் அதன் பின் நிலவரங்கள்பற்றிய நூலில் கூறும் பல  அரிய தகவல்களில் சில இதோ:
“இலண்டனில் உள்ள தனியார் மக்கள் தொடர்பு  நிறுவனத்திற்குப் பெருந்தொகை ஒன்றைக் கொடுத்துத் தனக்கு ஆதரவாக, அரசுத் தரப்பு நியாயங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல இலங்கை பணித்தது. போர் என்பதே ஒரு மோசமான விஷயம்தானே. என்னென்னவோ நடக்கும், அதையெல்லாம் பெரிதுபடுத்துவார்களா என்று அது பிரச்சாரம் செய்தது.
சுற்றுலா செல்வதற்கு ஏற்புடைய நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பெறுவதாக நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்தது.
எங்களுடையதைப் போல் வேறு நாடில்லை என்று கூறிச் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துவந்த இலங்கைச் சுற்றுலா வாரியம், சிறிய அதிசயங்கள் பலவற்றைக் கண்டிருக்கும் தீவு என்று விளம்பரம் செய்தது. வெளிநாட்டினரும் பெருமளவில் வரத் தொடங்கியிருந்தனர். 3.30 லட்சம் சிங்களர்கள் முப்பதாண்டுகளில் முதல் முறையாக நாட்டின் வட பகுதிகளின் இயற்கையழகைக் கண்டு ரசித்தனர்.
அதே நேரம் லட்சக்கணக்கான தமிழர்களோ கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருந்தனர்.

எல்லாம் மாமூல் ஆகிவிட்டது என்று வலியுறுத்துவதைப் போல இந்தியாவின் பன்னாட்டுத் திரைப்பட அகாதெமி விருதுகள் வழங்கும் விழாவைக் கொழும்பில் நடத்தியது. (முக்கிய இந்தியக் கலைஞர்கள் பலர் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தனர் என்பது வேறு).
ஆனால் எல்லோருமே பிரச்சாரத்தில் மயங்கிவிடவில்லை என்பதை வலியுறுத்துவதைப் போல, ஐரோப்பிய யூனியன் மனித உரிமை நெறிகளை, இலங்கை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி அது ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அளித்து வந்த சலுகைகளை நிறுத்தி வைத்தது. தமிழர்கள் மட்டுமல்ல சிங்களரும் அச்சத்திலேயே காலத்தைக் கழிக்கின்றனர். கொலைப்படை எப்போதும் வலம் வந்த வண்ணமிருக்கிறது. எதிர்ப்போரைத் தாக்குகிறது. கேட்பாரில்லை. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் சிங்களத் தேசியவாத எக்காளம் விண்ணைப் பிளந்தது. அத்தேசியவாதத்தின் பெயரால் அரசை விமர்சிப்பவர்கள் தாக்கப்பட்டனர்.
ஆகஸ்ட் 2010இல் முன்னாள் அய்.நா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டூட்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஆகிய உலகத் தலைவர்கள், இலங்கையில் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தை எதிர்ப்போர் துன்புறுத்தப்படுவதையும் காணாமல் போவதையும் பற்றிக் குறிப்பிடும்போது இலங்கை நிலைமை ‘பயங்கரமாக இருக்கிறது’ என்றார்கள்.
ஆனால் பொதுவாக உலகம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக அக்கறை காண்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. ஜனநாயகத்தைப் போற்றும், சட்டத்தின் ஆட்சியை விரும்பும், தாராள மனதுடைய, நாட்டின் வளர்ச்சியால் சமூகத்தில் அனைவரும் பயன்பெற வேண்டும் என விரும்பும் இலங்கைக் குடிமக்களைத் தங்கள் அக்கறையின்மையால் உலக நாடுகள் கைவிட்டு விட்டன எனலாம்.” என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது. 
இப்போது காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவை வரவழைத்து, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள இந்தியாவே எங்களிடம் எவ்வளவு நேசத்துடன் வந்து கலந்து கொண்டது பார்த்தீர்களா?  இந்தியப் பிரதமரே பல இடங்களுக்குச் சென்று எங்களது நிவாரணப் பணிகளைப் பாராட்டினார் பார்த்தீர்களா? என்ற பிரச்சாரத்தினைத் தொங்க விட்டு, உலகத்தார் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டு, மனித உரிமைக் குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசும், பிரதமரும் பலியாகலாமா?
இதன் அரசியல் விளைவுகள் என்னவாகும்? கலைஞர் அவர்கள் மிக அழகாக குறிப்பிட்டதுபோல், வினை விதைத்தால் வினையை அறுவடைச் செய்ய வேண்டுமே! எண்ணிப் பார்க்கவேண்டாமா?
இசைப்பிரியா விவகாரம்
இதற்கிடையில் மற்றொரு சோகச் செய்தி: 
விடுதலைப்புலிகளின் ஊடகவியல் துறையாளர் இசைப்பிரியா என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணை, சிங்கள இராணுவம் கைது செய்து, நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொன்று, வீசிய காட்சியை சேனல்-4 ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி விட்டது. வழக்கம்போல இராஜபக்சேவின் இனப்படுகொலை அரசு, இது உண்மையல்ல என்று கூறி முழுப் பூசணியைச் சோற்றில் மறைத்துக் காட்ட முயன்றுள்ளது. இது உண்மைதான்; கற்பனை அல்ல; ‘கிராபிக்ஸ்’ அல்ல என்பதை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் போன்றவர்களே கூறியுள்ளனர். முழுக்க முழுக்க இலங்கை இராஜபக்சே அரசுடன் உள்ள டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களே அதற்கு நீதி விசாரணை தேவை என்று கோருகின்றனர்.  
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய இணை அமைச்சர்கள் நாராயணசாமி, ஜெயந்தி நடராசன் போன்றவர்கள் அழுத்தம் திருத்தமாக, மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளாமல்  புறக்கணிக்க வேண்டும் என்று கூறிடும் நிலையில், இசைப்பிரியாவின் இந்தக் கொடுமையை சர்வதேச சமூகம் பார்த்துக் கண்ணீர் விடும் நிலையில், நம் பிரதமர், கனடா நாட்டு பிரதமருக்கு உள்ள மனிதநேயம்கூட இல்லாதவர் என்றா உலகுக்குக் காட்டப் போகிறார்? அய்யகோ - யோசியுங்கள்!
சேனல் 4 - வெளியிட்டவருக்கு விசா மறுப்பா!
மற்றொரு புதுச்செய்தி, இந்த சேனல்-4 படத்தைக் காட்டியவர் இந்தியா வருவதற்கு விசா தர, நம் நாட்டு வெளி உறவுத்துறை தயக்கம் காட்டும் செய்தி, மிகவும் வேதனைக்குரிய கொடுமையான செய்தி!
இலங்கை அரசின் வெளியுறவுத் துறை போல, நம்முடைய வெளி உறவுத் துறை செயல்படுகிறதோ என்ற அச்சம்  தானே இதன் மூலம் வரும்? எனவே புதுடில்லி, இதில் இனியும் தாமதிக்காது. திரு. கேலம்மெக்ரி (4ஆவது சேனல் - உரிமையாளர்) இங்கு வர உடனே ‘விசா’ வழங்க வேண்டியது அவசர அவசியமாகும்!
புறக்கணிக்க வேண்டும்
90 ஆயிரம் ஈழத்து விதவைத் தமிழச்சிகளையும், எண்ணற்ற இசைப்பிரியாக்களையும் எண்ணியாவது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் - உலகத் தமிழர்கள் சார்பாக.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

ad

ad