புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2013

இலங்கையைப் புறக்கணித்தால் சீனாவும் பாகிஸ்தானும் அங்கு தளம் அமைத்துவிடும்!- பீட்டர் அல்போன்ஸ் ஆவேசம்-- விகடன்
இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொண்டார்.
அவரும் மாநாட்டை புறக்கணித்திருக்க வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி வருமாறு!
கொழும்பில் நடக்கும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று பரவலாகச் சொல்லப்பட்டதே?
நம்முடைய நாட்டின் நலன் கருதி இதில் மத்திய அரசு முடிவை எடுத்துள்ளது!
நமது நாட்டை சுற்றியுள்ள பல நாடுகள் நிலப்பரப்பால் மட்டுமல்ல... இனம், மொழி, கலாசாரம் உள்பட பல்வேறு கூறுகளாக அமைந்துள்ளன. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், தமிழகத்தின் மரபு வழி, இன வழி, மொழி வழி ஆகியவற்றில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில்தான், அந்த நாட்டு மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. பங்களாதேஷ் யுத்தத்தின்போது அந்த நாட்டுக்குள் ஏற்பட்ட விளைவுகளை இந்தியாவும் எதிர்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்களும் சீக்கிய மக்களும் தாக்குதலுக்கு உள்ளான போதெல்லாம் இந்தியாவில்தான் தஞ்சம் புகுந்தனர்.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் பெரும் விளைவுகளை பொருளாதார, அரசியல், சமூகரீதியாக சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதன் தொடர்பாகத்தான் இன்று பிரதமர் ஒரு கொமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்வது இவ்வளவு பெரிய விவாதத்தையும் உணர்ச்சி கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதையே இப்போது சிலர், பிரதமர் தேசிய நலனைப் பரிசீலிக்காமல் தமிழகத்தின் அரசியல் நிர்ப்பந்தத்துக்கும் தேர்தல் கட்டாயத்துக்காகவும் இலங்கைக்குச் செல்லவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி நடக்கும் இந்தியாவில் ஏழு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டசபையின் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் நிராகரித்துவிட்டு, தங்கள் காலுக்கு கீழே நடந்த மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றங்களையும் பொருட்படுத்தாமல் ஒரு பிரதமர், சம்பிரதாயமாக அந்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது
வெளியுறவுக் கொள்கை என்று காரணம் சொல்லப்படுகிறதே?
வெளியுறவுக் கொள்கை என்பது நம் தாய் நாட்டு மக்களின் உணர்வுகளை உள்ளடக்கியது. அதைப் புறந்தள்ளிவிட்டு, வெளியுறவுக் கொள்கை அல்லது ராஜதந்திரம் என்ற போர்வையில் முடிவெடுப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமருக்கு இயலாத காரியம்.
எனவேதான், இலங்கை மாநாட்டுக்கு, பிரதமர் செல்லவில்லை. அதே நேரத்தில் இலங்கையில் நடக்க இருப்பது இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அல்ல. அது காமன்வெல்த் அமைப்பின் பல நாடுகள் கலந்துகொள்ளக் கூடிய ஒரு பேரமைப்பின் கூட்டம்.
இந்த கொமன்வெல்த் நாடுகளின் வியாபார பரிமாற்றம் மட்டும் ஏழு டிரில்லியன் டாலர். அது உலக மொத்த உற்பத்தியில் ஏறக்குறைய 25 சதவிகிதம். கொமன்வெல்த் நாடுகளில் வசிக்கும் மக்கள்தொகை, உலக மக்கள்தொகையில் 30 சதவிகிதம். இந்த நாடுகளோடு இந்தியாவுக்கு இருக்கிற வியாபாரம், தொழில், கலாசாரரீதியான தொடர்புகளுக்கு இந்த நாட்டு தலைவர்களின் சந்திப்பு மிகவும் அவசியமானது.
இதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை வந்துவிடப் போகிறது என்று கேட்கிறார்களே?
சமீபகாலமாக, ஐக்கிய நாடுகள் சபையின் செக்யூரிட்டி கவுன்சிலில் தனக்கு நிரந்தர இடம் வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் ஆதரவுகளை இந்தியா தேடி வருகிறது. இந்த மாநாட்டில் அதற்காகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உலக நாட்டு தலைவர்கள், வெளிவிவகாரத் துறை அமைச்சர்களை ஒரே இடத்தில் சந்தித்துப் பேசுவது இந்தியாவுக்குக் கிடைக்கிற அரிய வாய்ப்பு. அதை இந்தியா தவறவிடக் கூடாது.
மேலும், சர்வதேச பயங்கரவாதம் குறித்து பல நாட்டு தலைவர்களோடு பேசவும் தடையில்லாத வியாபார தொடர்புகள் குறித்து விவாதிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கான விசா நடைமுறைகளை கொமன்வெல்த் நாடுகள் மத்தியில் எளிதாக்​கவும் இந்தக் கூட்டத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, உள்நாட்டு யுத்தம் முடிந்து போரில் எல்லாவற்றையும் இழந்து உயிர் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுடைய மறுவாழ்வுக்கு உதவவும் இந்திய அரசின் பெரும் அழுத்தத்தால் நடத்தப்பட்ட தேர்தல் மூலம் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண புதிய அரசை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நிலை நிறுத்தவும் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தப்படி 13-வது அரசியல் திருத்தம் உறுதிசெய்த அதிகாரங்களைத் தொடர்ந்து பெற்றுத்தரவும் இலங்கை அரசோடு தொடர்பில் இருப்பது அவசியமாய் இருக்கிறது. அந்தத் தொடர்புகளை முழுமையாகத் துண்டித்துக்கொள்வது புத்திசாலித்தனமற்றது மட்டுமல்ல; ஆபத்தானதும்கூட
இந்தியா ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தால் இராஜ்யரீதியாக இலங்கையுடன் தொடர்பே இல்லாமல் போய்விடும் அல்லவா? இந்தியா முழுமையாகத் தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக்கொண்டால் இராமேஸ்வரம் கடற்கரையில் இருந்து கூப்பிடு தூரத்தில் சீன போர்க் கப்பல்களும் பாகிஸ்தான் ராணுவ விமானங்களும்தான் தளம் அமைத்துவிடும். அந்த ஆபத்தை உணராமல் அரசியல் செய்யக் கூடாது.
போர் முடிந்துள்ள சூழ்நிலையில் அங்குள்ள தமிழர்க்கு அவசியமானது என்ன?
முதலில் அங்கு மறுவாழ்வு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டும். தமிழர்கள் மக்கள் தொகைக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத வகையில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரால் அந்த மக்கள் மத்தியில் நிலவும் பீதியை நீக்குவது; அடர்த்தியாக தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் சிங்களர்களைக் குடியமர்த்தச் செய்யும் இலங்கை அரசின் முயற்சிகளைத் தடுத்தல்; யுத்தத்தின்போது இடிக்கப்பட்ட கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், சாலை வசதிகள் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கட்டமைத்தல் போன்றவை மிக முக்கியமான உடனடிப் பணிகள். யுத்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவது என்பது ஒரு நீண்ட கால செயல்திட்டம்.
ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக ஆக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா?
1939-45 ஆண்டுகளில் இரண்டாவது உலக யுத்தத்தின்போது யூதர்களுக்கு இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களுக்கான போர் விசாரணையே இன்னும் முடியவில்லை. ஆப்கானிஸ்தானில் போர் முடிந்த பின்பும் அங்கு இருக்கின்ற அமெரிக்க ராணுவம் உடனடியாக வெளியேற முடியவில்லை. ஈராக்கில் சதாம் உசேனின் குற்றங்களுக்கான விசாரணை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, இதற்கான சாட்சியங்களைத் தயாரித்து பாரபட்சமற்ற விசாரணை அமைப்புகளை உருவாக்கி, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து, அதில் வெற்றி பெறுவது என்பது குறுகிய காலகட்டத்தில் செய்து முடிக்கும் பணியல்ல.
இப்போது இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வுக்கு இந்தியா பெருமளவில் உதவி செய்ய முடியும். நாம், இந்திய அரசை உதவிசெய்ய வைக்க வேண்டும். சமீபகாலமாக தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இருந்து கொடுத்த அழுத்தத்தால், இப்போது இலங்கையில் இந்தியா 4,500 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளது. வரக்கூடிய காலங்களில் இந்த முதலீட்டை மேலும் அதிகரிக்கவும் அங்கு இருக்கிற விதவைகள், உடல் ஊனமுற்றவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்பு அளிக்க நம்முடைய தொழில்நுட்பத்தையும் அனுபவத்தையும் அங்குள்ள மாநில அரசோடு இந்தியா பகிர்ந்துகொள்ள வேண்டும். 13-வது திருத்தம் உறுதிசெய்த அதிகார பங்கீட்டை தமிழீழ மக்களுக்குப் பெற்றுத்தர தொடர்ந்து இந்தியா ராஜதந்திர வாயில்கள் வழியே தன்னுடைய அழுத்தத்தைத் தர வேண்டும்.
ஈழப்பிரச்சினை தமிழகத்தில் முக்கியமான விவகாரமாக ஆகி இருப்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளதா?
இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைத் தவிர தமிழகத்தில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்பது போல சில தலைவர்கள் பேசுகிறார்கள். தமிழக இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி தமிழக அரசியலை வன்முறைக் களமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
தனி ஈழத்துக்கு ஆதரவு தேடுகிறோம் என்கிற போர்வையில் தனித் தமிழ்நாடு என்ற பிரிவினை நோக்கத்துக்கு இளைஞர்களைத் தயார் செய்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். இவர்கள் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையைப் பற்றி கவலைப்படுவதைவிட மத்திய அரசை தமிழ்நாட்டுக்கு எதிரான அரசாக சித்திரிப்பதிலும் இந்தியா வேறு; தமிழ்நாடு வேறு என்ற கருத்தியலுக்கு ஆதரவு தேடுவதிலும் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறார்களோ என்று அஞ்சுகிறேன்.
சிங்கள மக்களுக்கும் தமிழ் சிறுபான்மை மக்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும் ஒற்றுமையும் வளர்ந்தால் மட்டுமே ராஜபக்ச போன்ற சர்வாதிகாரியை அரசுக் கட்டிலில் இருந்து வீழ்த்த முடியும். சிங்களவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே இடைவெளி அதிமானால் அதன் முழு அரசியல் பலனும் ராஜபக்சவுக்கே கிடைக்கும்.

ad

ad