புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

ஒரே தேசம் ஒரே நாடு எனக்கூறுவோர் திட்டமிட்ட வகையில் எப்படி தமிழர்களின் நிலங்களை அபகரிக்க முடியும் - அரியநேந்திரன்

வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகளை அழித்தொழிக்கும் செயற்பாடுகளில் இலங்கை இராணுவம் மிகுந்த அக்கறை காட்டி வருவது இந்நாட்டில் எவ்வாறான ஆட்சி முறை நீடிக்கின்றது என்பதனை சர்வதேசத்திற்கு கோடிட்டுக்காட்டுகின்றது என தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
வலிகாமம் வடக்கு மக்களின் பூர்வீகமான நிலங்கள் நாளுக்கு நாள் இராணுவத்தினரால் திட்டமிட்டு அபகரிக்கப்படுவது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
எம்மவர்களின் அகிம்சைப் போராட்டம், ஆயுதபோராட்டம் என்பன ஓய்ந்ததன் பிற்பாடு எம்மினம் அனைத்தையும் இழந்த ஒரு இனமாகவும், இருக்கின்ற உடமைகளையும் இழந்து கொண்டிருக்கின்ற இனமாகவும் இன்று இந்நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வலிகாமம் வடக்கு மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் செய்திகளைக்கேட்டு எமது பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் அங்கு சென்று பார்த்துக் கொண்டிருக்கையிலே இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் அவர்களினது வீடுகளை இடித்தழித்தார்கள்.
ஏற்கனவே இது தொடர்பான பல வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. அதனையும் பொருட்படுத்தாமல் இந்த நாட்டில் உள்ள இராணுவத்தினர் ஆட்சி அதிகாரங்களை தங்களது கைகளில் வைத்துக்கொண்டு வடகிழக்கு மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதிலே குறியாக இருந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
ஒரே தேசம் ஒரே நாடு என்று கூறுபவர்கள் எப்படி திட்டமிட்ட வகையில் தமிழர்களின் நிலங்களை அபகரிக்க நினைக்கின்றார்கள், நீதிமன்றங்கள் சரியான தீர்ப்பை வழங்கினாலும் அதனையெல்லாம் முறியடித்து தீர்ப்பை வழங்கும் வல்லமையினை இந்நாட்டு இராணுவத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டு இருப்பதனை இவ்வாறான சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் மக்களின் சொந்த வீடுகளுக்குள் மக்கள் சென்று அமர்வதற்குக் கூட முடியாத நிலையிலேயே உள்ளனர். அப்படி அங்கு சென்ற போது உங்களுக்கு இந்த இடம்சொந்தமில்லை நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அதனை எடுக்கலாம் என்று பதில் கூறுகின்ற அளவிற்கு இந்த நாட்டிலே ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.
இன்று வடமாகாண முதலமைச்சராக இருக்கும் விக்னேஸ்வரனை தென்பகுதிக்கு வரக்கூடாது என விமல் வீரவன்ச போன்ற கடும் போக்கு அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். அவர்கள் அப்படி கூறுவார்களேயானால் இந்த நாட்டில் இரு பிரதேசங்கள் இருக்கின்றது என்பதனை ஒப்புக் கொள்கின்றார்களா? ஒரே நாடு ஒரே தேசம் என்று கூறுபவர்கள் எப்படி எமது முதலமைச்சரை தென்பகுதிக்கு வரக்கூடாது என்று கூற முடியும்.
அவர்கள் ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் கொழும்பிற்கு அத்து மீறிக் குடியேறவில்லை. ஆனால் நீங்களோ எங்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் அத்து மீறிய குடியேற்றத்தினையே மேற்கொள்கின்றீர்கள். அதனை செய்வதனை நிறுத்துங்கள். சிங்கள மக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் திட்டமிட்ட வகையில் பூர்வீகமாக வாழ்ந்த இன்னுமொரு இனத்தின் நிலத்தை ஆக்கிரமித்து வாழ நினைப்பது எந்த வகையில் பொருத்தமானதாகும். இன்று வலிகாமம் வடக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றம் நன்கு திட்டமிட்ட முறையில் இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

எமது மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் எம்மினம் பல தியாகங்களை செய்திருக்கின்றார்கள். அந்த தியாகங்களுக்கான பலனை அனுபவிக்கும் காலம் தொலைவில் இல்லை எனவும் கூறினார்.

ad

ad