புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது! 

மும்பை, வான்கடே மைதானத்தில் தனது 200-வது டெஸ்ட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு எடுக்கவிருக்கிறார் சச்சின்.
இனி இந்தியக் கிரிக்கெட்டை, சச்சினுக்கு முன் - சச்சினுக்குப் பின் என்றே குறிப்பிடலாம். ஒரு பேட்ஸ்மேனாகவும் சக மனிதனாகவும் சச்சின் எத்தனை தன்மையான மனிதர் என்பதைப் பகிர்ந்துகொள்கிறார்கள் அவருடன் பழகிய கிரிக்கெட் பிரபலங்கள்...
சடகோபன் ரமேஷ், முன்னாள் கிரிக்கெட் ப்ளேயர்:
''2002-ம் வருடம் சென்னையில் ரோட்டரி அமைப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு சச்சினை அழைத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கென ஐந்து நிமிடங்கள் நேரம் கொடுத்த சச்சின், குழந்தைகளைப் பார்த்ததும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுடன் பேசிச் சிரித்துக்கொண்டு இருந்தார். விடைபெறும் சமயம், 'எங்ககூட கிரிக்கெட் விளையாடுவீங்களா?’ என்று அந்தக் குழந்தைகள் கேட்க, 'அடுத்த சென்னை டிரிப்ல கண்டிப்பா உங்களோட விளையாடுவேன்’ என்று சொல்லிச் சென்றார் சச்சின்.
]
மூன்று மாதங்கள் கழித்து ரஞ்சி போட்டிக்காக சென்னை வந்தார் சச்சின். கடைசி நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின்போது என்னிடம், 'அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு இன்று மாலை கூட்டிப் போக முடியுமா? அந்தக் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமே!’ என்று கேட்டார். போட்டி முடிந்ததும்  போலீஸ் பாதுகாப்புடன் அடையாறுக்குச் சென்றோம். இருட்டும் வரை சுமார் இரண்டு மணி நேரம் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அந்தக் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ்வித்தார் சச்சின். அங்கு ஒரு பெண்ணுக்கு, மறுநாள் சிக்கலான ஒரு ஆபரேஷன் என்று தெரிந்ததும், அந்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கு ரொம்பவே ஜாலியாகப் பதில்சொல்லி அரட்டையடித்து அந்தப் பெண்ணை ரொம்ப உற்சாகப்படுத்தினார். சச்சின் போன்றவர்களால் ஒரு வாக்குறுதி கொடுப்பது சிரமம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, அதைவிட சிரமம். ஆனால், அத்தனை எளிமையாக, இனிமையாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சச்சினுக்கு நிகர் அவர்தான்!''
ராம்கி, இந்திய கிரிக்கெட் அணியின் பெர்ஃபார்மன்ஸ் அனலிஸ்ட்:
''2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றிருந்தபோது சச்சின் மோசமான ஃபார்மில் இருந்தார். முதல் டெஸ்ட்டில் டக் அவுட், இரண்டாவது டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ரன்கள், மூன்றாவது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் எனத் திணறல். நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பு, 'நான் எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் ஷாட் அடிக்கும்போதுதான் அவுட் ஆகிறேன். இந்த மேட்ச்சில் ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் ஆட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் களமிறங்கினார். அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் 241 ரன்கள் நாட் அவுட். இரண்டாவது இன்னிங்ஸில் 60 ரன்கள் நாட் அவுட். மொத்தம் 38 பவுண்டரிகளை விளாசினர். ஆனால், ஒரு ஷாட்கூட எக்ஸ்ட்ரா கவர் டிரைவ் பக்கம் செல்லவில்லை.
ஒரு பேட்ஸ்மேன் ஒரு ஸ்ட்ரோக்கைத் தேர்ந்தெடுப்பது, பந்து எப்படி வருகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால், எந்த வகையான பந்துகளை வீசினாலும் குறிப்பிட்ட ஷாட்டை மட்டும் ஆடாமல் ஒருவரால் கட்டுப்பாடாக இருக்க முடியும் என்பதை அன்றுதான் பார்த்தேன். அதனால்தான் சச்சின் ஜீனியஸ்!
யாரிடமும், 'எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும். நான் சொல்வதைக் கேள்’ என்ற மனப்பான்மையுடன் பழக மாட்டார் சச்சின். அதேபோல யார் மனதும் புண்படும்படி பேசிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.
ஒருசமயம் ஷேவாக் மிக மோசமான அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்தார். ஒரு போட்டியில்கூட சொல்லிக்கொள்ளும்படி ஸ்கோர் செய்யவில்லை. அந்த நேரம் அதுகுறித்து சச்சினும் ஷேவாக்கிடம் எதுவுமே பேசவில்லை. பயிற்சியின்போது ஆவேசமாக பந்தைத் தூக்கி அடித்தார் ஷேவாக். சச்சின் அவரிடம், 'ஏன் இப்படி ரஃப்பா விளையாடுற?’ என்று கேட்க, 'நான் அவுட் ஆஃப் ஃபார்ம். நீங்க அதுக்காக என்கிட்ட பேசக்கூட மாட்டேங்கிறீங்க’ என்று ஆதங்கத்தைச் சொல்ல, அன்று முழுக்கப் பயிற்சியின்போது ஷேவாக்குடனே இருந்தார் சச்சின்.
பயிற்சி முடிந்ததும் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் ஷேவாக் 309 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் சச்சின் 194 ரன்கள் நாட் அவுட். ஷேவாக் அந்தப் போட்டியில் மூன்று சதம் அடிக்க முழுக்கவே உதவியாக இருந்தவர் சச்சின்தான். நல்ல ரிதமில் விளையாடிக்கொண்டிருக்கும்போது சட்டென கவனம் சிதறி, மோசமான ஷாட் அடித்து அவுட் ஆவது ஷேவாக் பழக்கம். ஆனால், அவருடைய கவனம் சிதறிவிடாமல், தொடர்ந்து பேசியும் உற்சாகப்படுத்தியும் ஷேவாக்கை 300 ரன்கள் அடிக்கவைத்தார் சச்சின். தன் அறிவை, ஆற்றலை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குணம் சச்சினுக்கு உண்டு.
ச்சின் 25 வருடங்களாகத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், அவர் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்தான். போட்டிக்கு முந்தைய நாள் வெளியில் எங்கும் போக மாட்டார். பயிற்சிக்கு ஒருமுறைகூட நேரம் தவறியதே இல்லை. அவருக்காக யாரையும் காக்கவைக்க மாட்டார். பால்ய காலத்தைச் செலவழித்த மிடில் கிளாஸ் நபராக இன்றும் செயல்படுவார் சச்சின். இப்போதும் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் பலமுறை யோசித்து, இணையத்தில் அதன் விமர்சனங்களைப் படித்துவிட்டுத்தான் வாங்குவார். 'என் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக காசை மிச்சம் பிடித்து, பஸ் டிக்கெட் எடுத்து என்னைப் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்வார். அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்!’ என்பார் சச்சின்!''
'என் மனம் என்ன சொல்கிறதோ, அதைப் பொறுத்தே என் ஓய்வு அமையும். ஓய்வு பெறும் தருணத்தை வேறு எதனோடும் ஒப்பிட முடியாது. ஓய்வு முடிவு என்பது மிகவும் கடினமானது. கடந்த 30 வருடங்களாக கிரிக்கெட்டைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை!’ - ஓய்வுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் கூறிய வார்த்தைகள் இவை.
இந்தத் தருணம், சச்சினுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் மிகவும் கடினமான தருணம்!

சாதனை  நாயகன்!
மொத்தம் 463 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின், 18,426 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் அடங்கும். 199 டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள், 67 அரை சதங்கள் உள்பட 15,847 ரன்கள் குவித்திருக்கிறார்.
டெஸ்டிலும், ஒரு நாள் போட்டியிலுமாக சச்சின் விளாசிய 100 சதங்களும், 163 அரை சதங்களும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவரும் எட்டிப்பிடிக்க முடியாத உலக சாதனைகள்.
 20 வயதுக்குள் டெஸ்ட் போட்டிகளில் ஐந்து சதங்கள் குவித்தவர் என்ற சாதனை இப்போதும் சச்சினுக்கு மட்டுமே சொந்தம்!
 'ஒரே ஆண்டில் (2010) ஏழு சதங்கள் அடித்த இந்தியர்’ என்ற சாதனையை, தனது 36-வது வயதில் படைத்தார் சச்சின்.
 15 வருடங்களாக மும்பை கிரிக்கெட் சங்கத்துக்கு ஸ்பான்சர் பெற்றுத்தரும் பொறுப்பு சச்சின் வசம்தான். மது, சிகரெட் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, தனக்கு மட்டுமல்ல மும்பை கிரிக்கெட் அணிக்கும் ஸ்பான்சராக இதுவரை சச்சின் அனுமதித்தது இல்லை.
 விமானப் பயணத்தில் தூங்கிக்கொண்டு வரும்போதுகூட ஆர்வமிகுதியில் எழுப்பி ஆட்டோகிராஃப் கேட்கும் ரசிகர்களுக்கு, முகம் சுளிக்காமல் ஆட்டோகிராஃப் போடுவார் சச்சின். பல பிரபலங்களின் ஆட்டோகிராஃப் கிறுக்கலாக இருக்கும். ஆனால், சச்சினுடையதோ ஓர் ஓவியம் போல அழகாக இருக்கும்.

ad

ad