புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

paraniகடந்த நான்கு வருடங்களாக தமிழ் இன அழிப்பின முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டு பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்ற முயன்றும் வரும் ஒரு உளவியலாளர் குழுவின் சார்பாக பெண்ணிய உளவியலாளரும் அரசியற்செயற்பாட்டாளருமான பரணிகிருஸ்ணரஜனியுடன் நாம் நடத்திய பிரத்தியேக நேர்காணல் இது.


ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான – அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டும் இவர்கள் ஐநா மீது வழக்கு தொடர வேண்டும் என்பதுடன் ஐநாவிற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்துகிறார்கள்.

தமிழ் சமூகம் இந்த கருத்துக்களை செவிமடுக்க வேண்டியது காலத்தின் அதிதேவையாகிறது.

நன்றி

ஆசிரியர் குழு
ஈழம் ஈ நியூஸ்.

கேள்வி : நான்கு வருடங்களுக்கு முன்பே நீங்கள் எமக்கு தந்த நேர்காணலில் தமிழ் இன அழிப்பு தொடர்பாக “பான்கிமூன்தான் பிரதான குற்றவாளி” என்று குறிப்பிட்டிருந்தபோதும் ஏன் நீண்ட காலங்கள் கழித்து தற்போது அவர் மீது வழக்கு தொடர முடிவெடுத்துள்ளீர்கள்?

பதில் : நாம் வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர வேண்டும் என்று தமிழர் தரப்பை வலியுறுத்துகிறோம். அத்துடன் வழக்கு தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியிலும் வழக்கு தொடர்வதற்கான ஏது நிலைகள் குறித்தும் ஆராய்ந்து அதை தமிழர் தரப்பிடம் சமர்ப்பிக்கும் முயற்சியில் இருக்கிறோம். இதற்கான தொடர் பயணங்களில் நண்பர்கள் தற்போது இதற்காக நியூயோர்க்கில் முகாமிட்டுள்ளார்கள்.
ban-secretary-ki-moon_n

ஒரு தமிழனாக யாரென்றாலும் இந்த வழக்கை கொண்டு நடத்தலாம் என்ற போதும் இது பெரும் நிதிப் பலத்தோடு சம்பந்தப்பட்டது. எனவே அது அமைப்புக்களுக்குத்தான் சாத்தியம். அத்துடன் பல தொடர்புகளை ஏற்படுத்தவும் சட்டவாளர்களின் ஆலோசனைகளை பல மட்டங்களிலும் இணைக்க அமைப்புக்களாலேயே முடியும்.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல், கரன் பாக்கர், ரம்சிகிளார்க் என்று பல உலகறிந்த சட்ட அறிஞர்கள் தமிழ் அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர்பிலேயே இரு;க்கிறார்கள். எனவே அமைப்புக்களுக்கு இது பலம்.

கேள்வி: சரி நாம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கவில்லையே.. தற்போது ஏன் இந்த வழக்கை தொடர முடிவெடுத்தீர்கள்?

பதில்: நடந்த இன அழிப்பும் அதன் விளைவான குழப்பங்களும் எமது கருத்தை அப்போது யாரையும் செவிமடுக்க வைக்கவில்லை. அத்தோடு சில முக்கியமான தமிழ் தலைவர்கள் இது சாத்தியமில்லை என்றும் சட்டரீதியாக இதை நடத்த முடியாது என்றும் வாதிட்டார்கள். ஆனால் நாம் அதன் சாத்தியங்களை விளக்கினோம். அப்போது அதை ஏற்றுக்கொண்ட சிலர் ஐநா நிபுணர் குழு அறிக்கை மற்றும் ஐநாவின் செயற்பாடுகளை ஆராய அமைத்த உள்ளக விசாரணை இறுதி அறிக்கை என்பவை வெளிவராமல் வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார்கள். நாம் அதை ஏற்காவிட்டாலும் ஒரு தர்க்கத்தின் அடிப்படையில் அதற்கு உடன்பட்டு இதுவரை தாமதிக்க வேண்டியேற்பட்டது.

தற்போது கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகள் கட்டமைப்பு ரீதியாகத் தோல்வியுற்றன என்ற வெளிப்படையான அறிவிப்புடன் இறுதி அறிக்கையும் ஐநாவிற்கான பரிந்துரைகளும் வெளிவந்து விட்டன. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஐநா செயலர் பான்கிமூன் ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருந்தார்கள். எனவே இனி தாமதிக்க எந்த காரணங்களும் இல்லை.

ஆனால் நாம் ஐநா எமக்கு அநீதி இழைத்து விட்டது என்பதை கண்டடைந்த உடனேயே 2009 யூன் மாதமளவிலேயே ஐநா மீது – குறிப்பாக பான்கிமூன் மீது வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். குழு கும்பல் மோதல்களும், தோல்வி தந்த உளவியல் பாதிப்புக்களும், அரசியல் இராஜதந்திர விவேகமற்ற செயற்பாடுகளும் இதைத் தடுத்து மடைமாற்றி விட்டன.

அப்போதே ஒரு வழக்கை பதிவு செய்திருந்தால் எமது நீதிக்கான படிமுறைகள் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கும். இப்படி தேங்கிப்போயிருக்க மாட்டோம்.

கேள்வி : அது சரி ஐநா மீது வழக்கு தொடர்வது சாத்தியம்தானா?

பதில் : 4 வருடங்களுக்கு முன்பு எம்மை நோக்கி கேட்கப்பட்ட கேள்விதான் இது. அப்போது நாம் இதன் தர்க்கத்தையும் சாத்தியத்தையும் விளக்கினோம். ஆனால் தற்போது ஒரு முன்னுதாரணமே எங்கள் முன் இருக்கு.

வரலாற்றில் முதல் தடவையாக கெயிட்டி மக்கள் ஐநா மீது கடந்த மாதம் நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி அதாவது (legal terms Immunity) இருப்பதாக ஐநா கூறுகிறது.
ஆனால் ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக வழக்குத் தொடர்ந்துள்ள வழக்குரைஞர்கள் ஐநாவின் வாதத்தை முறியடிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகவே பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. உண்மையில் தமிழர்கள் செய்திருக்க வேண்டிய சாதனையை கெயிட்டி மக்கள் தட்டி சென்று விட்டார்கள்.

எமது வழக்கும் இத்தகையதுதான். வழக்கு முடிவு முக்கியமல்ல. எமது இன அழிப்பில் ஐநா உடந்தையாக இருந்தது என்ற அனைத்துலக மட்டத்திலான எமது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. வழக்கில் தோல்வியுற்றாலும் இந்த வரலாற்று குற்றச்சாட்டு ஐநாவையும் மேற்குலகையும் எமக்கான நீதியை வழங்க உந்தும். தொடர்ந்து எம்மை இம்சிக்கும் அல்லது நீதியை மடைமாற்றும் வேலைகளை நாம் தடுக்க உதவும்.

ஆனால் வழக்கில் நாம் தோல்வியுற வாய்ப்பில்லை. ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல ஐநாவிற்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எம்மிடையே குவிந்துள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இன அழிப்புக்கு உடந்தையாக ஐநா இருந்தது என்பதை நிறுவி ஐநா செயலாளர் நாயகத்தை பதவிநீக்கம் செய்து தமது நீதியை பெற்றார்கள் என்ற வரலாற்றை எம்மால் படைக்க முடியும்.

இது சட்டரீதியான போராட்டத்தால் மட்டும் முடியாது. சமாந்தரமாக ஐநாவிற்கு எதிராக மக்கள் போராட்டமும் விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டம்தான் சட்டரீதியான போராட்டத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தும்.

எமக்கு தாயகம் மட்டுமல்ல புலம் முழுக்க பரந்துள்ள தமிழர்களும் குறிப்பாக தமிழகமும் மிகப்பெரிய பலம். ஐநாவை குறிவைத்து இந்த 3 தளங்களிலும் போராட்டத்தை விரிவுபடுத்தினால் ஐநா மண்டியிட்டேயாக வேண்டும்.

கேள்வி : இன அழிப்பு விசாரணையை விடுவோம். ரோம் உடன்படிக்கையில் சிறீலங்கா கையொப்பம் இடாததால் போர்க்குற்ற விசாரணைகூட சாத்தியமில்லை என்று பலர் கூறி வரும் சூழலில் நீங்கள் நேரடியாக ஐநாவை குறிவைப்பது சாத்தியம்தானா?

பதில் : சட்டம் என்பது மனிதர்கள் உருவாக்கியதுதான். நாம் பிறக்கும்போதே இருக்கவில்லை. ஐநா என்பதே உலகப்போர்களின் விளைவாக தோன்றிய ஒரு அமைப்புத்தான். “நீதியும் சட்டமும் என்பது அரசின் வன்முறை,வன்முறையும் போராட்டமும் மக்களின் நீதி” என்ற தத்துவம் பொய்க்காது. எனவே போராட்டங்கள்தான் எதையும் மாற்றியமைக்கும். ஐநா சாசனங்களுக்கு எதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டதை நாம் தொடர்ந்து போராடுவதனூடாக உறுதிப்படுத்த வேண்டும். ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாட்டை எப்படி விசாரணைக்குள் கொண்டுவருவது என்பதை எமது போராட்டம் ஒரு புதிய சட்டமாக கொண்டுவருமளவிற்கு நாம் எமது போராட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.

ஐநாவை நாம் குற்றவாளியாக்கும் போது இயல்பாகவே ரோம் உடன்படிக்கையை தாண்டி சிறீலங்கா விசாரணை வளையத்திற்குள் வந்துவிடும்.

கேள்வி : சரி ஐநாவிற்கு எதிராக குறிப்பாக பான்கிமூனிற்கு எதிராக நீங்கள் வைக்கும் பிரதான குற்றச்சாட்டுத்தான் என்ன?

பதில் : உண்மையில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும். 2002இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக வேறுபட்ட காரணங்களுக்காகப் பேச்சுவார்த்தை அடிப் படையிலான தீர்வை அடைய முயன்றுகொண்டிருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது. இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றே பல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அனைத்து உள்ளக அமைப்புகளும் தோல்வி கண்டுள்ளதாக கூறியுள்ளர்.

எனவே இதுவே போதும் நாம் ஐநா மீது வழக்கு தொடுக்க.. ஆனால் இதையும் தாண்டி பான்கிமூன் சில உள்ளக சதிகளில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளன.

நம்பியார் தொடக்கம் சார்ள்ஸ் பெற்றி வரை பான்கிமூன் ஐநா விதிகளை மீறியிருக்கிறார். இதை நாம் சொல்லவில்லை இன்னர்சிற்றி பிரெஸ் விரிவாகவே பதிவு செய்திருக்கிறது.

முதலில் நம்பியார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடக்கம் பல சதிகள் செய்தவர் இவர்தான். ” ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு சந்தேகத்திற்கிடமானது.. அவரின் சகோதரர் சரிஷ் 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் தலைமைக் கட்டளை அதிகாரி சரத் பொன்சேகாவுக்கு ஒரு சிறந்த இராணுவத் தலைவனின் தன்மைகள் உள்ளன என்று சரிஷ் ஒரு தடவை பாராட்டியுமுள்ளார் என்று வெள்ளைக்கொடி விவகாரத்தில் பங்கெடுத்த ஊடகவியலாளர் மேரி கொல்வின் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்து தமிழின அழிப்பை நடத்தி முடிக்க ஏதுவாக பான்கிமூன் இந்திய கைக்கூலி நம்பியாரை களம் இறக்கியது போல் நடந்து முடிந்த இன அழிப்பை மறைக்க நோர்வே கைக்கூலி சார்ள்ஸ் பெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற அதிகாரி நியமனத்திற்கு பதிலாக நியமித்திருக்கிறார் பான்கிமூன்.
இவர் 4 மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை 9 மாதங்கள் கடந்தும் சமர்ப்பிக்காமல் மௌனம் சாதித்து வருவதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம் சுமத்தியது.

இந்த சார்ள்ஸ் பெற்றிதான் விதிகளுக்கு முரணாக ஐநா நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டவர்.

அடுத்து இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது 40ஆயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் ஒரு பக்கம் தெரிவித்த பின்பும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைக்கும் பான்கிமூன் உத்தரவிடவில்லை.

மாறாக இன அழிப்பு அரசின் இராணுவ அதிகாரிகள் ஐநா பதவிகளையும் தூதரக பதவிகளையும் அலங்கரித்தார்கள். வெள்ளைக்கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாலித கோகன்ன தொடக்கம் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவேந்திர சில்வா வரை இந்த பட்டியல் நீளமானது.

அடுத்து வன்னிப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஐநா நிபுணர் குழு அறிக்கையின்படி 40000.

அந்த அறிக்கையை தயார் செய்த மூவர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா அண்மையில் ஊடகவியலாளர் பிரான்சேஸ் கரிசனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய எண்ணிக்கை 75000.

ஆனால் அவர் ஏன் அதை நிபுணர் குழு அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்பதற்கு இன்று வரை பதிலில்லை. பாருங்கள் 35000 பேரை ஐநா தெரிந்தே விழுங்கிவிட்டது.
ஆனால் வண பிதா ராஜப்பு ஜேசப்பு அடிகளார் போன்றவர்கள் சொல்லும் உண்மையான எண்ணிக்கை 146679.

இப்படி எண்ணற்ற திருகுதாளங்கள் தமிழினத்திற்கு எதிராக ஐநாவிற்குள்ளேயே நடந்தது – இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி : நவநீதம் பிள்ளை ஓரளவிற்கு நியாயமாக செயற்படுகிறாரே? 

பதில் : அது ஒரு மாயத்தோற்றம். LLRC யும் 13 வது திருத்த சட்டத்தையும் இன அழிப்பிற்கு தீர்வாக திணிக்க முற்படும் ஐநாவின் கைப்பொம்மைதான் அவர். அவர் அண்மையில் இலங்கை வந்து புலிகள் மீதும் போராட்டத்தின் மீதும் காறி உமிழ்ந்ததைக் கூட கண்டிக்க முடியாத கையாலாகத்தனம் நிறைந்தவர்கள் நாம்.
UN-panel
வெளிப்பார்வைக்கு அவர் சிறீலங்கா அரசை விமாசித்தது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் அதை விட ஆபத்தானது அவர் எமது போராட்டம் குறித்து உதிர்த்த கருத்துக்கள்தான். அப்போதே நவிபி;ள்ளை அம்மையாரை கண்டிக்க சொல்லி நாம் பல தமிழ் அமைப்புக்களை கேட்டபோதும் யாரும் அதற்கு முன்வரவில்லை.

எமது தமிழ் அமைப்புக்களை நினைக்க பெரும் விசனமாகவும் அயர்ச்சியாகவும் இருக்கிறது. நீலன் திருச்செல்வத்தை புலிகள் கொலை செய்ததாக அடித்து கூறும் நவிபிள்ளை அம்மையார் அதற்கான தகவல்கனை எங்கிருந்து பெற்றார் என்று தெரியவில்லை. ஏனெ;றால் அந்த கொலையில் புலிகளின் பங்கு எந்த நீதிமன்றிலும் நிருபிக்கப்படவில்லை.

ஆனால் பொறுப்பு வாய்ந்த ஐநா உயர் பதவியில் உள்ள ஒருவர் வெறும் வாய்மொழி செய்திகளை வைத்து “தீர்ப்பு” வழங்கியிருக்கிறார். என்ன கொடுமை இது. தமிழின அழிப்பு தொடர்பாக ஐநா மட்டத்தில் எல்லோருமே இதைத்தான் செய்கிறார்கள். ஐநா வின் நீதி மீது முழுமையாக நாம் நம்பிக்கை இழந்த தருணம் அது.

காரணகாரியங்களையும் வெறும் வாய்மொழி வாக்குமூலங்களையும் வைத்து தீர்ப்பு எழுதுவதென்றால் வன்னியில் கொல்லப்பட்ட 146679 பேருக்குமான தீர்ப்பை சிறீலங்காவிற்கு எதிராக எழுதலாமே. அதை ஏன் நவிபிள்ளை செய்யவில்லை? மாறாக மயிலிறாகால் இன அழிப்பை வருடிவிட்டு போயிருக்கிறார். நாம் விழித்து கொள்ள வேண்டும். நாம் தோற்றாலும் பரவாயில்லை, அழிந்தாலும் பரவாயில்லை இந்த முட்டாள்தனங்களையும் அயோக்கியத்தனங்களையும் பார்த்து கொண்டு பேசாமல் இருந்தோம் என்ற இழி வரலாறு எமக்கு வேண்டாம். ஐநாவை மட்டுமல்ல எமது அழிப்பில் பங்கெடுத்த எல்லோரையும் கேள்வி கேட்போம். கூண்டில் ஏற்றுவோம்.

இதுவரை ஒரு தமிழ் அமைப்புகூட ஐநா விற்கு எதிராக சிறு துண்டறிக்கை கூட விடாதது கவலையளிக்கிறது. ஆயுதத்தை மவுனித்து விட்டு ஜனநாயக வழியில் போராட முடிவெடுத்த நாம் ஏன் இப்படி பயப்பட வேண்டும்? சிந்திப்பது மட்டுமல்ல செயற்படவேண்டிய தருணமும் இது.

இதே மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்தான் “போர்க்கால நெறி பிறழ்வுகள்” (wartime abuses) என்று இனப்படுகொலையை சுருக்கியிருந்தார்கள். ஆனால் நடந்தது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான – அமைதிக்கெதிரான குற்றம். இதன் விளைவாக நடந்தது இன அழிப்பு.
இங்கு எல்லோருமே குற்றவாளிகள்தான்.

கேள்வி : ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் வழக்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் பயனளிக்காவிட்டால் என்ன செய்வது?

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் நாம் போராடினால் நீதி நிச்சயம். நீதியை தாமதிக்கலாமேயொழிய முற்றாக தடுக்க முடியாது. அதையும் மீறி ஐநாவும் மேற்குலமும் மீண்டும் தகிடுதத்தங்கள் செய்தால் மக்கள் போராட்டம்தான் ஒரே தீர்வு.

எந்த உலகப்போர்களின் விளைவாக ஐநா தோற்றம் பெற்றதோ அதே ஐநாவின் நீதியில் நம்பிக்கையற்ற மக்களையும் நாடுகளையும் அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஐநாவிற்கு எதிராக போராடுவதுதான் ஒரே வழி.

இன்று ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா என்று ஐநாவின் மீது உலகளவில் பலர் நம்பிக்கையிழந்து வரும் சூழலில் ஐநாவிற்கு எதிராக அல்லது அதற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்ற கோசங்கள் வலுத்து வருகின்றன. நாம் அந்த போராட்டத்தின் முதல் அடியை எடுத்து வைப்போம்.

‘A fleeting moment in my country’ என்ற நூலில் பெண்ணிய செயற்பாட்டாளரும் மனித உரிமையாளருமான ந் மாலதி புலிகளை ஒட்டு மொத்த உலகமும் ஏன் சேர்ந்து அழித்தது என்பதை பின்வருமாறு மிகச் சிறப்பாக விள்ககியிருப்பார்.

புலிகள் சர்வதேச மட்டத்தில் தனிமைப்பட்டிருந்தாலும் தம் இலக்கை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். முழு உலகையும் எதிர்த்து அதிலும் வெற்றி கொள்வார்கள் போலத் தோன்றியது. விடுதலைப்புலிகள் பற்றிய இத் தகைமையே உலகில் இன்று நிலவும் ஒழுங்கைக் குலைப்பதாக இருந்தது.

அடைக்கப்பட்ட ஆட்டு மந்தைகளில் ஒன்று படலையைத் திறந்து வெளியேற அறிந்து கொண்டால் அதைச் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் ஆட்டு மந்தைகள் எல்லாம் தொடர்ந்து வெளியேற ஆரம்பித்து விடும். படலையைத் திறக்க தெரிந்த ஆடுகள்தான் விடுதலைப்புலிகள். உலகத்திற்கு அவர்களை அழிப்பதை தவிர வேறு வழியில்லை” என்று..

இது தமிழீழ விடுதலைப்போராட்டம் மட்டுமல்ல – ஒரு இனம் ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்கள் சார்ந்து உலகை ஒழுங்கையே மாற்ற முற்பட்ட வரலாறு இது. எனவே தற்போது ஐநாவிற்கு எதிரான எமது போராட்டமும் எமது விடுதலையை மட்டுமல்ல ஐநாவால் வஞ்சிக்கப்பட்ட பல இனக்குழுமங்களின் விடுதலையாக இருக்கும். அந்த பெருமிதத்தையும் கர்வத்தையும் எமதாக்குவோம்.

கேள்வி : இறுதியாக வேறு ஏதேனும் இது குறித்து சொல்ல விரும்புகிறீர்களா?

பதில் : நிச்சயமாக. முக்கியமான விடயம் ஒன்று. இந்த வழக்கை தமிழகத்திலிருந்தும் தனியாக ஒன்று பதிவு செய்ய வேண்டும். அந்த பேச்சுவார்த்தைகளிலும் இருக்கிறோம். ஏனென்றால் பிராந்திய பூகோள மாற்றங்களையும் புதிய உலக ஒழுங்கையும் கவனமாக உள்வாங்கிப் பார்க்கும் போது எமது விடுதலையில் தமிழகத்தின் இடம் தவிர்க்கமுடியாத ஒரு பாத்திரத்தை வகிக்கிறது.

அத்தோடு தமிழின அழிப்பின் தொடர்ச்சி தமிழகத்தில் நிலம், இனம், மொழி என்று பல்வேறு தளங்களில் கருத்தியல்ரீதியாகவும், பண்பாட்டு தளத்திலும் பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.

2009 இன அழிப்பு தமிழகத்திலும் அமைதிக்கு பங்கம் விளைவித்திருக்கிறது. பலர் தம்மை தாமே அழித்திருக்கிறார்கள். இன்று வரை தமிழின அழிப்பால் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டே உள்ளது. இது தமிழ் நிலத்தில் நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றத்தின் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும்.

மே 18 இற்கு பிறகு தமிழீழ விடுதலையில் தாயகத்தையும் புலத்தையும் ஒப்பிடும் பொழுது தமிழகம் சில குழப்பங்களை நீக்கிப் பார்த்தால் தன்பங்கை செவ்வனே செய்வதாகவே கருதலாம்.

தமிழக சட்டமன்றத்தில் இதன் விளைவாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்திய மத்திய அரசு இன அழிப்பிற்கு துணைநின்றதுடன் தமிழக மக்களினது உளவியல்போக்கு குறித்தோ சட்டமன்ற தீர்மானங்கள் குறித்தோ அக்கறையற்று இன அழிப்பு அரசை காப்பாற்றுவது குறித்தே அக்கறைப்படுகிறது. இது பல திருப்பங்களுக்கு வழிசமைத்திருக்கிறது.

தமிழக மக்கள் சார்பாக ஐநாவின் மீது ஏதேனும் அமைப்போ அரசியல் கட்சியோ வழக்கு தொடுக்கும் சமகாலத்தில் தமிழக தீர்மானங்களுக்கு மத்திய அரசு செவிசாய்;க்காததால் தமிழகத்தின் அமைதி கருதி தமிழக அரசு கூட நேரடியாக ஒரு வழக்கை ஐநா மீது தொடுக்க முடியும் என்று எமக்கு சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

இது ஒரு முக்கியமான செய்தி. இதன் வெற்றி தோல்விகள் சாதக பாதங்களுக்கு அப்பால் அப்படி ஒரு முயற்சி சாத்தியமானால் அது ஒரு பெரும் வரலாற்று புரட்சியாகவே இருக்கும். தமிழீழ பொது வாக்கெடுப்பு என்பதன் முதல் அடியாக இது இருக்கும்.

எனவே தமிழக அமைப்புக்கள், கட்சிகள் கருத்து வேறுபாடுகளை களைந்து இதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து தமிழக அரசுக்கு ஒரு உந்துதலை கொடுக்க வேண்டும்.

களம் புலம் தமிழகம் இணைந்ததுதான் தமிழீழ விடுதலை. எனவே இந்த 3 தளங்களிலும் ஒன்றிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களும் அனைத்துலக மட்டத்திலான இந்த 3 தளங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளுமே எமக்கு நீதியை பெற்று தரும்.

ஈழம் ஈ நியூஸ்

ad

ad