புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013




             ""ஹலோ தலைவரே... தீபாவளியை ஜெகஜோதியா கொண்டாடுறவர் ஜெயலலிதா. ஆனா, இந்த முறை சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமான டென்ஷன் அதிகமா இருந்ததாம்.''

""கோர்ட்டுக்கு வரமாட்டேன்னு ஜெ. பிடிவாதமா நின்றதையும், பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட் நீதிபதி முடிகவுடரோ விடமாட்டேன்னு உறுதியா இருக்காருன்னும் நம்ம நக்கீரனில்தான் விலாவாரியா எழுதியிருந்தாங்களே.''

…nakeeran

""நீதிபதி முடிகவுடர் இந்த வழக்கு விஷயத்தில் ரொம்ப உறுதியா இருக்காருன்னு சில மூவ்கள் மூலம் ஜெ.வுக்கு தெரிஞ்சிருக்குது. 29-ந் தேதி வரை நடக்கிறதா திட்டமிட்டிருந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரைக்கூட பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகவேண்டிய தேதியான 30 வரைக்கும் நீடிச்சிட்டாங்க. அதோடு, நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கணும்னும், நீதிபதியா முடிகவுடரை நியமனம் செய்ததில் கர்நாடக அரசும் அந்த மாநில உயர்நீதிமன்றமும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறிட்டாங்கன்னும் சுப்ரீம்கோர்ட்டி லேயே ஜெ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.''

""சட்டமன்றத்தைக் காரணம்காட்டி, நேரில் ஆஜராவதிலிருந்து ஜெ.வுக்கு விலக்களித்த சுப்ரீம்கோர்ட், நீதிபதி நியமனம் தொடர்பா எந்த அடிப்படையில் கேள்வி எழுப்புறீங்கன்னும் யூகமாக வெல்லாம் கோர்ட்டில் பேசக் கூடாதுன்னும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்டீங் களான்னும் சரமாரியா கேள்விகளைக் கேட்டிருக்குதே!''

""நீதிபதி விஷயத்தில் ஜெ. அரசியல் நோக்கம் கற்பிக்கிறதால கர்நாடக அரசும் கர்நாடக உயர்நீதிமன்றமும் புது நீதிபதியை நியமிக்க ரெடியாகியிருக்கு தாம். ஹைகோர்ட் ரெஜிஸ்ட்ரார் விஜிலன்ஸா இருக்கும் மைக்கேல் டீக்கோனேவை ஜெ.வின் ஊழலை விசாரிக்கும் ஸ்பெஷல் கோர்ட் நீதி பதியா நியமிப்பதற்கான மூவ்கள் நடந்துக்கிட்டிருப்பதா புதன்கிழமை யன்னைக்கு பெங்களூரிலிருந்து தகவல்கள் வந்ததுங்க தலைவரே.. சொத்துக் குவிப்பு வழக்கால படுடென்ஷனாகியிருக்கும் ஜெ., அதுபோல கலைஞர் குடும்பத்தினர் மேலே ஏதாவது பலமான கேஸைப் போட்டு அலைய விடணும்னு தீவிரமா இருக்காராம். அதிகாரிகளுக்கு இது சம்பந்தமான வாய்மொழி உத்தரவும் போயிருக்குதாம். இன்னும் எதுவும் கிடைக்கலையான்னு அடிக்கடி சரப்பட்டாசா வெடிக்கிறாராம் ஜெ.''

""நீதிமன்றத்தில் நடக்கும் சட்டரீதியான மோதல்கள் ஒருபக்கம்னாலும், மக்கள் மன்றத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்தானே அதிகமா கவனிக்கப்படும். ஏற்காடு இடைத்தேர்தல் நிலவரம் எப்படி?''

""இடைத்தேர்தல்னாலே அது யாருக்கு சாதகமா இருக்கும்ங்கிறது மக்களுக்கும் தெரியும். ஆனாலும் பிரச்சாரப் போட்டி பலமாகத்தான் இருக்குது. தி.மு.க தரப்பில் தேர்தல் பொறுப் பாளரா முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கத்தை நியமிச்சிருக்காங்க. கட்சி நிர்வாகிகள்கிட்டே அவர் தினமும் ரிப்போர்ட்ஸ் கேட்டு வாங்கி ஸ்டாலின் பார்வைக்கு அனுப்புறாராம். வைட்டமின் ப தேவைக்கும் கட்சி மேலிடத்திலிருந்து க்ரீன் சிக்னல் கிடைச்சிருக்குதாம்.''

""அந்த ப இல்லாமல் இடைத்தேர்தல் களை கட்டாதே?''

""பூத்துக்கு 3000 ரூபாய்னு 290 பூத் கழக நிர்வாகிகளுக்கும் பணம் சப்ளையாகியிருக்குது. இது கட்சிவேலைக்குத்தானாம். தீபாவளி கிஃப்ட்டா தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள்கிட்டே தனியா வாங்கிக்குங்கன்னு ஸ்டாலின் சொல்லி விட்டிருக்காராம். அதனால கட்சி நிர்வாகிகள் கனத்த இதயத்தோடு தங்கள் பாக்கெட்டிலிருந்து வைட்டமின் ப-வை எடுத்து ஆயிரம் ரொக்கமும் ஒரு ஸ்வீட் பாக்ஸுமாக தொண்டர்களுக்குக் கொடுத்துக்கிட்டிருக்காங்க.''

""இதெல்லாம் ஆளுங்கட்சிக்கு ஜுஜுபி யாச்சே.. அவங்க தரப்பில் 52 பேர் குழுவை நியமிச்சிருக்காரே ஜெ?''

""ஆமாங்க தலைவரே.. அந்தக் குழுவுக்கு ஓ.பி.எஸ், மதுசூதனன், நத்தம்  விஸ்வநாதன், கே.பி.முனுசாமின்னு நால்வர் அணி தலைமை வகிக்குது. தி.மு.கவுக்கு டெபாசிட் கிடைத்தால் தனக்கு பதவி போயிடும்ங்கிற பதட்டத்தில் இருக்கும் மாவட்ட மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, எல்லாரையும் அனுசரித்து வேலை வாங்கும் முயற்சியில் இருப்பதோடு, பணக் கட்டுகளையும் அவிழ்த்து விட்டிருக்காராம். தீபாவளி போனஸா 2000 ரூபாய் கிடைச்சதா ஏற்காடு ர.ர.க்கள் உற்சாகமா சொல்றாங்க. ஆனா, அ.தி.மு.க வேட்பாளர் சரோஜாதான் புதன் கிழமை வரைக்கும் பிரச்சாரத்தை ஆரம்பிக்கலை.''

""ஏன்?''

""இரண்டு முறை சென்னைக்குப் போய் கட்சித்தலைமையை சந்திச்சிட்டுத் திரும்பி யிருக்காரு இலை வேட்பாளர். நல்ல நாள் பார்த்து சொல்வதாகவும் அதன்பிறகு பிரச்சாரத்தைத் தொடங்கலாம்னும் இன்ஸ்ட்ரக்ஷனாம். தி.மு.க வேட்பாளர் மாறன் வீடுவீடாக நடந்துபோய் ஓட்டு கேட்கிறார். அவர் தரப்பு என்ன கேட்குதுன்னு ஒட்டு கேட்பதற்கு வருவாய்த் துறையினரை வேவு பார்க்க அனுப்புது ஆளுந்தரப்பு. பொன்முத்துராமலிங்கம் ஸ்பாட்டில் இருக்கும்போதே நிருபர்னு சொல்லிக்கிட்டு தி.மு.க பிரச்சாரத்தில் கூடவே வந்த காந்திங்கிற ஆர்.ஐ.யை உடன்பிறப்புகள் கையும் மெய்யுமா பிடிச்சிருக்காங்க.'' 

""தேர்தலுக்கு ஒரு மாசத்துக்கு மேலே இருக்குறப்பவே அனல் பறக்குதே!''

""பிரதமர் மன்மோகன்சிங்கும் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் குஜராத்தில் ஒரே மேடையில் ஒண்ணா கலந்துக்கிட்ட விழாவிலும் அனல் பறந்ததாமே?''

""சர்தார் வல்லபாய் பட்டேல் அறக்கட்டளை விழாவில்தான் இருவரும் கலந்துக்கிட்டாங்க. மோடி பேசுறப்ப, நேருவுக்கும் பட்டேலுக்கும் உரசல்கள் இருந்ததையும் பட்டேல் பிரதமராக வில்லையேங்கிற ஏக்கம் பலருக்கும் இருப்பதாகவும் சொல்லி காங்கிரஸை சீண்டினார். மன்மோகன் சிங் பேசுறப்ப, வல்லபாய் பட்டேல் மதசார் பற்றவர்னு சொல்லி மோடி தரப்பின் மதஉணர்வு அரசியலை குத்திக்காட்டினார். பேச்சில் வல்லவர் மோடி. பேசவே யோசிப்பவர் மன்மோகன். அப்படிப்பட்டவர், மோடியை அந்த மேடையில் சமாளித்ததை காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பலரும் பாராட்டினாங்களாம்.''

""மன்மோகனும் மோடியும் ஒரே மேடையில் பேசுறாங்க. அடிபட்ட கேரள முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந் தன் சந்திக்கிறார். இந்த மாதிரி காட்சிகளெல்லாம் தமிழ்நாட்டில் கனவில்கூட காண முடி யாதுப்பா!''

""இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக்கக்கூடாதுன்னு காங்கிரஸ் உள்பட எல்லாக் கட்சிகளும் வலியுறுத்துது. தமிழக சட்டமன்றத்தில்  ஜெ. கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேறியிருக்குது. ஆனா மத்திய அரசுகிட்டேயிருந்து உறுதியான பதில் எதுவும் வரலை. வெளியுறவு அமைச்சர் சல்மான்குர்ஷித் கலந்துக்கப்போறதா சொல்லிக்கிட்டிருக்கிறாரு. அதனால தமிழர்களின் மதிப்பு என்னன்னு டெல்லிக்குத் தெரியவைக்கணும்ங்கிற நோக்கத்தில் சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி போஸ்ட்ஆபீஸ்களிலும், சேலம் வருமானவரி அலுவலகத்திலும் பெட்ரோல் பாம் வீசப்பட்டிருக்குது. குண்டு வீசப்பட்ட இடங்களில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் துண்டு பிரசுரங்களும் இருந்ததால, கருஞ்சட்டையினரை போலீசார் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. மத்திய அரசை இந்த தாக்குதல் அதிர வைக்க, தமிழகம் முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது மாநில அரசு. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும் பட்சத்தில் மத்திய அரசுக்கு எதிரான தாக்குதல் மேலும் அதிகரிக்கும்னு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.'' 

""பீகார்தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துக்கிட்ட கூட்டத்திலும் அதைச் சுற்றிலும் தொடர்ச்சியா வெடித்த குண்டுகள் தொடர்பா இந்திய முஜாகி தீன் அமைப்பைச் சேர்ந்தவங்களை கைது செஞ்சி ருக்காங்களே?''

""அதைப் பற்றி நான் சொல் றேன்.. .. இந்திய முஜாகிதீன் அமைப்போட தமிழக பொறுப் பாளரா இருப் பவர்தான் அபு பக்கர் சித்திக். தமிழ்நாட்டில் இந்துமத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படுற ஆளு. எந்த இடத்தில் குண்டு வைக்கணும்ங்கிறதை வெளியிலிருந்தே ஆபரேட் பண்ணும் சித்திக், குண்டு வெடிக்கிற நேரத்தில் மட்டும் ஸ்பாட்டில் ஆஜராயிடுவாராம். அதனால பாட்னாவில் அபுபக்கர் சித்திக் இருந்திருக்கணும்ங்கிறது விசாரணை அதிகாரிகளோட யூகம். சித்திக் பற்றி தமிழக அதிகாரிகளிடம் கேட்கலாம்னு அவங்க முயற்சி பண்ணுறாங்க. ஆனா, போலீஸ்பக்ருதீன் உள்ளிட்டவங்களைப் பிடிக்கிறதுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவை 28-ந் தேதியன்னைக்கு கலைச்சிடிச்சாம் ஜெ. அரசு.''

 லாஸ்ட் புல்லட்!

சென்னையில் பட்டப்பகலில் டாக்டர் சுப்பையா வெட்டிக்கொல்லப்பட்ட வீடியோ காட்சிகளை நக்கீரன் வெளியிட்டது. இவ்வழக்கில் சுப்பையாவுடன் நிலத்தகராறில் ஈடுபட்ட குடும்பத்தினர் கைதாகி, கஸ்டடியில் விசாரிக்கப் பட்ட நிலையிலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து 80 பேரிடம் விசாரணை நடத்தியும் டாக்டரை வெட்டிக்கொன்றவர்களை அடையாளம் காணும் அளவில் போலீஸிடம் தொழில்நுட்பம் இல்லையாம். கொலையாளிகள் போலீசாரைவிட ஹை-டெக்காக இருக்கிறார்கள் போலும். 

மதுரை  ஆதீன  மடத்தில் நித்யானந்தா நுழைந்து அதிகாரம் செலுத்தியபோது அதை வெளிப்படையாக்கியவர் வைஷ்ணவி என்ற பெண். இவர்தான் ஆதீனத்திற்கு பணிவிடை செய்து வந்தார். ஒருவழியாக, நித்தியை அங்கிருந்து வெளியேற்றி நிம்மதியடைந்த ஆதீனம் அதன்பின் வைஷ்ணவிக்கு திருமணமும் செய்துவைத்தார். தற்பொழுது 7மாத கர்ப்பிணியாக இருக்கும் வைஷ்ணவிக்கு ஆதீனம் முன்னிலையில் சீமந்தமும் சிறப்பாக நடந்துள்ளது. வைஷ்ணவியின் சகோதரி கஸ்தூரி இப்போது ஆதீனத்திற்கு பணிவிடைகள் செய்து வருகிறார். 

ad

ad