புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

பேயின் தகவலால் நாயுடன் வந்து கஞ்சா பிடித்த காதை

அன்பார்ந்த எனது வாசகப் பெருமக்களே..!
அஸ்ஸலாமு அலைக்கும் (வறஹ்..)
PoothamPolice Dogநேற்று (31.10.2013) வியாழக்கிழமை காலை 07:45 மணியளவில் எனது வீட்டுக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தபோது, ஐந்து பேர் ட்ரவுஸர், டீ சேர்ட் அணிந்தவர்களாக நின்றனர். ஒரு பொலீஸ் ஜீப்பும் வீட்டு வாசல் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது. அதிலும் ஒருவர் காணப்பட்டார்.
police‘இது புவியின் வீடா?’ என்று அவர்களில் ஒருவர் கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘புவி எங்கே?’ என்று மீண்டும் அவர் கேட்டார்;. ‘நான் தான் புவி’ என்றேன்.
‘உங்களின் வீட்டில் கஞ்சா இருப்பதாக 119 பொலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் வீட்டைச் சோதனை இட வேண்டும்’ என்றார்கள்.
‘நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். கஞ்சா எதுவும் எனது வீட்டில் இல்லை. என்றாலும் உங்களின் கடமைக்கு நான் இடையூறு ஏற்படுத்தவில்லை. நீங்கள் விரும்பினால் தாராளமாகச் சோதனை இடலாம்’ என்று கூறி அரைகுறையாக விரித்திருந்த வாயிற்கதவை முழுமையாகத் திறந்து விட்டேன்.

அவர்களில் ஒருவரிடம் நாய் ஒன்றும் காணப்பட்டது. அதை அவர் பிடித்துக் கொண்டு செல்ல இன்னொருவரும் அவருடன் சென்றார்.
மேலுமிருவர் வீட்டின் கிணற்றடிப் பக்கமாகச் சென்று அங்கிருந்த சட்டி, பானை, குப்பை போடும் உரப்பை போன்றவற்றிலெல்லாம் தேடுதல் நடத்தினார்கள்.
மற்றும் இருவர் வீட்டின் முன்பக்கத்தில் கிடந்த செருப்பு, மேசையில் இருந்த பிள்ளைகளின் புத்தகப் பைகள் போன்றவற்றைச் சோதித்தார்கள்.
இதனிடையே மோப்ப நாய் அவர்களில் ஒருவரிடம் அடிக்கடி உறுமிக் கொண்டு சென்றதையும் நான் அவதானித்தேன்.
நான், நாயுடன் சென்றவர்களின் பின்னால் சென்றேன். கிணற்றடிப் பக்கமும் எனது மனைவியும் பிள்ளைகளும் நின்று அவர்களின் தேடுதலைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அயலவர்களும், உறவினர்கள் சிலரும் உள்ளே வந்தனர். அவர்களை வெளியில் செல்லுமாறு கூறினர்.
இவ்வாறு சுமார் 10 நிமிடங்களாகச் இச்சோதனைகள் எனது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இச்சமயத்தில் வீட்டின் முன்பக்கத்திலிருந்து, ‘ஆ.. சார்ஜன் மாத்தயா.. மெஹே தீனவா படு.. மெஹே என்டகோ..’ என்று ஒருவரின் சத்தம் வந்தது.
நாயுடன் நின்றவர்களும், கிணற்றடியில் நின்றவர்களும், நானும், மனைவி மற்றும் பிள்ளைகளும் சத்தம் வந்த முன் வராந்தாவுக்குச் சென்றோம்.
அங்கேயுள்ள இரண்டடி உயரமான கட்டொன்றின் மீது ஏறி நின்ற ஒருவர் அவரது கையில் ஒரு பேப்பர் சுருளைக் காட்டியவாறு ‘இதோ சாமான் அகப்பட்டிருக்கிறது. இந்தப் பிடவைக்குள் இருந்தது’ என்று சிங்களத்தில் சொன்னார்.
உடனே நாயுடன் நின்றவர் அந்தச் சுருளைக் கையில் வாங்கிக் கொண்டு,‘அங்கள்.. ஒயா பொறு நே கிவ்வே.. மே.. கிலோ எக்கஹமாரக் வித்ர படு தீனவா நே..’ என்றார்.
அவரது கையிலிருந்த அந்தச் சுருள் சுமார் ஒரு அடி நீளமும், ஒரு பெரிய மீன்டின் அளவு பருமனும் உடையதாக இருந்தது. எனினும் அவ்விடத்தில் யாரும் அதனைப் பிரித்துக் காட்டவில்லை.
நான் ‘இது எப்படி இங்கு வந்தது என்று எனக்குத் தெரியாது. இதனை நான் பொறுப்பேற்க முடியாது. என்னை பொலிசில் மாட்டுவதற்காக யாரோ அல்லது நீங்களோ இதைக் கொண்டு வந்து வைத்திருக்கலாம்’ என்றேன்.
‘சரி.. சரி.. அதையெல்லாம் நீங்கள் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்கள். இப்ப சேர்ட்டைப் பொட்டுக் கொண்டு ஜீப்பில் ஏறுங்கள்..’ என்று அவசரப்படுத்தி என்னை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.
பிரதான வீதியால் வந்த ஜீப், ரெலிகொம் சந்தியில் திரும்பி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டது.
முன் ஆசனத்தில் இருந்த ஒருவர் தொலைபேசியில் யாருடனோ கதைத்தார்.
ரெலிகொம் சந்தியில் ஜீப் நிற்பதாகச் சொன்னார். ஆளையும், சாமானையும் கொண்டு வந்துள்ளதாகச் சொன்னார்.
இந்த உரையாடலின்போது ‘சேர்.. சேர்..’ என்றே அவர் கதைத்தார்.
சிறிது நேரத்தின் பின் ஜீப் மீண்டும் பிரதான வீதிக்குத் திருப்பப்பட்டது.
பிரதான வீதியால் வந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம். பாக்கீர் மாஸ்டர் பொலிஸ் ஜீப்பையும், என்னையும் உற்றுப் பார்த்தவாறு சற்றே சிற்றின்பத்துடன் சென்றார்.
பொலிஸ் ஜீப் சாவியா வீதியால் ஊர் வீதியை நோக்கிச் சென்றது.
மீரா பள்ளிவாசலுக்கு சற்று அப்பால் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. வீதியில் நின்ற சில பொதுமக்கள் ஜீப்பில் இருந்த என்னைப் பார்த்தனர்.
பின்னர் ஊர் வீதிக்குச் சென்ற ஜீப் சந்தியில் திருப்பப்பட்டு மீண்டும் சாவியா வீதி வழியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்குச் சென்றது.
ஜீப்பில் இருந்து இறங்கிய என்னை தடுப்புக்காவல் அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த கதிரையொன்றில் அமருமாறு பணித்து விட்டு ‘ரீ ஷேர்ட்காரர்கள் சென்றனர். நான் எனது பாட்டில் அங்கு இருந்தேன்.
எனக்குத் தெரிந்த பொலிசார் பலரும் அங்கு வந்து ‘என்ன அங்கிள்..? என்ன நடந்தது..?’ என்று அனுதாபத்துடன் கேட்டனர். நான், ‘பொலிசார் வீட்டுக்கு வந்து கஞ்சா இருந்ததாக என்னை அழைத்துக் கொண்டு வந்துள்ளனர்’ என்றேன்.
பின்னர் எனது வீட்டுக்கு வந்த ஒருவர் என்னை கூட்டிக்கொண்டு சிறு குற்றப் பிரிவுக்குப் பின்னாலுள்ள மண்டபத்திற்குச் சென்றார்.
அங்கு எனது வீட்டுக்கு வந்த ஏனைய ‘ரீ சேட்’காரர்கள் அவர்களின் ‘கோறா’ என்ற நாயுடன் இருந்தனர். என்னை ஒரு கதிரையில் இருக்குமாறு கூறினர்.
எனது தொழில், குடும்ப விபரங்களைப் பற்றிக் கேட்டனர்.
ஒருவர் சீமெந்துத் தாளில் சுற்றி நூலால் கட்டப்பட்ட கஞ்சாப் பொதி ஒன்றுக்கு அரக்கு மெழுகினால் சீல் வைத்துக் கொண்டிருந்தார்.
அதில் எனது பெருவிரலைப் பதிக்கும்படியும் சொன்னார்.
நான், எனது கைவிரல் அடையாளத்தைப் பதிக்க முடியாது என மறுத்தேன்.
‘ஏன் முடியாது என்று கேட்டார் நாயுடன் வந்த ‘ரீ சேட்’ காரர்.
‘இந்த கஞ்சாப் பார்சல் என்னுடையதல்ல. நீங்கள்தான் இவ்விடத்தில் இதைச் சுற்றினீர்கள். கட்டினீர்கள். நீங்கள்தான் அதில் கைவிரல் அடையாளத்தைப் பதிக்க வேண்டும். எனது பத்து விரலையும் வெட்டி எடுத்தென்றாலும் நீங்கள் தான் வைக்க வேண்டும். நான் நீதவானிடம் விரலில்லாத கையைக் காட்டி விளக்கத்தைச் சொல்லிக் கொள்வேன்’ என்று கூறினேன்.
பின்னர் அவர்கள் எழுதிய எனது வாக்கு மூலத்தில் கையெழுத்திடும்படி கூறினார்கள்.
அதனை வாசித்துக் காட்டும்படி நான் கேட்டதும் ஒருவர் வாசித்தார்.
அதில் ஒரு இடத்தில், ‘வீட்டில் சோதனை நடாத்தியபோது ஒரு பார்சல் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது’ என ஒரு வாசகம் காணப்பட்டது.
உடனே மேற்கொண்டு வாசிப்பதை நிறுத்துமாறு கூறிய நான், அந்த வாசகத்துடன் சேர்த்து? ‘என்று பொலீசார் கூறினார்கள்’ என  எழுதும்படி கோரினேன்.
அதன் காரணமாக எனக்கும், எனது வாக்கு மூலத்தை எழுதிய ‘ரீ சேட்’ நபர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
இறுதியில் ‘எனது வாக்குமூலத்தை நீங்களே யோசித்து கதை எழுதுவது போல் எழுதுவதானால் நீங்களே அதில் கையொப்பமும் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை. அப்படி இல்லாமல் நான் வாக்குமூலம் அளித்ததாக நீங்கள் எழுத வேண்டுமானால் நான் சொல்லச் சொல்ல நீங்கள் எழுத வேண்டும். அப்படி எழுதினால்தான் அதில் நான் கையொப்பம் இடுவேன்’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டேன்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த சீருடை அணிந்த பொலிஸ்காரர் ஒருவர், சரி ஏற்கனவே நீங்கள் எழுதியதை அப்படியே வைத்து விட்டு, ‘மீண்டும் சந்தேக நபரான எனது வாக்கு மூலம் நான் கூறுவதன் பிரகாரம் கீழே பதியப்படுவதாக’ சிவப்புப் பேனையால் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டு நான் சொல்வதைப்போல் அப்படியே ஒவ்வொரு சொல்லாக எழுதுமாறு ஆலோசனை கூறினார்.
அதன்படி மீண்டும் நான் சொல்லச் சொல்ல அந்தச் ‘சீருடை’ நபர் எழுதி முடித்தார். அதனடியில் நான் கையொப்பம் வைத்தேன்.
பின்னர் என்னை மீண்டும் தடுத்து வைக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்று கதிரையில் அமர்ந்திருக்கும்படி கூறினார்கள்.
ஏற்கனவே என்னிடம் வாக்கு மூலம் பெற்ற ‘சீருடை’ நபர்களும், தடுத்து வைப்பு பிரிவிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் இப்போது மிக மரியாதையுடன் என்னுடன் நடந்து கொண்டனர்.
பின்னர் பொலிஸ் ஜீப் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்திற்கு சாரதி உள்ளிட்ட ஆறு பொலீசார் அழைத்துச் சென்றனர்.
அதில் எனது வீட்டுக்கு அன்று காலையில் சோதனையிடுவதற்காக வந்த ‘சீருடை’ நபர்கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
நீதிமன்றத்தில் எனது பெயர் கூப்பிடப்பட்டது. பதில் நீதிபதி பிரேம்நாத் அவர்கள், பொலீசார் சமர்ப்பித்த என் மீதான குற்றப்பத்திரிகையை வாசித்து விட்டு வழக்கை பின்னர் அழைப்பதாக அறிவித்தார்.
மீண்டும் சற்று நேரத்தின் பின் வழக்கு அழைக்கப்பட்டது.
அதன்போது எனது சார்பில் ஆறு சட்டத்தணிகள் ஆஜராகினர்.
பொலிஸ் தரப்பில் சார்ஜன் ஒருவர் நீதிபதிக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது, ‘கஞ்சா எங்கிருந்து கைப்பற்றப்பட்டது?’ என நீதிபதி வினவ, ‘வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது’ என சார்ஜன்ட் கூறினார்.
‘வீட்டில் வேறு யார் யார் இருந்தனர்?’ என நீதிபதி வினவியதற்கு, ‘அவரது மனைவி, பிள்ளைகள் எல்லோரும் இருந்தனர்’ என பொலிசார் பதிலளித்தனர்.
அதனைக் கேட்ட நீதிபதி, ‘அப்படியானால் ஏன் அவர்களை எல்லாம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யாமல் இவரை மாத்திரம் கைது செய்தீர்கள்?’  எனக் கேட்டதற்கு, பொலிசார் பதிலளிக்க முடியாமல் திணறினர்.
எனது தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர் ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்பதையும், அவரது பத்திரிகையில் கடந்த வாரத்திலும், அதற்கு முன்னதாகவும் வெளிவந்த செய்திகள் தொடர்பில் அரசியல் பழிவாங்கலாகவே இச்சோதனையும், போதை வஸ்து கைப்பற்றலும் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து பிணை வழங்குமாறு மன்றைக் கோரினர்.
இதற்கு பொலிஸ் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக நீதிபதி இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் என்னை விடுவித்து நவம்பர் 26ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், பொலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கும் பட்சத்தில் ஒத்துழைக்குமாறும்; கட்டளையிட்டார்.
இதையடுத்து இறைவனின் பேரருளால் எனது நண்பர் ஒருவரின் சரீரப் பிணையில் அன்று மாலையே நான் வீடு திரும்பினேன்.
இங்கே நான் முக்கியமாக எனது வாசகர்களுக்கு சில விடயங்களைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய கடப்பாடுள்ளது.
1.    கடந்த மாதம் 18ம் திகதி வெளிவந்த எனது ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமான ‘அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம்’ என்னும் தலைப்பிலான செய்தி மற்றும் புகைப்படங்களை வெளியிட்டமைக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த ‘கஞ்சா சோதனையும், கண்டு பிடிப்பும்’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன்.
2.    எனது வீட்டில் கண்டு பிடித்ததாக நாயுடன் வந்த ‘சீருடை’ நபர்களால் எனது முன்னிலையிலும், எனது குடும்பத்தார் மற்றும் அவ்விடத்தில் நின்ற அயலவர்கள், உறவினர்களின் முன்னாலும் காட்டப்பட்ட கஞ்சாப் பொதியானது, சுமார் ஒரு அடி நீளமானதும், சுமார் மூன்று அங்குல அளவு பருமனையும் கொண்டிருந்த நிலையில் (இப்படியான அளவுடைய பார்சலில் ஓரு கிலோ அல்லது ஒண்ணரைக் கிலோ கஞ்சா இருக்கும் எனக் கூறப்பட்டது),நீதிமன்றத்தில் 198 கிராம் கஞ்சாவையே கைப்பற்றியதாக பொலிசார் தெரவித்துள்ளனர். அப்படியானால் மீதிக் கஞ்சாவுக்கு என்ன நடந்தது?
3.    என்னை வீட்டிலிருந்து ஜீப்பில் அழைத்துச் செல்லும்போது, ‘அங்கிள்.. மேல் நீதிமன்றத்திற்குத்தான் உங்களைக் கொண்டு போவோம். ஆறு மாதங்களின் பிறகுதான் உங்களுக்கு பிணையில் வர முடியும்’ என்று ‘சீருடை’ நபர்கள் கூறினர்.
ஆனாலும் பொலிஸ் நிலையம் சென்ற பிறகு இவர்கள் அங்கும் இங்குமாக பல மணித்தியாலங்கள் நாயோட்டம், போயோட்டம் ஓடிய பின்னர் 198 கிராம் கஞ்சாவையே கைப்பற்றியதாக ஊடகங்களுக்கும் பொய்யான தகவல்களைக் கொடுத்து விட்டு நீதவான் நீதிமன்றத்திற்கே என்னைக் கொண்டு சென்றதும், அன்றே எனக்குப் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காததும் ஏன்?
4.    அரசியல் அதிகாரமுள்ள பேய்களின் பேச்சைக் கேட்டு நாயுடன் வீட்டுக்கு வந்து சேதனையிட்டு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் அளவுக்கு கனதியான கஞ்சாவைக் கண்டு பிடித்த ‘ரீ சேர்ட்’ நபர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கினைத் தாக்கல் செய்ய வராமல் தலைமறைவாகிப் போன நிலையில்,நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் விக்கித்திக்கி நின்ற சீருடை அணிந்த பொலிசார் எனது வழக்கினை ஆஜர்படுத்தியது ஏன்?
5.    119 பொலிசாருக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறி நாயுடன் வந்து சோதனை நடாத்திய ‘ரீ சேர்ட்’ நபர்கள், அந்த 119 பொலிசாருக்கு தகவல் கொடுத்த தகவலாளர் யார்? எந்தத் தொலைபேசி இலக்கத்திலிருந்து அவ்வாறு தகவல் கிடைத்தது என்பதை இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ள காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வெளிப்படுத்தியுள்ளாரா?
அந்தத் தொலைபேசிக்காரரை பொறுப்பதிகாரி இவ்வழக்கின் சாட்சியாக நிறுத்த முன்வருவாரா?
இவ்வாறான பல சந்தேகங்கள் எனக்கும், இந்த நாடகத்தைக் கேள்விப்பட்ட வாசகப் பெருமக்களான உங்களுக்கும் ஏற்பட்டிருப்பது இயற்கையேயாகும். இவற்றுக்கான விடைகளை விசாரணைகளின்போது நாம் கண்டறியலாம்.
மேலும், ‘காத்தான்குடிப் பிரதேசங்களில் நாயுடன் அலையும் இந்த ‘கஞ்சா பிடிக்கும்’ சீருடைக் கோஷ்டி, எந்த வீட்டுக்குச் செல்கின்றதோ அங்கே நிச்சயம் கஞ்சா கண்டு பிடிக்கப்படும்’ என்றதோர் அபிப்பிராயம் பரவலாக உள்ளது.
பல வருட காலமாக கஞ்சா வியாபாரம் செய்து வரும் மொத்த, சில்லறை வியாபாரிகள் தமது ‘சுதந்திர போதைப் பொருள் விற்பனைக்கான சட்டபூர்வமற்ற லைசன்ஸைப் பெறுவதற்காகச் மாதாந்தம் செலுத்துவதற்குப் பேசிப் பொருந்திக் கொண்ட கட்டணத்தை’ உரிய திகதியில் உரிய வழிகளில் செலுத்தத் தவறும்போது, இந்த ‘நாயுடன் அலைந்து கஞ்சா பிடிக்கும் ரீஷேர்ட் கோஷ்டி’அத்தகைய வியாபாரிகளின் வீடுகளுக்குச் சென்று கஞ்சாவுடனும், ‘கட்டணம் செலுத்தி அனுமதி பெறத் தவறிய’ உரிய நபருடனும் வெளியாகி அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி அபராதம் செலுத்த வைக்கும் என்ற நம்பிக்கையும் பரவலாக நிலவுகிறது.
எனது வீட்டுக்குப் பக்கத்தில் நீண்ட காலமாக சுதந்திர போதை வஸ்து வியாபாரியாக பலராலும் நன்கறியப்பட்ட ஒருவர், ஒரு மாதம் பொருந்திய தொகையைச் செலுத்தத் தவறியதால் சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டுக்கு அதிரடியாக வந்திறங்கிய இந்த ‘நாயுடன் அலைந்து கஞ்சா பிடிக்கும் ரீஷேர்ட் கோஷ்டி’ அவரது வீட்டிலிருந்தும் கஞ்சாவுடனும், ஆளுடனும் வெளியே வந்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி அபராதம் செலுத்த வைத்து தமது ‘வல்லமை’யை வெளிப்படுத்தியிருந்தது.
பல வருடகாலமாக பல இலட்சங்களை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட இந்த ‘கஞ்சாவால் உழைத்துப் பிழைக்கும்’ லைஸன்ஸ் கொடுப்பவர்கள், ஒரு மாதம் தான் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படிச் செய்து விட்டார்களே என நீதிமன்றத்தில் இருந்து மனச்சாட்சியுடன் பேசிய அவர், அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு வந்த அன்றே தனது நீண்ட கால போதை வஸ்து வியாபாரத்துக்கு முழுக்குப்போட்டு விட்டு தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இப்படி அபராதம் செலுத்திய பின் திருந்தி கஞ்சா வியாபாரத்தைக் கைவிட்ட இவரை இந்த ‘நாயுடன் அலைந்து கஞ்சா பிடிக்கும் ரீஷேர்ட் கோஷ்டி’விடுவதாக இல்லை.
மீணடும் அவரது வீட்டுக்கு இக்கோஷ்டி நாயுடன் சென்று கஞ்சாவையும், அவரையும் பிடித்துக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் தான் சுற்றவாளி என உண்மையைக் கூறி பிணையில் வெளிவந்து அந்த வழக்கைப் பேசுவதாகத் தீர்மானித்துள்ளார்.
இப்படியெல்லாம் கஞ்சாவின் பெயரால் நாயையும் வைத்துக் கொண்டு அட்டகாசம் செய்து உழைக்கும் ஒரு ரீசேட் கூட்டமும்….
தமது ஊழல் மோசடியான அராஜக அரசியலுக்கு அடிபணிந்து ஆதரவு தெரிவிக்காத நபர்களை அடக்கி மடக்க அந்த நாயுடன் அலையம் ரீசேட் கூட்டத்தைப் பயன்படுத்துகின்ற இன்னொரு கூட்டமும்….
நமது மண்ணின் மக்களை வாய் திறந்து சொல்ல முடியாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் உள்ளாக்கி வருகின்றது.
ஆனாலும் இந்த அதிகார அடக்குமுறை ஜம்பம் எல்லாம் சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும், மக்களின் நலன் பேணும் நல்லாட்சி நிர்வாகமொன்றுக்காகவும் இந்த மண்ணில் கடந்த எட்டு வருடங்களாக பாடுபட்டு வரும் ‘வார உரைகல்’பிரதம ஆசிரியரிடம் துளியளவும் எடுபடாது.
வல்ல இறைவனின் உதவியோடும், மக்களின் பிரார்த்தனைகளோடும் நான் எனது இறுதி மூச்சு வரை இந்த வாழ்ககையையும், வழக்கையும் எதிர்கொள்ள ஆயத்தமாகியுள்ளேன் என்பதை எனது வாசகப் பெருமக்களுக்கு பொறுப்புடன் அறியத்தருகின்றேன்.
இன்று (01.11.2013) வெள்ளிக்கிழமை நண்பகல் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எனது வீட்டுக்கு வந்து எங்கே கஞ்சா இருந்தது என்பதைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
இவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த பின்னர்தான் கஞ்சா இருந்த இடத்தையே பார்க்க வந்திருக்கின்றார்.
இனித்தான் அவர் ‘ரீஷேர்ட்’ கோஷ்டி கைப்பற்றிய கஞ்சா பார்சலில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 198 கிராம் கஞ்சா போக மீதிக் கஞ்சா எங்கே என்று தேடுவார் போலும்.
அரசியல் அதிகாரப் பேய்களின் பேச்சைக் கேட்டு நாயுடன் எனது வீட்டுக்கு வந்து அநியாய சோதனை நடாத்தி, அபாண்டமாக ‘கஞ்சா’ இருந்ததாகக் கூறி என்னையும், எனது குடும்பத்தையும் அவமானப்படுத்தி நீதிமன்றத்தில் ஏற்றிய அக்கிரமத்திற்கு முதல் தண்டனையாக, இன்று எனது வீட்டக்கு வந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சுவரில் பதித்திருந்த ஆணி குத்தி கையில் இரத்தம் சொட்டியது.
சிவில் சமூகத்தைப் பாதுகாக்கவென சீருடை அணிந்து கொண்டு தேசப்பற்றுடன்கூடிய விசுவாசப் பிரமாணத்துடன் பதவியைப் பொறுப்பேற்றுள்ள அவர், இவ்வூரிலுள்ள நாறிப்போன அரசியல்வாதிகளின் தொலைபேசிக் கட்டளைகளை இன்னமும் வேதக் கட்டளைகளாக ஏற்றுக் கொண்டு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்களையும், சர்வதேச மனித உரிமைச் சாசனங்களையும் அறவே மதியாமல் தூக்கி எறிந்து விட்டு எடுபிடியாகவும், கைக்கூலியாகவும் மாறி தனது பொறுப்பிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கட்டளைகளைப் பிரயோகித்து பொதுமக்களை வாட்டி வதைக்கும் இந்த ‘அரசாங்கப் பிரபாகரன்’ ஆட்சி முறைக்கு வருந்தி இரத்தக் கண்ணீர் வடிக்கப் போகும் நாளும் வெகுதூரத்தில் இல்லை என்பதையும் இவ்விடத்தில் நான் விஷேடமாகப் பதிவு செய்து வைக்கின்றேன்.
நேற்றுக் காலையில் எனது வீட்டுக்கு நாயுடன் வந்து கஞ்சா தேடிய ‘ரீஷேட்’ கோஷ்டியிலுள்ள ஒருவர், நான் பிணையில் வெளியாகி வீடு வந்து சேர்வதற்குள்ளாகவே அவசரமாக நேற்று மாலையில் மீண்டும் எனது வீட்டுக்கு தனியாக வந்து எனது மனைவியுடன் மிகப் பணிவாக சில விடயங்களைப் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்.
அரை டசின் நபர்கள் நாலு கால் நாயுடன் ஒன்றாக வந்து ஊரையே அலட்டாக்கி எனது வீட்டிலிருந்து கஞ்சா கைப்பற்றியதாக உலகமெல்லாம் செய்தியைப் பரப்பி அவமானப்படுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்து விட்டு, அதிலொருவர் மாத்திரம் அன்று மாலையே எனது வீட்டுக்கு தனியாக வந்து எனது மனைவியுடன் சாந்தமாகப் பேசி இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்க முனைவது என்பது எவ்வளவு சுயநலம்?
இன்ஷா அழ்ழாஹ், இந்த வழக்கும் தொடரும். எனது வாழ்வும் இறைவன் விதித்த நிமிடம் வரைக்கும் நிச்சயமாகத் தொடரும். எனது இறைவனைத் தவிர வேறு எந்தக் கொம்பனாலும் என் உயிரை ஒரு நிமிடம் முந்தச் செய்யவோ, பிந்தச் செய்யவோ, எனது மரணத்தின் வடிவத்தை அணுவும் மாற்றியமைக்கவோ முடியாது என்பதையும் இறுதியாகத் தெரிவித்துக் கொண்டு,
எனது இக்கைது தொடர்பான தகவலறிந்து நேரிலும், தொலைபேசி, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் மூலமாகவெல்லாம் எனக்கு ஆறுதல் கூறியவர்கள், எனக்காகப் பிரார்த்தித்தவர்கள், எனது கைதுக்கு கண்டனம் தெரிவித்தவர்கள், நீதிமன்றத்தில் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் எனக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள், இவ்வழக்கில் சாட்சியம் அளிப்பதற்கு தாமாக முன்வந்து பெயர்களைப் பதிவு செய்துள்ள அயலவர்கள், உறவினர்கள், வாசகர்கள் அனைவருக்கும், எனது கைது தொடர்பான செய்திகளை வெளியிட்ட (சாஜில் நியூஸ் இணையதளம் தவிர்ந்த – அது நான் 30ம் திகதி இரவு கைதாகி அன்றிரவே பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்பியிருந்தது-) இணையதளங்கள், அச்சு ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், பேஸ்புக் வலைப்பூங்கா மூலம் கருத்துக்களையும், பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்ட வாசக அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது உள்ளத்தின் அடியாழத்திலிருந்து ஊற்றெடுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
யா அழ்ழாஹ்!
என்னே உனது வல்லமை?! என்னே உனது ஆற்றல்?! ஒரு சிறிய கஞ்சா நாடகத்திற்காகவே என்மீது இத்தனை மக்களின் அன்பையும், கவலையையும் உருவாக்கி இது பச்சையான அப்பட்டமான அநியாயம் என்கிற உண்மையான உணர்வையும் நீ ஏற்படுத்தியுள்ளாய்! உன்னைத் துதிக்கின்றேன்!
நீயே எனது வாழ்வையும் மரணத்தையும் நிச்சயித்தவன். அதிலிருந்து நான் இம்மியும் நகர அவாக் கொள்ள மாட்டேன்.
என்மீது ஏற்பட்ட இந்தச் சிறிய அநியாயத்திற்காகவே இத்தனை மக்களின் மனச்சாட்சியை நீ தட்டியெழுப்பிப் பேச வைத்திருக்கின்றாய்.
இவ்வாறே இந்த மண்ணில், எமது மூஸ்லிம் சமூகத்தில் ஒரு நல்ல தலைமைத்துவ மாற்றத்தை நீ ஏற்படுத்த விரும்பி பிர்ஒளனையும், நம்றூதையும் மிஞ்சி சாகாவரம் பெற்றவனைப்போல் சர்வாதிகார ஆட்டம் போடும் இந்த அட்டகாச ஆட்சிக் கும்பல், என்னை நடுத்தெருவில் வைத்து அடித்துக் கொன்றால்தான் எஞ்சியுள்ள மக்களும் கண்விழிப்பார்கள் என நீ நாடியிருந்தால்.. அதற்கு தலை கொடுக்கவும் நான் தயாராகவே உள்ளேன் என்பதையும் இன்று உன்னளவில் இந்தச் செய்தியை வாசித்தறியும் அத்தனை மக்கள் முன் சாட்சியாக நான் ஆணையிட்டுப் பிரகடனம் செய்கின்றேன்!
எனது இலக்கு நீயன்றி வேறில்லை. அதற்கான ஒரே வழி நீதியும், நேர்மையுமான நல்வாழ்வும், நல்லாட்சியும்தான் என்பதிலும் சந்தேகமில்லை!!
-புவி றஹ்மதுழ்ழாஹ்-
(பிரதம ஆசிரியர், ‘வார உரைகல்’)

ad

ad