புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 நவ., 2013


தனது தில்லு முல்லுகளால் தூக்கில் தொங்கவிருக்கும்கைதிகளை நினைத்து அவரது மனசாட்சி போராடுகிறதா .ஐ பீ எஸ் அதிகாரி 
         ர்ம முடிச்சுகளும் புரியாத புதிர்களுமாய் தெளிவில்லாத பிம்பமாக இருபது ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கியிருக் கும், ராஜீவ் கொலை வழக்கில், ’’ பேரறிவாளன் எனும் மனிதனின் 22 வருட வாழ்க்கையைக் கொன்றுவிட் டோம்’’ என்று சொல்லாமல் சொல்லி, பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார், சி.பி.ஐ.யின் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. 


மக்களின் அதிகபட்சமான நம்பிக்கையான நீதித்துறை மீதும், காவல் பொறுப்புடைமை கொண்ட போலீஸ் துறை மீதுமுள்ள நம்பிக்கையில், கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த வாக்குமூலம். மரணதண்டனைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பால், கடந்த 24ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட, "உயிர்வலி' எனும் ஆவணப்படத்தில், ஒரு அதிர்ச்சி வாக்குமூலம் இடம்பெற்றுள்ளது.   

ஆனால், பத்தோடு பதினொன்றாகக் கடந்து போகக் கூடிய வாக்குமூலமா, இது? 

இது பற்றி முழுமையாகக் கேட்பதற்காக, ஒரிசாவில் வசித்துவரும் சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜனைத் தொலைபேசியில் பிடித்தோம். 

நாட்டையே உலுக்கி எடுத்துள்ள வாக்கு மூலம் அளித்த அவர், கனத்த அமைதி யோடுதான் வார்த்தைகளை எடுத்துவைத்தார். 

""ராஜீவ் கொலைவழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.)-ல் தமிழ் தெரிந்த எஸ்.பி. எனும் முறையில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி தரப்பட்டது. எனக்கு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெறும் பணி அளிக்கப்பட்டது. முருகன், சாந்தன், அறிவு மூன்று பேரின் வாக்கு மூலத்தையும் நான்தான் எழுதினேன். 

வாக்குமூலத்தில், ‘இலங்கையில் கரும்புலியாக இருந்ததாக, முருகன் சொன்னார். பத்ம நாபா கொலையைச் செய்யும் போது சிவராசனுடன் கூடவே இருந்ததாக சாந்தன் கூறினார்’’ என்றவரிடம்.. சிறிது நேரம் அமைதி...

பிறகு, யோசித்த வரைப் போல.. மெலிதாகப் பேசியவர், உடனே குரலைச் சரிசெய்தவராக, உறுதி யாகவும் கனமாகவும் தொடர்ந்தார். 

""பேரறிவாளனைப் பார்த்த போதே, அவரின் நடவடிக்கை, பேச்சு எல்லாம், சிறு பையனைப் போலதான் தெரிந்தது. அவரது வாக்குமூலமும் அப்படித்தான் இருந்தது. முருகன், சாந்தனைப் போல, புலிகளோடு இவருக்கு நேரடித் தொடர்பு இல்லை. அவர், 19 வயது பையன். தெளிவாக, அழகாகப் பேசும் சின்னப் பையனாக இருந்தார். அந்தக் காலத்தில், ஈழத்தமிழர் பிரச்சினையில் எல்லாரும் அவர்களுக்கு அனுதாபிகளாகத்தான் இருந்தார்கள். பேரறிவாளனும் சிவராசனுடன் அப்படித்தான் பழகி இருந்தார். சாந்தனுக்கும் முருகனுக்கும் ஏதோ ஒன்றைக் குறிவைத்துதான் சிவராசன் வந்திருக்கிறான் என்று தெரியும். 

யாழ்ப்பாணத்துக்கு சிவராசன் அனுப்பிய வயர்லெஸ் தகவலில், ராஜீவைக் கொலைசெய்யப் போகிறார்கள் என்பது அந்த இந்தியரு (நளினி என்பது சி.பி.ஐ. வாதம்)க்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியிருக்கிறான். அதையும்கூட, நளினியிடம் சிவராசன் சொன்னது, ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட மைதானத்தில்தான் என்று சாந்தனும் முருகனும் விசாரணையில் சொல்லியிருக்கிறார்கள். 



எந்த இடத்திலும், ராஜீவைக் கொலைசெய்ய நாங்கள் வந்தோம் என பேரறிவாளனிடம் யாரும் தெரிவிக்கவில்லை. சிவராசனுக்கு, இரண்டு வோல்ட் பவர் பேட்டரிகளை பேரறிவாளன் வாங்கிக்கொடுத்தான். "அதுதான், ராஜீவைக் கொலைசெய்யப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுக்குப் பயன்படும் என எனக்கு தெரியாது' என்று பேரறிவாளன் என்னிடம் சொல்லியிருந்தான். இதை நான் வாக்குமூலம் எழுதும்போது, இந்த பேட்டரி மூலம், இயக்கப்பட்ட, வெடிகுண்டைப் பயன்படுத்தி, ராஜீவ்காந்தியைக் கொலைசெய்தார்கள் எனப் பொதுவாக பதிவுசெய்து இருந்தேன். "எனக்குத் தெரியாது' என பேரறிவாளன் சொல்லியதை விட்டுவிட்டு, நான் வாக்குமூலத்தை எழுதி விட்டேன். வழக்கு விசாரணையில், "இதுபோல வாக்குமூலம் தரவில்லை' என பேரறிவாளன் சொந்த மனுவில் மறுத்தார். 

குறுக்குவிசாரணையில், தடா நீதிமன்றத்தில், என்னைக் குறுக்குவிசாரணை செய்த வழக்கறிஞர் துரைசாமி, சாட்சியங்களை வேண்டுமென்றே நான் மாற்றி எழுதிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். அவற்றை நான் மறுத்துவிட்டேன்''’என்று தியாகராஜன் சொன்னபோது, அவரின் குரல் அதிக சத்தம் கொண்டதாக இருந்தது. 

"இப்படியெல்லாம் செய்த உங்களுக்கு, இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு ஏன், இப்போது இதைச் சொல்லவேண்டும்?'


""நான் எழுதிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பேரறிவாளனுக்கு, உச்ச நீதிமன்றத்தில், மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 

தமிழனான நான், ஒரு வாக்குமூலத்தை மாற்றி எழுதியதால், ஒரு தமிழ் இளைஞனின் வாழ்க்கையையே நாசப்படுத்திவிட்டேன் என்கிற  மன உறுத்தல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. அதனால்தான், இப்போது உண்மையில் நடந்தது என்ன என்பதை வெளியுலகுக்குச் சொல்கிறேன்''’ என்று தியாகராஜன் சொன்னபோது, அவர் விட்ட பெருமூச்சு, தொலை பேசிக் கம்பி வழியாக, நம் காதுகளில் மோதியபடி இருந்தது. 

""உண்மையைச் சொன்னீர்கள், சரி? இதனால், பேரறிவாளனின் உயிரைக் காப்பாற்ற முடியுமா? 


கட்டாயம், மரணதண்டனை யில் இருந்து அவரை காப்பாற்ற முடியும். இதன் மூலம், பேரறிவாளன் மரண தண்டனையிலிருந்து தப்பித் தால், நான் மனநிம்மதியாக இருப்பேன்'' என்றவர், பேச்சை முடிக்க வந்தார். 

கடைசியாக நாம் அவரிடம்,

“22 ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாசம் அனுபவிக்கவிட்டது மட்டுமில் லாமல், மரணம் எப்போது வருமோ என ஒரு மனிதனை ஒவ்வொரு நாளும் துடிதுடிக்க வைத்ததற்கு, என்ன சொல்லப் போகிறீர்கள்?’’ எனக் கேட்டோம். 


கனத்த உணர்வோடு, ""தமிழ்நாட்டைத் தாண்டி, ஒரிசா மாநிலத்தின் ஒரு மூலையில் நாட் களைக் கழித்துக்கொண்டு இருக்கும் நான், அதற்காக, நக்கீரன் மூலமாக, பாவமன்னிப்பு கோருகிறேன்'' என்றார், தியாகராஜன். 

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம் கேட்டதற்கு, ""இதைத்தானே தம்பி 22 வருசமா நான் சொல்லிகிட்டு இருக்கேன். ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு,  ஜூன் 10 ஆம் தேதி என் வீட்டுக்கு வந்தாங்க. அங்கயிருந்து என் கணவரைக் கூப்பிட்டுகிட்டு, மறுநாள் திடலில் இருந்த என் பையனைக் கூட்டிகிட்டுப் போனாங்க. "நான் ஒன்றும் தப்பு பண்ணலையே, சொல்லிட்டு வந்துடறேன்' என்று சொல்லி விட்டுப் போனான். திடலில் அய்யா சிலைக்குக் கீழே இருந்துதான், அவனைக் கூட்டிகிட்டுப் போனாங்க. அதன் பிறகு, என் கண்ணிலேயே அவனைக் காட்டலை. முதல் தகவல் அறிக்கையில், 18ஆம் இடத்தில் இருந்தான். திடீர்னு 4-வது இடத்துக்கு. ஏன் இப்படினு கேட்டபோது, வாக்குமூலம்னு சொன்னாங்க. அவன் அது பொய்னு சொன்னான். இப்போ, அந்த எஸ்.பி.யே பொய்யாத்தான் வாக்குமூலத்தை எழுதினதாகச் சொல்றார். இதுக்குள்ள 23 வருசம் போயிடுச்சு. வெளியுலகம் என்னன்னு தெரியாம, என் பையன் கழிச்சுட்டான். தீர்ப்பு தந்த நீதிபதி தாமசும் தீர்ப்புக்கு எதிராக பேசுறார். இதனால் எனக்கு என்ன சந்தோஷம்னா, ராஜீவைக் கொன்னதான பழிபோயிடுச்சு. இனிமே என்ன செய்யணும்கிறதை சட்டப்படி செய்யணும்'' என்றார், மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த தாய்.  

மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ""பேரறிவாளனையும் ஓ.சுந்தரத்தையும் சி.பி.ஐ.  கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஓ.சுந்தரத்துக்கு ஆட்கொணர்வு மனுவைப் போட்டதால், அவரை விட்டுட்டாங்க. பொய் கேஸ்கூட போடமுடியலை.  ஆனா, அறிவுக்கு அப்படி மனு போட முடியாமப் போச்சு. மே 11ஆம் தேதி கைது செய்து, 18ஆம் தேதி வாக்குமூலம் வாங்கினாங்க. உயர்நீதிமன்ற நீதிபதி பிரதாப்சிங்கிடம், அனுமதி வாங்கி, 25ஆம் தேதி பேரறிவாளனைப் பார்க்கப் போனேன். அவன், மனநிலை பாதிக்கப்பட்டவனைப் போல, பீதியுடன் இருந்தான். இரண்டு வார்த்தைகள்தான் பேசினான். அவனை சகஜமாக்குவதற்காக, 20 நிமிடம் அவன் கூடவே இருந்தேன். 

வழக்கு விசாரணை வந்தபோது, வித்தியாசமாக வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தார்கள். இப்போது, ராஜீவ் கொலை வழக்கில் தியாகராஜனின் கருத்துகள் மூலம் புதிய உண்மைகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு செய்து, வழக்கிலிருந்து விடுவிக்கும் உரிமையைக் கோரலாம். அப்படி, புதிய வழக்கு போட்டால், 6 மாதங்களுக்குள் அந்த வழக்கை முடித்தும் விடலாம்'' என்று நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் கூறினார். 

இந்த வழக்கின் முதல் தீர்ப்புக்கு முன்பிருந்தே, இதில் நீதியான விசாரணை நடத்தப்படவில்லை; குற்றம்சாட்டப் பட்டவர்களைச் சித்ரவதை செய்தும் பொய்யாகவும் வாக்குமூலங்கள் ’உருவாக்கப்பட்டன’ என்று சம்பந்தப் பட்டவர்கள் தரப்பில், திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வந்தது, இன்னமும் சொல்லப்படுகிறது. ராஜீவ் கொலை தொடர்பான பல்நோக்குக் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையும் முடியவில்லை. இப்படியிருக்க, பேரறிவாளனுக்கு ஏற்பட்ட கதி, மற்றவர்களுக்கும் ஏற்பட்டு இருந்தால்.. அதற்கு என்ன இழப்பீடு, யாரால் தரமுடியும்? 

ad

ad