புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2013

முற்றம் குற்றம்.. யுத்தம்! நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்டவேண்டும் [ விகடன் ]
இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்து நிரந்தர அவமானத்தைத் தேடிக்கொண்டு​விட்டார் ஜெயலலிதா.
மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஈழத்தில் பல இடங்களில் மாவீரர் துயிலும் நினைவகங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பிரமாண்டமான நினைவகத்தை உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் அதன் தலைவர் பழ.நெடுமாறன் அமைத்தார். இதற்கான இடம் தேர்வுசெய்ததில் தொடங்கி பல்வேறு உதவிகளை ம.நடராஜன் செய்தார்.
இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட காலக்கட்டத்தில் சசிகலா குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்குமான மோதல் தொடங்கியது. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், இராவணன் ஆகியோர் கைதானார்கள். இதைத் தொடர்ந்து நடராஜனும் கைது செய்யப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட இடம், கட்டாயப்படுத்தி பலாத்காரமாக வாங்கப்பட்டது என்று சொல்லி நடராஜன் மீது வழக்குப் பாய்ந்தது. இதில் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். அதன் பிறகு முற்றம் அமைக்கும் பணிகளை நெடுமாறன் செய்துவந்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்தத் தடங்​கலும் இல்லை.அக்டோபர் 8-ம் தேதி திறப்புவிழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது. அதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்து அனுமதி வாங்கினார் நெடுமாறன்.
அரசு அப்பீலுக்குப் போகிறது என்று தெரிந்ததும் 6-ம் தேதியே அவசர அவசரமாக முற்றத்தை நெடுமாறன் திறந்தார். 8, 9, 10 ஆகிய மூன்று நாள் விழா நடந்தது. பத்து மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது, பிரபாகரன் படத்தை வைக்கக் கூடாது என்று வழக்குப் போட்டார்கள்.
இந்த நிலையில் கடந்த 13-ம் தேதி அதிகாலையில் முற்றத்தைச் சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கும் நெடுஞ்சாலைக்கும் நடுவே அமைக்கப்பட்ட பூங்கா, ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லி இடிக்க ஆரம்பித்தார்கள்.
இப்படி ஏதாவது நடக்கும் என்று உணர்ந்தவராக நெடுமாறன், அங்கேயே தங்கி இருந்தார். முற்றத்தைச் சுற்றிய போலீஸ் அதிகாரிகளிடம் சென்ற நெடுமாறன், ''எதற்காக இதனை இடிக்கிறீர்கள்?'' என்று கேட்டார். ''எங்களுக்கு எதுவும் தெரியாது. வருவாய்த் துறையினர் இடிக்கிறார்கள்.
நாங்கள் பாதுகாப்புக்குத்தான் வந்திருக்கிறோம்'' என்றார்கள். முள்வேலி கம்பிகள், தூண்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தார்கள் அதிகாரிகள். ஜே.சி.பி., புல்டோசரும் தயாராக இருந்தன. 'இது நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது’ என்னும் பலகையை நட்டுவிட்டு முற்றத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர், பெயர் பலகையை இடிக்க ஆரம்பித்தனர்.
உங்களிடம் அனுமதி வாங்கித்தான் பூங்கா அமைத்திருக்கிறோம்'' என்று நெடுமாறன் சொன்னார். அதனை அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தகவல் தெரிந்து ஆட்கள் கூடுவதற்குள் இடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு பரபரப்பாகச் செயல்பட்டனர் அதிகாரிகள்.
நெடுஞ்சாலைத் துறை ஆக்¢கிரமிப்பில் அமைக்கப்​பட்டுள்​ளதாகச் சொல்லி பூங்கா, முற்றத்தின் பெயர் பலகை, அலங்கார விளக்குகளை அகற்றினர். முள்வேலியை அமைத்து முற்றத்தின் முகப்பு வாயிலையே தடுத்துவிட்டனர். விளார் சாலை, தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
செய்தி பரவி பலரும் வர ஆரம்பித்தனர். 'எங்கள் மேல் புல்டோசரை ஏற்றுங்கள்’ என்று சொல்லி சட்டைகளை அவிழ்த்துக் காட்டினார்கள் அவர்கள். தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் ஆகியோர் அங்கேயே படுத்துக்கொண்டனர்.
நான் தீக்குளிப்பேன்’ என்று மார்பில் அடித்துக்கொண்டு கர்ஜித்தார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நஸ்ரத். ஆனால், முள்வேலியை அமைத்துவிட்டுத்தான் நெடுஞ்சாலைத் துறையினரும், காவல் துறையினரும் சென்றனர். பாதுகாப்புக்காக ஒரு சில போலீஸ்காரர்கள் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
அப்போது வெகுண்டு எழுந்த தமிழ் உணர்வாளர்கள் நெடுஞ்சாலைத் துறையினர் போட்டிருந்த முள்வேலிகளை துவம்சம் செய்துவிட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தத் தகவல் மேலதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர்.
உடனடியாக அடிக்க ஆரம்பித்தது போலீஸ் படை. அனைவரையும் அமைதியாக இருக்கும்படி நெடுமாறன் கேட்டுக்கொண்டார். அவர்களும் அமைதியாகவில்லை. போலீஸும் விடுவதாக இல்லை. நெடுமாறனைக் கைதுசெய்யச் சொல்லி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததைப்போல, அவரை போலீஸ் அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்தார். 'நானே வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போலீஸ் வாகனத்தில் ஏறினார் அவர்.
நெடுமாறனை அந்த இடத்தைவிட்டு அகற்றப்​பட்டதும், போலீஸ் அந்த இடத்தை கைப்பற்றியது. 'முற்றத்துக்குள் யாரும் போகக் கூடாது’ என்று அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்கள் மீது தடியடி நடத்தினர். கையில் மாட்டியவர்கள் அனைவரையும் கைதுசெய்து வேனில் ஏற்றினார்கள். 'முற்றத்தைப் போலீஸ் பூட்டிவிட்டார்கள்’ என்று தகவல் பரவியது.
இந்த தகவல்கள் மதுரையில் இருந்த வைகோவுக்குச் சொல்லப்பட்டது. உறவினர் ஒருவரது திருமண நிச்சயதார்த்த விழாவில் இருந்த அவர், உடனடியாக தஞ்சாவூர் புறப்பட்டார். மதுரையில் இருந்து வைகோ புறப்படுகிறார் என்று அறிந்ததும், அவரது கட்சியினர் வாகனங்களில் கிளம்பினார்கள். மதுரையில் இருந்து தஞ்சை வரையிலான ஊர்களின் ம.தி.மு.க. பிரமுகர்களும் கார்களில் அவரோடு சேர, சுமார் 50 வாகனங்களுடன் தஞ்சையை அவர் அடைந்தார்.
முற்றத்தைச் சுற்றி 500 போலீஸார் நிறுத்தப்பட்​டுள்ளனர். எனவே, நீங்கள் உள்ளே நுழைய முடியாது’ என்று அவருக்கு தகவல் போனது. 'என்ன ஆனாலும் சரி... அங்கே உள்ளே போய் ஆக வேண்டும்’ என்று திட்டமிட்ட வைகோ, அனைத்து வாகனங்களையும் பின்னால் விட்டு, அவரது காரை முன்னால் விட்டுப் போகச் சொல்லியிருக்கிறார்.
100 கி.மீ. வேகத்தில் வைகோ வாகனம் சீறி வர... முற்றத்தை மறித்துக்கொண்டு நின்ற போலீஸார் பயந்துபோய் விலகத் தொடங்கினர். வைகோ வாகனம் உள்ளே போனதும், அதைத் தொடர்ந்து அனைத்து கார்களும் நுழைந்தது. ஆக்கிரமித்ததாகச் சொல்லி நெடுஞ்சாலைத் துறை அமைத்திருந்த முள்வேலிக்குள் இவர்கள் அனைவரும் நுழைந்துவிட்டதை சற்றும் எதிர்பார்க்கவில்லை போலீஸார்.
நீங்கள் உள்ளே போகக் கூடாது’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் சொன்னார். 'இது எங்கள் சொத்து. நான் இங்கேதான் இருப்பேன்’ என்று சொல்லி உள்ளே செல்ல முயன்றார் வைகோ. போலீஸ் அதிகாரி ஒருவர் வைகோ கையைப் பிடித்து இழுக்க... அவரோடு வந்தவர்கள், போலீஸைத் தள்ள ஆரம்பித்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த வைகோ, தன்னுடைய ஆட்களை அமைதிப்படுத்தினார். 'அவர்கள் நம்மை அடிக்கட்டும். ஆனால், நாம் அமைதியாக உள்ளே போவோம்’ என்றார். இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையில், தனது கட்சிக்காரர்களை அமைதிப்படுத்தினார் வைகோ.
போலீஸாரும் அமைதியாகி பின்வாங்க... 'இந்தப் பாவம் ஜெயலலிதாவைச் சும்மாவிடாது. அங்கே மாவீரர் நினைவுச் சின்னங்களை ராஜபக்ஷே இடிக்கிறார். இங்கே ஜெயலலிதா இடிக்கிறார்’ என்று சொல்லியபடியே முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் போனார். அதைத் தொடர்ந்து அனைவரும் உள்ளே போனார்கள்.
மதியம் 12 முதல் 1 மணி வரை யுத்த களமாக இருந்தது அந்த இடம். மாலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவியுடன் வந்தார். பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது. நெடுஞ்சாலைத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை நாட ஆரம்பித்துள்ளது நெடுமாறன் தரப்பு.
நடராஜன் மீது கோபம் இருந்தால், அதனை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீதா காட்ட வேண்டும்?

ad

ad