புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 டிச., 2013



         சின்னஞ்சிறுசுகளுக்கே சர்வசாதாரணமாக சர்க்கரை நோய் எனும் காலத்தில், நோய் நொடி எதுவுமின்றி 100 வயதை நெருங்கிவர... உற்சாகமாக நடைபோட்டு வருகிறார்கள், நெல்லை கிராமங்களில்.

வானம் பார்த்த கரிசல் பூமியான கோவில்பட்டி அருகில் இருக்கும் கொளக்கட்டாகுறிச்சி, மைப்பாறை, சிப்பிபாறை, நடுவப்பட்டி, சீவன்பட்டி ஆகிய கிராமங்களில், சுறுசுறு முதியவர்களைப் பார்க்க, ஆர்வத்துடன் பயணமானோம். 

இந்தப் பகுதி, நெல்லை மாவட்டத்தில் இருந்தாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. 

கொளக்கட்டா குறிச்சி கிராமத்தில், தெம்பாக நடந்து வந்த 90 வயது கடந்த பெரியசாமி, வெண்கலக்குரலில் பேசி னார். 

""மறைக்கிறதுக்கு என் னய்யா இருக்கு, தட்டட்டிக் குள்ள (நான்கு சுவருக்குள்) நடக்கிறதச் சொல்றதில் கூச்சநாச்சம் என்னயிருக்கு? வெந்ததைத் தின்னு விதி வந்தாச் சாவுங்கிற காலத்தில வாழ்ந்தவங்கய்யா நாங்க, எதுலயும் ஒரு கட்டுப்பாடு ஒரு திட்டம் இருந்தது. இப்ப உள்ள வைத்திய வசதிகள், சோறுதண்ணி, போக்கு வரத்து வசதியெல்லாம் அப்போ இல்லை. என்னவோ நெஞ்சடைப்புனு சொல்றாங்க. அல்ப ஆயுசுல அந்த நோயில போயிடுதாம். எங்க காலத்தில இப்படி ஒன்றைக் கேள்விப்பட்டதே இல்லைய்யா. நொறுங்கத் தின்னா 100 வயசுனு சொல்வாங்க, அரிசிச் சோறப் பாத்ததே கெடையாது. சோளச்சோறையும், கம்பங் கஞ்சியையும் குடிச்சிட்டு வெவசாயக் காட்டுக்கு வேலைக்குப் போவோம். நாலு வண்டிக் குப்பை மண்ண நா ஒருத்தனே காட்டுல செதறுவேன். வெளியூர் போகணும்னா, எத்தன மைல்னாலும் நடைதான். அலுப்புத் தெரியாம இருக்க, பாடிக்கிட்டே போவோம். புளியஞ்சாதத்தப் பொட்டலம்கட்டி மருதை (மதுரை)க்கி நடந்தே போய்வந்திருக்கேன்யா. உழைப்பும் நடையும்தான் எங்க ஒடம்புல உரமேத்தியிருக்கு. 92 வயசு நடக்குது, எனக்கு. இன்னமும் உடம்புல ஊக்கமிருக்கு. கண்ணாடி போடலை, ஊசியில நூலைக் கோர்த்துருவேம். ஒங்களால முடியுமா? அள்ளி அள்ளி, சீனி கருப்பட்டி போட்ட காப்பிய சாப்புடுவேன்; எம்பல்லு ஒண்ணுகூட விழல பாருய்யா. எம் பெஞ்சாதிக்கு வயசு 86, களை பெறக்கப் போயிருக்கா. எங்களைப்போல சுத்துப்பட்டு கிராமத்திலயும் இருக்காவ.’’ 



ஒவ்வொரு காரியத்திலும் திட்டமிருக்கும். சடங்கு சம்புரதாயங் கள மீறமாட்டோம். வீட்டுக்கு வர்ற மருமவ ஆனாலும், கட்டிக் குடுக்குற பொண்ணுனாலும் பல காரியங்கள நோட்டம் போட்டுப் பாப் போம். "சுழியப் பாத்து மாட்டப்புடி, கோத்திரத்தப் பாத்துப் பெண்ணக் குடு'ங்றாப்புல, உழவு மாடு புடிக்கிறதிலயும், ஆணும், பொண்ணும் ஒண்ணா சேர்றதுலயும்கூட பொருத்தம் பாத்துத்தான் முடிப்போம்'' என்று கதையைப் போல விவரித்தவர்... தொடர்ந்தார். 

தண்ணிக் குடத்த அணைச்சுத் தூக்கி இடுப்புல சரியா வைச்சுக்கிட்டு நடக்குற பொண்ணு, கூட்டுக்குடும் பத்த அனுசரிச்சிக் கொண்டுபோவாங் கிறது அழுத்த மான நம்பிக்கை. தூக்கியிருக்குறாப்புல உள்ள தோளும், முன்பக்க மார்பும் பரந்து தூக்கலா எடுப்பா இருக்குற பொண்ணுக்குதான், லௌகீகத்தில மோகமிருக்கும்னு அப்படி ஒரு பொருத்தமும் பார்க்கிறதுண்டு. இந்த மாதிரி அங்கக் குறிகளையும் உடல் வாகையும், பையனோட உடன்பிறந்தவதான் (மணமகனின் சகோதரி) மத்தவுகளுக்குத் தெரியாமக் கவனிச்சுப் பாப்பா. 

பொண்ணுக்கு முன்பக்க லட்சணம் போல, ஆணுக்குப் பின்பக்க லட்சணம் இருக்கணும். புள்ளையக் கட்டிக்குடுக்குற தகப்பன், பாடுபட்டு அவளக் காலத்துக்கும் காப்பாத்து வானா, சண்டித்தனம் பண்ற பயலான்னு வெவசாயத்துக்கு உதவுற மம்பட்டி (மண்வெட்டி)யை வச்சே கண்டுபுடுச்சிடுவோம்.


மாப்பிள்ளைக்காரன் வயக்காட்டு வேலைக்கிப் போறத, ரகசியமா கவனிப்பாம். மம்பட்டிய பீச்சாங்கை (இடது) தோள்ல, ஒருமாதிரியா போட்டு மம்பட்டிக் கணையப் புடிக் கிறதயும், வாய்க்காவரப்பை கோளாறா வெட்டுறதயும் உத்து கவனிப்பாம். எல்லாம் சரியாயிருந்தா, உழைச்சி புள்ளயக் காப்பாத்துவாம்னு பொண்ணக் கட்டிக் குடுப்பாம். 

இப்படி உடல்வாகும் அங்க லட்சணக்குறியும் பொருத்தமும் பாத்து நாங்க முடிச்ச கலியாணம் தோத்ததில்ல. வீடு நெறையாப் புள்ளைகளப் பெத்து வளத்திருக்காவ''’என்று பெருமிதத்தோடு சொன்னார், மலரும் நினைவுகளில் மூழ்கியபடி. 

""ஒதுங்குறதுக்கும், ஒண்ணா இணைஞ்சிக்கிறதுக் கும் எடவசதி இல்லாத கூட்டுக் குடும்பத்தில, அந்தரங்கத்தப் பொத்திப்பொத்தி வச்சுக்கிட்டே பத்துப் பன்னெண்டு புள்ளைகளப் பெத்துருக்காவ''’எனக்கூறும் துரைச்சாமியாபுரம் செல்லையா, 90-ஐ தொட்டிருக்கிறார். 

""என்னய்யா கூச்சம். எங்க லௌகீகத்தச் சொல்லுதேம். கண்ணாடி போடாம பேப்பர வாசிச்சிருவேம். இப்பவரைக்கும் ஓங்கு தாங்கானிருக்கு எம் ஒடம்பு. எந்தக் கெட்ட சோலியும் கெடையாது. கஞ்சிக்கு விறகு பொறக்கிற துக்காக காட்டுக்குப் போயிருக்கா எம் பெஞ்சாதி. அவளுக்கு 85க்கு மேல ஆச்சு. ஆறு பொம்பளைக, அஞ்சு ஆம்புளைகன்னு பதினோரு மக்களப் பெத்தவுக நாங்க.

கல்யாணம் கட்டி வைச்சப்ப எனக்கு வயசு 13. அவ ளுக்கு 10 வயசுதாம்யா. அவ சமைஞ்சி 13-ம் நாள்ல கலியாணத்த வைச்சிட்டாவ. மூணு வருஷத்துக்கு அப்புறம் தான் மெல்லமெல்ல ’வெஷயம்’ தெரிஞ்சிச்சி. பெஞ்சாதியோட மதினிக் காரிதாம் அவகிட்ட, "இப்பிடி... இப்பிடி இருக் கணும். தோதுப்படறபடி அனுசரிச்சி ஒத்துப்போவ ணும்'னு பக்குவமாச் சொல்லிக் குடுக்கிறவ. நாளு, நட்சத்திரம், நேரம் சொல்லி ராவையில புதுப்பாய விரிச்சுக் குடுத்து, சூடா கருப்பட்டித் தண்ணியும் வைச்சுக் குடுத்திட்டுப் போவா. கூட்ட மாச் சேர்ந்து கொமைஞ்சிக்கிட்டிருக்குற வீடுகள்ல புருஷனும் பெஞ்சாதியும் நெனைச்ச நேரத்தில சேர்ந்துர முடியாது. வீடுகளும் தோதா இருக்காது. 


போகத்தில சில ஆம்புளைக விருப்பமில்லாம இருப்பாக. அப்போ, வாக்கப்பட்டவ, ’"எம்மேல நோக்கம் இல்லையா. எனக்கு எதுக்குத் தாலி கட்டுனீரூ? ஆத்தா வூட்டுக்குப் போறேம்'பா. "சரி... வாத்தா'னு வீட்டுக் குள்ள கூட்டிட்டுப் போயி ஒதுங்கிக்குவாக. அவளுக்கு புள்ள கரு புடுச்சவுடனே, நாங்க சேர்றத நிறுத்திக்கிருவோம். புள்ள பொறக்குறவரை அப்படித்தான். மீறி சேர்ந்தோம்னா, பொறக்குற புள்ளை கைகால் சூம்பி, சவலப் புள்ளையாப் பொறந்துரும். புள்ளை பெறந்து, ஒருவயசு கழிஞ்ச பிறகு சேர்ந்துக்குவம். விரதமா நெனைச்சு, வாழ்ந்தோம்; எல்லாம் மலைஏறிப் போச்சுய்யா... (ஊ)ம்...ம்... மறுபடியும் அந்தக்  காலம் வரவா போவுது?''’-ஏக்கப் பெருமூச்சு விட்டார் செல்லையா.

நவீன மருத்துவம் வளராத அந்தக் காலத்தில், டஜன் அளவுக்கு எப்படி பிள்ளைகளைப் பெற்றார்களோ? என்ற ஆச்சர்யத்துக்கு, பதில் சொன்னார், 90 வயது தாண்டிய பொன்னம்மாள். 

""இதுல மூடி வைக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல.  பொழுது மசங்குற நேரத்தில, பொம்புளைக எல்லாம் சேர்ந்து தட்டாங்கல் வெளையாடிகிட்டு இருக்கிறப்ப, எங்க வீட்டாளு எம்மேல நோக்கமா வருவாக. வெக்கத்த விட்டுச் சொல்ல முடியாதுல்ல. "கோழி, முட்டையப் போட நல்ல எடத்தப் பாத்து தேடி வருதும்மா'ன்னு ஜாடையாச் சொல்லுவாரு. "முட்டை போடுத கோழிக்குத்தான பிட்டிவலி தெரியும்'னு நா பதிலுக்கு சொல்லிக்கிட்டே, அவரோட போயிருவேம். நெறமாசம் புள்ளை பொறக்குற நேரத்தில வலியெடுக்கும். அப்ப கிராமத்தில இருக்குற வயசான மருத்துவச்சிய கூட்டியாருவோம். அடிவயித்துல குளுரக் குளுர வௌக்கெண்ணெயைத் தடவி, வைக்கோல தரைமேல மெத்தைபோல விரிச்சி, அதுமேல கோணிச் சாக்கைப் போட்டு, படுக்க வச்சிருவா. வைக்கோல் சூட்டுல, தாய்க்கு வலியில்லாம புள்ளை பெறந்துரும்யா. இப்படித்தாம்யா, நா, ஒம்போது புள்ளைகளப் பெத்துருக்கேம். புள்ளை பெத்த ரெண்டாம் நாளு, காட்டு வேலைக்கிப் போயிருவோம்யா. இப்ப, ஒலகம் எப்பிடி எப்பிடியோ மாறிப்போச்சுய்யா'' என்றபடி வாய்விட்டுச் சிரித்தார் பொன்னம்மாள் பாட்டி. 

இன்றைய இளம் தலை முறைக்கு, மூன்றாம் தலைமுறை முன்னவர்களான இவர்களின் காலத்திலிருந்து, தமிழ்ச் சமுதாயம் முன்னோக்கிப் போய் விட்டாலும், சுறுசுறுப்பான இந்த முதியவர்களிடம் கற்றுக்கொள்ள கனத்த விஷயம் இருக்கிறது என்பது மட்டும் நிதர் சனம்!

ad

ad